சாப்ளின் தந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

சார்லி சாப்ளின்...

இந்தப் பெயரைக் கேட்டாலே சிரிப்பு வரும். நீங்கள், சாப்ளினைப் பார்க்க ஆசைப்பட்டால், அவர் நடித்த படங்களின் சி.டி-யைத் தேடுவீர்கள். நாங்களோ, ரிதன்யாவைத் தேடுவோம். அவள்தான் எங்கள் பள்ளியின் செல்ல சாப்ளின். எங்கள் பள்ளியின் க்யூட் சாப்ளின் நடிக்கும் நாடகத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

ஒருநாள் சார்லி, தனது நண்பன் வீட்டுக்குச் செல்கிறார். ரொம்ப நேரமாக கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை. ‘வரச் சொன்ன நண்பன், வீட்டில் இல்லையே’ என சாப்ளினுக்கு பயங்கரக் கோபம். திரும்ப நினைத்தபோது, உள்ளே யாரோ பேசும் சத்தம் கேட்கிறது. கதவை மெள்ளத் தள்ளுகிறார். கதவு திறந்துகொள்கிறது. அங்கே, தனக்காக காத்திருக்கும் நண்பர்களைப் பார்த்ததும் கோபம் மறைந்து, மகிழ்ச்சியில் நடனம் ஆடுகிறார். நண்பர்களும் நடனத்தில் சேர்ந்துகொள்ள, அந்த இடம் திருவிழா போல மாறுகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக நடனமாட, அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்  மட்டும் சோகமாக துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார். சாப்ளின் அவளை அழைத்து, தங்களோடு நடனமாடவைக்கிறார்.

அந்த வீட்டின் செல்லப் பெண் கீர்த்திக்கு, படிப்பு தவிர எதிலும் ஆர்வம் இல்லை. புத்தகம், செய்தித்தாள்களோடு  அடுத்த அறைக்குச் சென்ற கீர்த்தியை, நடனம் ஆடிக்கொண்டிருந்த சாப்ளின் இடித்துவிடுகிறார். புத்தகங்கள் சிதற, கீர்த்தி தரையில் விழுந்துவிடுகிறாள். கோபமான கீர்த்தி, செய்தித்தாளைக் கசக்கி சாப்ளின் முகத்தில் எறிகிறாள். எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள். சாப்ளின் மெதுவாகத் தன் தொப்பியை எடுக்கிறார். அதற்குள் இருந்து ஒன்றை எடுத்துக்காட்டுகிறார். அது, அழகான பொம்மைக் கப்பல். எல்லோரும் தனக்கு வேண்டும் எனக் கேட்க, சாப்ளினோ... அதை கீர்த்தியிடம் கொடுக்கிறார். அவளும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு நடனத்தில் கலந்துகொள்கிறாள்.

நாடகத்தில் மட்டுமல்ல, எங்கள் பள்ளியில் ஒருவருக்கு ஒருவர் ‘கா’ விட்டுவிட்டால், இருவரையும் சேர்த்து பழம் விட வைப்பதில் சாப்ளின் கில்லாடி. எங்கள் பள்ளி சாப்ளினை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

- ஆர்.பி.ரித்தன்யா,டி.அஸ்மிதா, டி.தீபா,எம்.கே.தர்ஷினி,பி.தயாக்ஸ்ரீ,கே.கே.காவ்யா, செ.டி.சிவப்பிரியா,ஜி.மிருத்திகா,எஸ்.நமீதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick