கனவு ஆசிரியர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘‘எங்கள் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வருகிறார்கள். ‘படித்தே ஆக வேண்டும்’ என்ற அவர்களின் ஆர்வமே என்னை இயக்கும் உந்துசக்தி” என உற்சாகமாக ஆரம்பிக்கிறார் தனராஜ்.

சேலம் மாவட்டம், பொன்னாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ், இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வென்றவர்களில் ஒருவர். இவரின் சேவையைப் பாராட்டி, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குள் நுழைந்தால், அரசு நடுநிலைப் பள்ளிதானா என ஆச்சர்யம் ஏற்படுகிறது. பளிச் என மின்னும் வகுப்பறை, தூய்மையான கழிவறை, கம்ப்யூட்டரில் ஆர்வத்துடன்  தகவல்களைத் திரட்டும் மாணவிகள் என நகரின் பெரிய பள்ளிகளுக்குச் சவால் விடுகிறது.

‘‘இந்தப் பகுதியில் உள்ளவர்கள், கரும்பு வெட்டுதல் மற்றும் பிற விவசாயக் கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள். தங்கள் பிள்ளைகளையும் உதவிக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இதனால், பள்ளி இடை நிற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமானது. இவர்களுக்குக் கல்வி குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் முன்பு, அரசுப் பள்ளி மீது நம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என நினைத்தேன். அதனால், அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு பள்ளியின் கட்டமைப்பை மாற்றினேன். இது மட்டுமே நான் செய்தது. பிள்ளைகளின் ஆர்வமும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பும்தான் இந்தப் பள்ளியை இவ்வளவு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது’’ என்கிறார் அடக்கமாக.

‘‘எனக்கு ஸ்கூல் வரணும்னாலே ஜாலிதான்.  எங்க ஸ்கூல் லைப்ரரிதான் எனக்குப் பிடிச்ச இடம். நிறைய கதைப் புத்தகங்கள் இங்கே இருக்கு. மதிய உணவுக்குப் பிறகு லைப்ரரிக்கு வந்துருவேன்” என்கிறார் ஐந்தாம் வகுப்பு கெளசல்யா.

கல்விச் சுற்றுலாவுக்கு வருடம் தவறாமல் அழைத்துச் செல்வது, ஒவ்வொரு மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கேற்றவைப்பது என எந்த நேரமும் மாணவர்களின் முன்னேற்றச் சக்கரத்தை சற்றும் சளைக்காமல் சுழற்றுகிறார் தனராஜ்.

‘‘எங்கே பேச்சுப் போட்டி நடந்தாலும் எங்க தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு சொல்வார். அந்த ஊர்களுக்குப் போய், போட்டிகளில் கலந்துக்க ஹெல்ப் பண்ணுவார். நிறையப் போட்டிகளில் ஜெயிச்சிருக்கிறேன்.  இன்னும் எத்தனைப் போட்டிகள் வெச்சாலும் ஜெயிப்பேன்’’ என்கிறார் எட்டாம் வகுப்பு வைஷ்ணவி.

வைஷ்ணவியைப் போலவே, அங்கே இருக்கும் ஒவ்வொரு மாணவரின் முகத்திலும் ஆசிரியர் தனராஜ் ஏற்றிவைத்த நம்பிக்கை ஒளிர்கிறது.

- ச.ஆனந்தப்பிரியா படங்கள்: சூ.நந்தினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick