எங்கள் பள்ளி!

நெய்வேலியின் நிலைத்த பெருமைகளில் ஒன்றாகத் திகழ்கிறது, ‘அன்னை முல்லை பள்ளிகள்’.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சியில், கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக 2003-ல், முல்லை மழலையர் தொடக்கப் பள்ளி 12 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் முல்லை பள்ளியிலேயே படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பியதால், 2013-ல் அன்னை முல்லை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

இயற்கை எழிலுடன், சுகாதாரமான காற்றோட்ட வசதியுடன் பள்ளி அமைந்துள்ளது. கனிவாக கவனிக்கும் ஆசிரியர்களால், மாணவர்களுக்கு தற்கால கல்விமுறைக்கு ஏற்ப பாடங்கள் நடத்தப்படுகின்றன.

நவீன முறை அறிவியல் சோதனைக்கூடம், கணினிக்கூடம் ஆகியன மிகச் சிற்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேன்மேலும் வளர்க்க, சுமார் 5,000 புத்தகங்கள்கொண்ட நூல் நிலையம் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்துவதற்காக, அவர்களது அறிவியல் செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், ‘மரம் நடும் விழா’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

“எங்கள் மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சியும், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற கலைத்துறைப் பயிற்சிகளும், யோகா, கராத்தே, பாட்டு, பரதம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன’ என்கிறார்கள், பள்ளியின் முதல்வர்கள் சு.நாகராணி மற்றும் ஆர்.ஞானகலா.

‘‘சுற்றி உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்றுவருகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் அனைவரும் கல்விபெற வேண்டும் என்ற நோக்கில், குறைவான கல்விக் கட்டணத்தில் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறோம்’’ என்கிறார் தாளாளர் கோ.ஜெகன். இவர், அந்தப் பகுதியில் பேரிடர்களால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் உதவிப் பணிகளில் ஈடுபடும் சமூக அக்கறைகொண்டவர்.

“மாணவர்களுக்கு சுமை இல்லாத கல்வியைத் தருவதே எங்கள் முதன்மையான நோக்கம். அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். கிராமப்புறத்தில் இருந்து எளிமையான பொருளாதாரப் பின்னணியில் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் கல்விக்கான நுழைவு வாயிலாக இருக்கிறது எங்கள் பள்ளி. மிகவும் ஏழ்மையான குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதில் எங்களுக்கு  மனநிறைவு கிடைக்கிறது” என்கிறார் நிறுவனர் ஆர்.உமாபதி.

- கே.வேங்கட கிருஷ்ணன், இ.ஷீலாராணி, கே.கிரிஜா.


ள்ளி மைதானத்தில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் விவேகானந்தர் சிலை. இது,விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick