Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தட்டித் தட்டி ஓர் உலக சாதனை!

ஸ்கேட்டிங் வித் ட்ரிப்ளிங்...

"ஜாலிக்காக ஆரம்பிச்ச விளையாட்டு, உலக சாதனையில் வந்து முடிஞ்சது எனக்கே ஆச்சர்யம்தான்’’ என வியப்பும் வெட்கமும் கலந்த குரலில் புன்னகைக்கிறார் முகேஷ்ராஜ்.

ஈரோடு மாவட்டம், வண்ணாங்காட்டுவலசு, இந்து இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படிக்கும் முகேஷ்ராஜ், ‘ஸ்கேட்டிங் வித் ட்ரிப்ளிங்’ விளையாட்டில் அசத்தி வருகிறார்.

‘‘மூணு வருஷத்துக்கு முன்னாடி, ‘யாரெல்லாம் ஸ்கேட்டிங் வித் ட்ரிப்ளிங் கேம்ஸுக்கு பேர் கொடுக்கறீங்க?’னு ஸ்கூல்ல கேட்டாங்க. அந்தப் பெயரைக் கேட்கவே வித்தியாசமா இருந்துச்சு. ‘அப்படினா என்ன கேம்?’னு கேட்டேன். ‘ஸ்கேட்டிங் பண்ணிக்கிட்டே இன்னொரு கேம் விளையாடுறது. இதுல வேர்ல்டு ரெக்கார்டு பண்ணலாம்’னு சொன்னாங்க. உடனே பேரைக் கொடுத்துட்டேன். அப்போ இருந்தே என் சாப்பாடு மாறிப்போச்சு. ஆசையா சாப்பிட்ட ஐஸ்க்ரீம், சாக்லேட்களை விட்டுட்டேன். முளை கட்டிய பயறு வகைகள், முட்டை, பால், பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட ஆரம்பிச்சேன். தீவிரமா பயிற்சி எடுத்தேன். அதுக்கான பரிசுதான் இது’’ என்கிறார் முகேஷ்ராஜ்.

ஜனவரி 25-ம் தேதி, ஸ்கேட்டிங் செய்தபடியே தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம், கூடைப்பந்தை 12,352 முறை பவுன்ஸ் செய்து சாதனை படைத்திருக்கிறார் முகேஷ்ராஜ்.

முகேஷ்ராஜின் இந்தச் சாதனையை, ‘எலைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி’, ‘இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி’, ‘தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் அங்கீகரித்துள்ளன.

‘‘இந்தப் போட்டியில் எனக்கு சவால்விட்டது  வெயில்தான். ஸ்கேட்டிங்கை ஸ்டார்ட் பண்ணினப்போ மணி பத்தரை. முடிக்கிறப்போ உச்சி வெயில். அதுக்கெல்லாம் அசந்துருவோமா? என் சாதனையைப் பார்க்க வந்த ஆடியன்ஸ்ல சூரியனும் ஒருத்தர்னு நினைச்சுக்கிட்டேன்’’ எனச் சிரிக்கிறார் முகேஷ்ராஜ்.

இவரது பயிற்சியாளர் சசிகலா, “சாதாரணமாக ஸ்கேட்டிங் செய்வதற்கும் பாலை பவுன்ஸ் செய்துகொண்டே ஸ்கேட்டிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஸ்கேட்டிங்கில் ட்ரிப்ளிங் செய்யும்போது அதிக வேகம் காட்டக் கூடாது. மீடியமான ஸ்பீடில் கன்ட்ரோலுடன் செய்யணும். அதுக்கு, உடம்பையும் மனசையும் கட்டுப்படுத்தும் பயிற்சி எடுக்கணும். கவனக்குவிப்பு, நினைவுத்திறன், எந்த ஒரு சூழலிலும் மீண்டு எழும் தன்னம்பிக்கை எனப் பல விஷயங்களை இந்த விளையாட்டு மூலம் பெறலாம்’’ என்கிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, 13 நாட்கள் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்கா சென்று வந்ததாகச் சொல்லும் முகேஷ்ராஜ், ‘‘எனக்கு அறிவியலிலும் ஆர்வம் அதிகம். நாசாவின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் நடந்த மூன்று நாள் புராஜெக்ட் கிளாஸில் கலந்துக்கிட்டேன். வருங்காலத்தில், சூப்பர் ஸ்போர்ட்ஸ்மேன் அண்டு சூப்பர் சயின்டிஸ்ட் என்பதுதான் என்னோட டார்கெட்’’ என்கிறார் புன்னகையோடு. 

- ச.ஆனந்தப்பிரியா படங்கள்: ரமேஷ் கந்தசாமி, சூ.நந்தினி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!
நியூஸ் ரவுண்ட்ஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close