Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நதியின் கோபம்!

சிக்கிம் மாநில நாடோடிக் கதைஸ்ரீபாலா, ஓவியங்கள்:மணிவண்ணன்

ரு காலத்தில் சிக்கிம் தனி நாடாக இருந்தது. அங்கு வாழ்ந்துவரும் ஆதி குடியினர், லெப்சா (Lepcha)  எனப்படுவார்கள்.  உலகின் மூன்றாவது உயரமான சிகரம், கஞ்சன்ஜங்கா. அந்தச் சொர்க்க பூமியை, பனிமலையில் இருந்து உருவாகி வரும் ‘ரங்கித்’ என்ற ஆண் நதியும் ‘ரொங்னுயி’ என்ற பெண் நதியும் வளமாக்கின. இரண்டும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும்.

ஒரு நாள் இரண்டும் வழக்கம் போல சந்தித்துக்கொண்டபோது, ‘‘ரங்கித், எவ்வளவு நாளைக்குத்தான் இந்த மலைப் பகுதியையே சுற்றிச்சுற்றி வருவது? அப்படியே கீழே இறங்கி, சமவெளிப் பகுதியைப் பார்த்தால் என்ன?” என்றது ரொங்னுயி.

‘‘எனக்கும் இதே ஆசைதான். புது இடங்களைப் பார்க்கலாம். ஆனால்,  வழி தெரியாதே’’ என்றது ரங்கித்.

பசோக் (Pazok) எனும் இடத்தில் இருவரும் சந்தித்து, பின்னர் சேர்ந்து செல்வது பற்றி முடிவுசெய்யலாம் எனப் பேசிக்கொண்டன. இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு கவுதாரிப் பறவை, ரங்கித் முன்னால் சென்றது.

‘‘என் பெயர் டுட் ஃபோ. இரையைத் தேடி அங்கும் இங்கும் திரிவதால், எனக்கு எல்லா வழிகளும் அத்துபடி. பசோக் வரை செல்ல நான் உதவுகிறேன்’’ என்றது.

அதேபோல ரொங்னுயிக்கு உதவுவதற்கு, ராஜநாகம் ஒன்று முன்வந்தது. ‘‘என் பெயர் பார்டில் பூ. இரை வேட்டைக்காக எங்கும் நெளிந்து வளைந்து போவதால், பசோக் வரையிலான பாதை எனக்கு  மனப்பாடமாகத் தெரியும்’’ என்றது.

வழிகாட்டிகள் கிடைத்த மகிழ்ச்சியில் இரண்டு நதிகளும் உற்சாகம் பெற்றன.

மறுநாள்... ரொங்னுயிக்கு வழிகாட்டியாக வந்த ராஜநாகம், சரசரவெனக் கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது. அதைப் பின்பற்றி வந்த ரொங்னுயி, வெகு சீக்கிரமே பசோக் பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஆனால், ரங்கித் நதிக்கு வழிகாட்டியாக வந்த கவுதாரிப் பறவை, நேராக வரவில்லை. காட்டுத் தரையில் கிடந்த விதைகள், பழங்கள், பூச்சிகளையெல்லாம் உண்பதற்காக இங்கும் அங்கும் சுற்றித்திரிந்தது. நதியும் பின்னாலே சென்றது. ஒரு வழியாக, ரங்கித் நதி தாமதமாக வந்து சேர்ந்தது.

அங்கே காத்திருந்த ரொங்னுயியைப் பார்த்து, ‘‘திஸ்தா நன்தோ? (ஏற்கெனவே வந்து விட்டாயா?)’’ என்று வியப்புடன் கேட்க, ரொங்னுயி பெருமிதமாகப் புன்னகைத்தது.

அன்று முதல் ரொங்னுயி நதியை, ‘திஸ்தா’ என்றே லெப்சா இனத்தவர் அழைக்க ஆரம்பித்தனர். அதுவே, ‘டீஸ்டா’ என்று மருவியது.

தான் முன்னதாக வந்து, நண்பிக்காகக் காத்திருந்து ஆச்சர்யப்படுத்த நினைத்த ரங்கித் நதிக்கு, அவமானம் ஆகிவிட்டது. ‘எல்லாம் இந்தக் கவுதாரியால் வந்தது. தீனி தின்பதற்காக அங்கே இங்கே திரிந்து என்னையும் சுற்றவைத்து... இனி எப்படி தோழியோடு சகஜமாகப் பேசுவது?’ என நினைத்தது.

அவமானத்தால் புழுங்கிய ரங்கித் மனதில் கோபம் அரக்கனாக நுழைந்தது. அந்த  நதியின் நீர்மட்டம் மெள்ள மெள்ள உயர ஆரம்பித்தது. திரும்பிய பக்கம் எல்லாம்  வெள்ளக்காடு. அந்தச் சொர்க்க பூமி வெள்ள பூமியாக மாறத் தொடங்கியது.

