Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரீன் சல்யூட்!


ங்கள் வீட்டில் அழகான பூச்செடிகள் இருக்கின்றனவா? வீட்டுத் தோட்டத்தில் மா, கொய்யா போன்ற மரங்கள் இருக்கின்றனவா?

உங்கள் பள்ளியின் மரம் நடு விழாவில் சின்னச்சின்னதாகச் செடிகளை நட்டு இருக்கிறீர்களா?

அவற்றைச் செடியாகத்தானே வாங்கி வந்திருப்பார்கள். அந்தச் செடிகளைப்  பயிர் செய்யும் இடத்துக்கே உங்களை அழைத்துக்கொண்டுபோகிறோம். என்ன ரெடியா?

எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேகாக்கொல்லை. இதுதான் பல ஊர்களைப் பசுமையாக்கும் செடிகளை உருவாக்கும் ஊர். இந்த ஊரில் நுழைந்தவுடனே இரண்டு பக்கங்களிலும் நாற்றங்கால் மையங்கள் (நர்சரி) வரவேற்றன.

நாங்கள் சென்ற ‘ஜோதி நர்சரி’-யில் பரபரப்பாக வேலை நடந்துகொண்டிருந்தது. நாற்றங்காலில் இருக்கும் செடிகளை ட்ரே ஒன்றில் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு அக்கா செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

இந்த நர்சரி 20 வருடங்களாக இருக்கிறதாம்.  இதைக் ‘குடில் தொழில்’ என்று கூறுகிறார்கள். இதில், 20-க்கும் மேற்பட்ட வகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தச் செடிகளுக்கு இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தச் செடிகள், மண் சார்ந்த செம்மண் பகுதியில் வளர்க்கப்படுகின்றன.

செம்மண்ணில்தான் அதிகமான பூச்செடிகள் வளரும். இதில், மலர்ச் செடிகள் மற்றும் மரச் செடிகள் என இரண்டு வகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் குடிலில் பூச்செடிகள் 45 நாட்கள் வைக்கப்படும். பிறகு, குடிலில் இருந்து எடுத்து, 15 நாட்கள் வெளியே வைத்திருப்பார்கள். பிறகு, 60 நாட்கள் கழித்து விற்பனைக்கு அனுப்புவர்.

உரம் கலந்த மண்ணை பையில் நிரப்பிய பிறகு, செடிகளை நடுவார்கள். பூக்களுக்கு இரண்டு நிறம் வருவதை ஒட்டு ரகம் என்பார்கள். ஆனால், இவர்கள் அதைப் பயன்படுத்துவது இல்லை. ஏனெனில், குறைந்த விலையில் இந்தப் பூச்செடியை கேட்பதால், இந்த ரகச் செடியை உற்பத்திசெய்வது இல்லை.

சரி, நாங்களே தகவல்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இந்த நர்சரியை நடத்தும் பஞ்சமூர்த்தி அவர்களிடம் இன்னும் கொஞ்சம் கேட்போமா?

‘‘சார், இங்கே எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?’’

‘‘40 பேர் வேலை செய்றாங்க. பிளாஸ்டிக் பையில் மண்ணை நிரப்புவது, தண்ணீர் ஊற்றுவது எனப் பல வேலைகள் செய்வாங்க.’’

‘‘ஒரு நாளைக்கு எத்தனை பைகள் தயாராகும்?’’

‘‘ஒரு நாளைக்கு, சுமார் 2,000 பைகளைத் தயார்செய்துடுவோம். வேலைக்கு ஆட்கள் வருவதைப் பொறுத்து இது மாறும்.’’

‘‘வெளியிலேயே செடிகளை வளர்க்காமல் எதற்காக குடில் அமைக்கிறீங்க?’’

‘‘குடில் செடிகள், வெளியில் வளர்வதைவிட வேகமாக வளரும். செடிகள் மேல் சூரியனின் ஒளி நேரடியாகப் படாமல் இருக்கவும்  குடில்களைப் பயன்படுத்துறோம்.’’

‘‘அதோ, அங்கே இருக்கும் குண்டு மல்லிச் செடியின் வேர்கள் 15 நாளில் வந்துவிடும். மலைவேம்பு வேர்கள் 10 நாளில் வரும்.’’

‘‘இந்தத் தொழில் உங்களுக்கு லாபகரமாக இருக்கிறதா?’’

‘‘மழை, வெள்ளம் வந்தா நஷ்டம் ஏற்படும். மற்றபடி திருப்திகரமாத்தான் இருக்கு. நாட்டைப் பசுமையாக்கும் முயற்சியில் எங்களின் பங்களிப்பும் இருக்கிறது என்கிற மனத் திருப்தியே இந்தத் தொழிலை உற்சாகத்துடன் செய்யத் தூண்டுகிறது’’ எனப் புன்னகையுடன் சொன்னார் பஞ்சமூர்த்தி.

நாம் பார்க்கும் சின்னச்சின்ன செடிகளை வளர்ப்பதற்கு எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் பாருங்கள்.

நம் உலகைப் பசுமையாக மாற்றும் நர்சரிகளுக்கும், பணியாளர்களுக்கும் கிரீன் சல்யூட்! 

 

- பி.அழகு மீனாள், ஜெ.யோகலெட்சுமி, பி.மோகனசுந்தரம், ஆர்.சுரேஷ், எஸ்.கார்த்திக், ஆர்.ராமதாஸ், டி.குப்புசாமி, என்.தாரிணி,எஸ்.சுகன்யா, கே.கலை லெட்சுமி, என்.தர்ஷினி,எம்.சாருமதி, சூர்யா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
டாப் 10 ஆப்ஸ் 10
பசி போக்கும் அணையா அடுப்பு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close