துப்பறியும் சுட்டிகள்!

லகப் புகழ்பெற்ற துப்பறியும் கேரக்டர் ஷெர்லாக் ஹோம்ஸ், ஒரு கதையில் இறந்துவிடுவதாக அதன் ஆசிரியர் ‘ஆர்தர் கோனன் டயல்’ (Arthur Conan Doyle) எழுத, ரசிகர்கள் கொதித்தார்கள். அவர் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்க, மீண்டும் உயிர்பெற்றார் ஷெர்லாக். அந்த அளவுக்கு துப்பறியும் கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் மீது வெறிகொண்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் உண்டு. சுட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ‘டின் டின்’ போன்ற துப்பறியும் கதைகளும் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுள்ளன. சிறுவர்களுக்கான சிறந்த துப்பறியும் கதைகள் என உலகம் கொண்டாடும் கதைகளில் ஐந்து இங்கே...

மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான அமெரிக்க துப்பறிவாளன், ஜிக்ஸா ஜோன்ஸ்.  இவனோடு மில்லா யெ (Mila Yeh) என்கிற தோழியும் வருவாள். வகுப்பிலும் பள்ளியிலும் நடக்கும் க்யூட் சாகசங்களே கதை. ஜேம்ஸ் பிரில்லர் (James Preller) என்பவர்,  1998-ம் ஆண்டு எழுதி, இதுவரை 32 புத்தகங்கள் வந்துள்ளன.

இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, சுட்டிகளுக்காக எழுதியது 35 கதைகள். ஃபலூடா என அழைக்கப்படும் பிரதோஷ் மித்தர், தோப்ஷே எனும் சுட்டிப் பையன் துணையுடன் துப்பறிவார். சில கதைகளில், ஜடாயு எனப்படும்  ஒரு எழுத்தாளரும் வந்து, சிரிப்பை வாரி வழங்குவார். ஃபலூடாவை இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் எனச் சொல்லலாம். இவை, தமிழிலும் வெளியாகி உள்ளன.

‘ஸ்லுட்ஜ்’ என்ற தனது செல்ல நாயுடன் சேர்ந்து துப்பறியும் சுட்டி நிபுணர்தான் இந்த ‘நேட்’. ஆலிவர் என்கிற உறவுக்காரப் பெண், சூப்பர் ஹெக்ஸ், பிக் ஹெக்ஸ், லிட்டில் ஹெக்ஸ், பிளெய்ன் ஹெக்ஸ் என்கிற பூனைகளும், பாங்க் என்கிற  கோபக்கார நாயும் பல கதைகளில் வருவார்கள். 1972 தொடங்கி 2015 வரை 27 கதைகள் வந்துள்ளன. சில கதைகள், தொலைக்காட்சித் தொடர்களாகவும் கலக்கி இருக்கின்றன.

மனிதர்கள் மட்டும்தான் துப்பறிய வேண்டுமா என்கிற கேள்வியுடன், ஷெர்லாக் ஹோம்ஸ் பாதிப்பில், ஈவ் டைட்டஸ் (Eve Titus) என்னும் அமெரிக்க எழுத்தாளர் உருவாக்கிய ‘துப்பறியும் புலி’ இந்த எலியார். ஷெர்லாக் ஹோம்ஸ் வசிக்கும் ‘221B பேக்கர் தெரு’ வீட்டின் அடிப் பகுதியில்தான் ‘பேசில்’ என்கிற எலியும் வசிக்கிறது. ஷெர்லாக் கதைகளில் வரும் டாக்டர் வாட்சனுக்குப் பதில் டேவிட் டாவ்சன், ஷெர்லாக்கின் எதிரியான பேராசிரியர் மோரியாரிட்டிக்குப் பதில் பேராசிரியர் ரேட்டிகன், ஷெர்லாக் வீட்டின் உரிமையாளரான ஹட்சனுக்குப் பதில் ஜூட்சன் என, எலிகளின் உலகில் நடக்கும் செம ஜாலியான கதைகள்.

எதைப் பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும், நான்கு பக்கங்களுக்குப் பதில் சொல்லும் நபர்களை, ‘என்சைக்ளோபீடியா’ எனச் செல்லமாக அழைப்பது உண்டு. அப்படி எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருக்கும் சுட்டிப் பையன், லெரோய் பிரவுன் (Leroy Brown). தன்னுடைய அபார நினைவாற்றல் மூலம் குற்றங்களையும் சிக்கல்களையும் தீர்த்துவைப்பான். நாவல், ஸ்ட்ரிப் காமிக்ஸ், தொலைக்காட்சித் தொடர் எனப் பல வகைகளில் பின்னி எடுத்திருக்கிறான் இந்த பிரவுன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick