Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலிஸைப் பார்த்து பயப்படாதீர்கள்!

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள். சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் (superintendent of police) சுப்புலட்சுமி, தனது சிறந்த பணியின் மூலம் சேலம் மாநகரை சிறப்பாக வழி நடத்துவது பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். சேலத்தில் முதல் பெண் எஸ்பி என்ற சிறப்புப் பெற்ற அவரை, ‘என் பள்ளி... என் சுட்டி’க்காக சந்தித்தோம்...

‘‘உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்...’’

‘‘என் சொந்த ஊர் கடலூர். சகோதர, சகோதரிகள் ஐந்து பேர்கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தவள்.  2003-ல் நாகப்பட்டினத்தில் டிஎஸ்பியாக சேர்ந்து, 2013-ல் எஸ்பியாக பதவி உயர்வுபெற்றேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன், மெடிக்கலும்... மகள், பொறியியலும் படிக்கிறார்கள்.’’

‘‘பள்ளியில் படிக்கும்போது நீங்கள் வகுப்பில் தூங்கி, ஆசிரியரிடம் அடி வாங்கி இருக்கிறீர்களா?’’

(சிரித்துக்கொண்டே) ‘‘ஆரம்பமே வம்புக் கேள்வியா இருக்கே. ஸ்கூலில் மதியம் 2 டு 3 பலருக்கும் தூக்கம் சொக்கும் நேரம். அந்த நேரத்தில் நானும் தூங்கி இருக்கிறேன். ஆனால் என்கிட்டே ஒரு ஸ்பெஷல், கண்களை விழித்துக்கொண்டே தூங்குவேன். அதனால், ஆசிரியரிடம் மாட்டியதும் இல்லை. அடி வாங்கியதும் இல்லை.’’

‘‘உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் எது?’’

‘‘தமிழ். இப்போதெல்லாம் தமிழில் நூற்றுக்கு 100 போடுவது போல அப்போது போட மாட்டார்கள். எவ்வளவு சரியாக எழுதி இருந்தாலும், 10 மதிப்பெண்ணுக்கு எட்டுதான் போடுவார்கள். தமிழ் இலக்கணத்தில் எல்லோரும் இரண்டு அணிகள் படித்துவிட்டு வந்தால், நான் 20 அணிகள் படித்துச் செல்வேன். அந்த அளவுக்கு தமிழ்ப் பிடிக்கும். அடுத்து, வரலாறு. ஒவ்வொரு தலைவரைப் பற்றியும் ஆர்வமாகப் படிப்பேன்.’’

‘‘நாங்கள், போலீஸைக் கண்டாலே பயப்படுவோம். உங்கள் குழந்தைகளும் பயந்து இருக்காங்களா?’’

‘‘இல்லை. என் குழந்தைகள், என்னை அம்மாவாகத்தான் பார்த்தார்கள். நீங்களும் போலீஸைப் பார்த்துப் பயப்படத் தேவை இல்லை. தவறு செய்பவர்கள்தான் போலீஸைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள், உங்கள் பாதுகாப்புக்காக இருப்பவர்கள். நீங்கள் பயமின்றி எங்களை அணுகினால்தான், சரியான உதவிகளைச் செய்ய முடியும்.’’

 

‘‘நாங்கள் கொடுக்கும் புகார்களைக் காவல் நிலையம் ஏற்றுக்கொள்ளுமா?’’

‘‘12 வயதுக்கு மேற்பட்டவர்களின் புகார்களே பெரும்பாலும் பெறப்படுகின்றன. ஒரு தகவலைச்  சொல்லிவிட்டு, மீண்டும் மாற்றிச் சொல்லக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்கிறோம்.’’

‘‘பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?’’

‘‘பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதைத் தடுக்க, ‘குழந்தைகள் பாதுகாப்பு மீதான பாலியல் குற்றம்  2012’ என்ற கடுமையான சட்டம் இருக்கிறது. குழந்தைகளை, அவர்களின் அனுமதி இல்லாமல் தொட்டாலே, நடவடிக்கை எடுக்க முடியும். இது சம்பந்தமாக, பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்திவருகிறோம்.’’

‘‘குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?’’

‘‘இதற்காக, பொதுமக்களைச் சந்தித்து விழிப்புஉணர்வு முகாம்கள் நடத்துகிறோம். கல்லூரிகளில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்துகிறோம். பொதுமக்கள் கூடும் இடங்களில் ஃப்ளெக்ஸ் பேனர்களில் என்னுடைய செல்போன் நெம்பரை எழுதி வைத்திருக்கிறேன். எங்காவது குற்றங்கள் நடந்தால், உடனே போனில் கூப்பிட்டு தகவல் சொல்லலாம். உங்கள் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் நம்பரைக் கண்டிப்பாக எழுதி வைத்திருக்க வேண்டும். நீங்கள் இன்றே உங்கள் வீட்டுக்குச் சென்றதும், லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் நம்பரைக் கேட்டு, எழுதி வையுங்கள்.’’

‘‘உங்களுடைய ரோல் மாடல் யார்?’’

‘‘நான் இருக்கும் துறையில் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரண் மேடமும், ஏடிஜிபி-யாக இருந்த அர்ச்சனா ராமசுந்தரம் மேடமும் எனக்கு ரோல்மாடல்கள்.’’

‘‘நாங்களும் உங்களைப் போல போலீஸ் அதிகாரியாக வர சில டிப்ஸ்...’’

‘‘பயத்தை விடுங்கள். பொது அறிவுப் புத்தகங்களை ஆசையாகத் தொடுங்கள். புத்தகம், உங்களுக்கு  நண்பனாகிவிடும். உங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தை அக்கறையோடு உற்றுக் கவனியுங்கள். நீங்களும் காவல்துறையில் சாதனை படைக்கலாம்.’’

- ப.சக்தி சம்யுக்தா, அ.சரத், ஆர்.உதய் ஆகாஷ், ஆர்.வசந்த், எஸ்.நெல்சன், சிவகுருநாதன், லோகேஸ்வரன், எம்.குணஸ்ரீ, ஜெ.ஜெய வர்ஷினி, எஸ்.ஆர்த்தி, எஸ்.மஹாவித்யா, ஷம்யுதா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மனம் உறுதிகொள்!
குறும்புக்காரன் டைரி - 4
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close