மக்களும் மற்ற ஜீவராசிகளும் நீரால் சூழப்பட்டனர். மலை உச்சியை நோக்கி ஓடினார்கள். ஆனால், அதுவும் பாதுகாப்பு இல்லை எனப் புரிய ஆரம்பித்தது.  கோபமான ரங்கித் நதியின் வெள்ளம், ‘டங்ரோங்’ என்ற அந்தச்  சிகரத்தையே மூழ்கடித்துவிடும் எனப் பயந்தனர்.

எல்லோருக்கும் நம்பிக்கை அற்றுப்போன அந்த நேரத்தில், ஓர் அதிசயம் நிகழ்ந்தது. டங்ரோங் சிகரத்தின் உச்சியில், ஒரு பறவையின் உருவம் தோன்றியது. அதுதான் லெப்சா மக்களின் தலைமைக் கடவுளான  கோம் ஃபோ (khom-Fo).

பறவை வடிவத்தில் தோன்றிய கோம் ஃபோ ‘‘ஏய் ரங்கித், ஆடியது போதும் அடங்கு’’ என்று கட்டளையிட்டார். லெப்சா மக்கள் அருந்தும் ‘சி’ (Chi) என்ற பானத்தின் சில துளிகளை ரங்கித் மேல் தெளிக்க, பொங்கிய பால் அடங்குவது போல ரங்கித்தும் அடங்கியது. வெள்ளம் வடியத் தொடங்க, உள்ளம் மகிழ்ந்தனர் லெப்சா மக்கள்.

தனது நண்பனிடம் வந்த ரொங்னுயி, ‘‘நண்பா, நீ தாமதமாக வந்தது எந்த விதத்திலும் அவமானமான விஷயம் கிடையாது. மக்களைக் காக்கும் உயிர்நாடிகளான நாமே மக்களின் உயிரை எடுப்பது தவறல்லவா? உன் கோபத்தை விடு. கடவுளிடம் உனக்காக நான் பேசுகிறேன்’’ என்றது.

தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்த ரங்கித், தனது கோபத்தால் ஏற்பட்டிருந்த  விளைவுகளைப் புரிந்து வருந்தியது. கடவுளிடமும் மன்னிப்பு கேட்டது. ‘‘இனி, இந்த மக்களின் மகிழ்ச்சியில் என்றும் துணை இருப்பேன். இந்தப் பகுதியை வளமாக்குவதில் என் தோழியுடன் சேர்ந்து இருப்பேன்’’ என்றது ரங்கித்.

ரொங்னுயி உடன் சேர்ந்து, சமவெளி நோக்கி உற்சாகமாகப் பயணம் மேற்கொண்டது.

இன்றும், சிக்கிம் மாநிலத்தின் மெல்லி (பழைய பெயர்: பசோக்) எனும் இடத்தில் இரண்டு நதிகளையும் பார்க்கலாம். பழுப்பு நிறத்தில் தடதடத்து ஓடிவருவது, ரொங்னுயி என்கிற டீஸ்டா நதி. இளம் பச்சை வண்ணத்தில், அமைதியாகத் தவழ்ந்து வருவது ரங்கித் நதி. லெப்சா இனத்தவரின் திருமண விழாக்களில், மணமகளை ரொங்னுயி ஆகப் பாவித்தும், மணமகனை ரங்கித்தாகப் பாவித்தும் பாடல்கள் பாடுவது உண்டு. இந்த இரண்டு நதிகள் போல மணமக்களின் வாழ்க்கை அமைந்திட வாழ்த்துவார்கள்.சிக்கிம் மாநிலமும் அழகு நதிகளும்...

சிக்கிம் (Sikkim) மாநிலத்தின் முக்கிய இரண்டு நதிகள், டீஸ்டா மற்றும் ரங்கித் (Teesta and Rangeet River). இவை இரண்டுமே உயரமான மலைப் பகுதியில் தோன்றி, தெற்கு நோக்கிப் பயணித்து, ‘மெல்லி’ என்ற இடத்தில் ஒன்று சேர்கின்றன.

டீஸ்டா நதியின் பிறப்பிடம் 5,300 மீட்டர் உயரத்தில், வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸோ லாமு (Tso Lhamu) என்கிற ஏரி. ரங்கித் நதியின் உற்பத்தி, மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் 4,600 மீட்டர் உயரம்கொண்ட ரதோங் பனிப்பாறை.

பனியில் உருவாகி, மலைகளில் இறங்கி, வெள்ளியை உருக்கியதுபோல அருவியாகப் பொழிந்து, கிளை ஆறுகளாக ஓடிவந்து, பெரிய டீஸ்டா நதியாகப் பெருக்கெடுக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் தவழ்ந்து, வங்கதேசத்தில் பிரம்மபுத்ரா நதியில் கலந்து, பின்னர் கங்கையில் சேர்ந்து, கடைசியாக வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.

சிக்கிம் மாநிலத்துக்கு சாலை வழியாகப் பயணிக்கும்போது, டீஸ்டா மற்றும் ரங்கித் நதிகளின் பல்வேறு  ‘சூ’-க்களின் (சிக்கிமீஸ் மற்றும் திபேத்திய மொழியில் ‘சூ’ (chu) என்றால் ஓடை என்று பொருள்.) ரம்மியமான ஓட்டத்தைப் பார்க்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
க்யூட் ஸ்டோரி
பட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close