பசங்க-2

Haiku

சினிமா பார்க்க நமக்குப் பிடிக்கும். அதுவும் நம்மைப் பற்றிய சினிமா என்றால், ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும் இல்லையா? ‘பசங்க- 2’ படம் அப்படித்தான்.

கவின், நாய்னா எனும் இரண்டு சுட்டிகள். செம  துறுதுறு. எப்பவும் சேட்டைதான். கவினின் அம்மா, அப்பா வேலைக்குப் போறவங்க. அவங்க வீட்டுக்கு வரும்போது  வீடே போர்க்களமா மாறியிருக்கும். நாய்னாவின் அம்மாவுக்கு அவளை அடக்கிவைப்பதே முழு நேர வேலை. இவங்க இரண்டு பேரும் வகுப்பில் உட்கார மாட்டாங்க. ஹோம்வொர்க் ஒழுங்கா செய்ய மாட்டாங்க. ஒரு வருஷத்தில், பல  பள்ளிகள் மாறுவாங்க. ஒரு கட்டத்தில், ஹாஸ்டலில் சேர்க்கப்படும் நம்ம பசங்க. அந்த ஹாஸ்டலையும் தெறிக்க விடுறாங்க.

இவங்களுக்கு, ஏ.டி.ஹெச்.டி (அட்டென்ஷன் டெஃபிஷிட் ஹைபராக்டிவிட்டி டிஸ்ஆர்டர்) பாதிப்பு இருக்கு என்று டாக்டர்கள் சொல்றாங்க. அப்போதுதான் சூர்யா வருகிறார். இவர் ஒரு மனநல மருத்துவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். அவங்க, வீட்டுச் சுவர் முழுக்கக் கிறுக்குவாங்க. ஆனாலும், சூர்யா அவங்களைத் திட்டுறதே இல்லை. கவினும் மற்றும் நாய்னாவும் ‘எங்க அம்மா, அப்பா, மட்டும் ஏன் திட்டுறாங்க’ என வருத்தப்படுறாங்க. சூர்யா, பெற்றோர்களைத் திருத்துகிறாரா... கவின் மற்றும் நாய்னாவைத் திருத்துகிறாரா என்பதுதான் கதை.

பள்ளியில் சேரும்போது நாய்னா சொல்லும் கதையில் அனுமன், ஸ்பைடர்மேன், ஹல்க், டோரா... எல்லோரும் வந்து சீதையைக் காப்பாற்றுவது சூப்பர் ஐடியா. கவின் பாடும் பாடலில், சோட்டா பீமாக வந்து அசத்துகிறான்.

கவின் மற்றும் நாய்னாவாக நிவேஷ், வைஷ்ணவி நடிப்பில் சூப்பர் கிரேடு வாங்குகிறார்கள். டிராகன்போல, ஆடிப்பாடி அசத்துகிறார் சூர்யா. நம்ம பசங்களுக்கு ஏற்ற பள்ளியை சூர்யா, அவரது மனைவி அமலா பால் அடையாளம் காட்டுறாங்க. பள்ளி மாணவர்களுக்கான டேலன்ட் போட்டியில் ஜெயிச்சு திறமையை நிரூபிக்கிறாங்க.

படத்தை கலகலப்பாகவும் நுணுக்கமாகவும்  இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். மெதுவாகக் கற்கும் குழந்தைகள் போல கற்றலின் ஆற்றல் அதிகம் உள்ளவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது ‘பசங்க- 2.’

- வி.எஸ்.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick