பள்ளிக்கு வந்த பொம்மைகள்!

“அன்றைக்கு ஸ்கூல் லீவு. சந்தோஷும் பிங்கியும் பக்கத்தில் இருக்கிற காட்டுக்குள் போனாங்க. அங்கே இருந்த விலங்குகள், பறவைகள் எல்லாம் அவங்களோடு பேச ஆரம்பிச்சது. கிளியிடம், ‘நீ எப்படி அழகா பேசறே?’னு சந்தோஷ் கேட்டான். அதற்கு கிளி, ‘நான் இந்தக் காட்டுல இருக்கிற சத்துள்ள பழங்களைச் சாப்பிடுவதே காரணம்’னு சொல்லிச்சு. குரங்கிடம், ‘நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பா, மரத்துக்கு மரம் தாவுறே?’னு பிங்கி கேட்டதுக்கு, ‘காய்களை நிறையச் சாப்பிடுவேன்’னு சொல்லிச்சு. இப்படி எல்லா விலங்குகளும் சொன்னதைக் கேட்ட சந்தோஷும் பிங்கியும், சத்துள்ள உணவைச்  சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்னு  புரிஞ்சுக்கிட்டாங்க.”

கெர்லின் மேரி என்பவர் நடத்திய பொம்மலாட்ட நிகழ்ச்சியில் சொன்ன கதைதான் இது. பிங்கியின் குரல், அவ்வளவு க்யூட். கிளி, குரங்கு, கரடி என ஒவ்வொன்றின் குரலிலும் வித்தியாசம் காட்டி அசத்தினார். 15 வருடங்களாக பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் எல்லோரையும் மகிழ்விக்கும் கெர்லின் மேரி, எங்களுக்காக பள்ளிக்கு வந்து ஸ்பெஷலாக நடத்திய நிகழ்ச்சிக்குப் பிறகு அவரோடு பேசினோம்.

‘‘என் அம்மா, பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துறவங்க. சின்ன வயசுலேயே  அம்மாவைப் பார்த்துக் கத்துக்கிட்டேன்.    மக்களுக்கு விழிப்புஉணர்வு ஊட்டும் விஷயங்களை, இதுபோன்ற நிகழ்ச்சி மூலம் சொல்லும்போது எளிதில் மனதில் பதியும். மது அருந்தாமை, புகையின்  கேடு உட்பட பல தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்துறேன்’’ என்றார்.

சேலத்தில் நரிக்குறவர்கள் வாழும் பகுதியில், சுகாதாரம் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை நடத்தினாராம். சில நாட்களுக்குப் பிறகு, ‘எங்கள் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறோம் வந்து பாருங்க’ என  அழைத்துக் காட்டியதை மகிழ்ச்சியுடன் சொன்னார் கெர்லின் மேரி.

‘‘கிராமப்புற மக்கள், ஆதரவற்றோர் இல்லம் எனப் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். பார்ப்பவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷமும், நிகழ்ச்சி முடிந்ததும் கிடைக்கும் கைதட்டலுமே எங்களுக்கான மிகப் பெரிய பரிசு. இப்போ சொன்ன கதையில் வந்த சந்தோஷும் பிங்கியும் நீங்கதான். இனி, உங்க உணவு ஆரோக்கியமாக இருக்குமா? பழங்களும் காய்களும் சாப்பிடுவீங்களா?’’ எனக் கேட்டார் கெர்லின் மேரி.

‘‘நிச்சயமா சாப்பிடுவோம்’’ என்றோம் குஷியாக.

- க.யோகேஷ், ஆ.யுகேஷ் அரவிந்த், ச.வி.ராதுகா, மு.கௌசல்யா, ச.நிவேதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick