அசத்தும் ஆலாங்கொம்பு பட்டு!

ட்டுப்புடவை என்றதும் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் என சில ஊர்கள் நினைவுக்கு வரும். எங்கள் பகுதியும் பட்டுக்கு சிறப்பு வாய்ந்ததுதான். ஆலாங்கொம்பு எனும் ஊருக்குச் சென்றோம். அந்த இடத்தின் பெயரே நெசவாளர் காலனி. இசை போல ஒலித்த தறி ஓசையைக் கேட்டவாறு அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். தங்கராஜ் என்பவர் வரவேற்றார். எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லியவாறே, அவரின் கைகளும் கால்களும் அழகான பட்டுப்புடவையை உருவாக்க  ஆரம்பித்தது.

“எத்தனை வருஷமா பட்டுப்புடவை நெய்யும் தொழிலில் இருக்கீங்க?”

“16 வயசுல இருந்தே நெசவு நெய்றேன்.  தாத்தாவிடமிருந்து என் அப்பாவும், அப்பாவிடமிருந்து நானும் கற்ற தொழில் இது.”

‘‘பட்டு நூலை எங்கே வாங்குவீங்க?’’

‘‘குஜராத்தில் இருக்கிற சூரத் நகரத்திலிருந்து  வாங்குகிறோம்.’’

“காஞ்சிபுரப் பட்டுக்கும் நீங்கள் நெய்யும் பட்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“காஞ்சிப் பட்டுக்கும் இந்தப் பட்டுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை. காஞ்சிப் பட்டில் புடவைகளைப் பதப்படுத்த மெழுகு போன்ற பசைகளை உபயோகிப்பாங்க. நாங்கள் தண்ணீரை மட்டும் உபயோகிப்போம். அங்கே நெய்யும் புடவையில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ஜரிகையைப் பயன்படுத்துவாங்க. நாங்க  சாதாரண ஜரிகையை உபயோகிப்போம். டிசைனிலும்  வித்தியாசம் இருக்கும்.”

“அதிகமாக எந்தெந்த நிறங்களை உபயோகிப்பீர்கள்?”

“பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களைப் பயன்படுத்துவோம்.”

“பட்டு வீணாகுமா?”

“பசையால் பதப்படுத்தப்படும் பட்டுதான் வீணாகும். நாங்கள் நெய்யும் புடவைகளுக்கான பட்டை, தண்ணீரில் பதப்படுத்துவோம். அதனால், அது வீணாக வாய்ப்பு இல்லை.’’

“பட்டு மூலம் புடவைகள் மட்டும்தான் நெய்வீர்களா, குழந்தைகளுக்கான ஆடைகளும் நெய்வீங்களா?”

“புடவைகள் மட்டுமே நெய்கின்றோம். வேறு எந்த ஆடைகளும் நெய்வது இல்லை.”

“ஒரு மாசத்துக்கு எத்தனை பட்டுச்சேலைகள் நெய்வீங்க?’’

“ஒரு மாசத்துக்கு 12 புடவைகள் வரை நெய்வோம். நெய்த பட்டுப்புடவைகளை கூட்டுறவு சங்கத்துக்குக் கொடுப்போம். அங்கே இருந்து  பல இடங்களுக்கு விற்பனைக்குப் போகும்.’’

- சே.ஹர்ஷனா, வ.கு.இலக்கியா, ர.கோ.பவித்ரா, செ.பா.சிவப்பிரியா, கோ.மிருத்திகா, ச.வருண், இரா.வெ.நித்திஷ், அ.நித்திஷ் குமார், மா.முகுந்த், ச.ஸ்ரீவர்தன், கே.எம்.குணா, ச.செளந்தர்யா, .கெளதம், க.சுகாஸ், ஆர்.என்.பரத் பாலாஜி, ஈ.செளபர்ணிகா.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick