கால்களால் இயக்கலாம் கணிப்பொறி!

சுட்டி விஞ்ஞானி

"கால்கள் மூலம் இயங்கும் இந்த மவுஸைக் கண்டுபிடிச்சதுக்குப் பின்னாடி, ஒரு சென்சிபிள் காரணம் இருக்கு” என நெகிழ்ச்சியான குரலில் ஆரம்பிக்கிறார் சப்ரின் ஆயிஷா.

திருப்பூர், லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி. இந்தச் சுட்டி விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புக்காக பரிசு வென்ற மகிழ்ச்சி, சப்ரின் முகத்தில் மிளிர்கிறது.

‘‘என் க்ளோஸ் ஃப்ரெண்டோட மாமா, சாஃப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணிட்டு இருந்தார். ஒரு விபத்தில், இரண்டு கைகளையும் இழந்துட்டார். இனி அவரால் கம்ப்யூட்டரில் வொர்க் பண்ண முடியாது என்பதால், வேலையில் இருந்து நீக்கிட்டாங்க. இதை என்னோட  ஃப்ரெண்டு சொன்னப்ப ரொம்ப வருத்தமா இருந்துச்சு.  இந்த மாதிரி கை இல்லாதவங்களும் மவுஸைப் பயன்படுத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்போ உருவானதுதான் இந்த செப்பல் மவுஸ். ஏற்கெனவே இந்த மாதிரி ஏதாவது இருக்குதானு கூகுளில் தேடிப் பார்த்தேன். அமெரிக்காவில் இதே மாதிரி ஒண்ணு இருக்கு. ஆனால், அதனோட விலை 149 டாலர். நான் கண்டுபிடிச்ச இந்த மவுஸை 400 ரூபாயில் தயாரிக்கலாம். இதை சிஸ்டத்தோடு இணைச்சுட்டு, வலது கால் பெருவிரலால் ஸ்க்ரோல் பண்ணி, கர்ஸரை மூவ் பண்ணணும். இடது கால் மூலமா, லெஃப்ட் க்ளிக்கும் ரைட் க்ளிக்கும் செய்யணும்’’ என்கிறார்.

சரி, கீபோர்டு பயன்பாட்டுக்கு என்ன செய்வது?

‘‘வாய்ஸ் ரெகக்னைஷன் (voice recognition) மூலம் டைப் செய்யலாம். மானிட்டரில்  கர்ஸர் மூலம் யூஸ் பண்ற கீபோர்டும் இப்போ கிடைக்குது. கூகுள் க்ரோமில், வாய்ஸ் ரெகக்னைஷனைத்தான் அதிகம்  பயன்படுத்தறாங்க. கை இல்லாதவங்க மட்டுமில்லாமல், அனைவருமே இதை யூஸ் பண்ணலாம். இனி வரும் காலத்தில், இந்த டெக்னாலஜி பெரிய வளர்ச்சி அடையும். அப்போது, இந்த கால் மூலம் இயங்கும் மவுஸின் பயன்பாடு அதிகரிக்கும் நம்பிக்கை இருக்கு” எனப் புன்னகைக்கிறார் சப்ரின் ஆயிஷா.

- சா.கவியரசன் அட்டை, படங்கள்: க.சத்தியமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick