எங்கள் பள்ளி!

‘‘நன்றாகப் படிக்கும் மாணவர்களாகத் தேர்ந்தெடுத்து பள்ளியில் சேர்த்து, அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களாக மாற்றுவது அல்ல எங்கள் நோக்கம். எங்கள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும் கல்வி, விளையாட்டு, கலைகள் என அனைத்திலும் சிறந்தவர்களாக மாற்றுவதே குறிக்கோள்’’ என்கிறார், எங்கள் பள்ளியின் முதல்வர் சியாமளா வெங்கடசுப்பு.

சென்னை, மேல் அயனம்பாக்கத்தில் இருக்கிறது எங்கள் ‘வேலம்மாள் வித்யாலயா’ பள்ளி. 2008-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பள்ளியில், எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 5,062 மாணவர்கள் படிக்கிறோம். 226 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தின் சேர்மன், எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களின் ஊக்குவிப்பால், நிறைய கலைகளில் சிறந்து விளங்கி, பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருப்பது, வேலம்மாள் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதன்மை முதல்வர் ஜெயந்தி ராஜகோபாலன்.

‘‘வேலம்மாள் வித்யாலயாவின் சிறப்பே, படிப்புடன் கூடுதல் கல்விசார் பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிப்பதுதான். தமிழ், ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை   வகுப்பில் நடத்துவதுபோலவே, இந்த வகுப்புகளிலும் நடத்துவார்கள். Extra Curricular Activities Year Long Programme (ECAYLP) என்கிற திட்டத்தின் மூலம், வருடம் முழுக்க நடைபெறும் இந்தக் கூடுதல் கல்விசார் பயிற்சிகளால் ஒவ்வொரு மாணவரின் தனித் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறோம்’’ என்கிறார், பள்ளியின் துணை முதல்வர் தசரத ராஜன்.

இசை, நடனம், விளையாட்டுக்கு தனித்தனியே வெவ்வேறு இடங்களைத் தேடிச் செல்லும்போது, மாணவர்களுக்குச் சோர்வு ஏற்படும். பெற்றோருக்கும் சிரமம். ஆனால், எங்கள் பள்ளியிலேயே எல்லா வகுப்புகளும் நடத்துவதால், எங்கள் நண்பர்களுடன் சேர்ந்தே ஆர்வமாகக் கற்கிறோம்.

எங்கள் பள்ளியிலேயே கிரிக்கெட் அகாடமி அமைத்து, பயிற்சி அளிக்கிறார்கள். யோகா, சதுரங்கத்தில் எங்கள் மாணவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். படிப்பிலும் அதிக கவனம் செலுத்த, ஸ்மார்ட் போர்ட் வகுப்புகள் அமைத்து சுலபமாகப் புரிந்துகொள்ளும்படி பாடங்கள் நடத்தப்படுகின்றன.

‘‘போட்டிகள் மிகுந்த உலகத்தை எதிர்கொள்ள, நம்மை நிமிடத்துக்கு நிமிடம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பல கலைகளைக் கற்று, மிகப் பெரிய உயரங்களை அடைய வேண்டும். அதோடு, நேர்மை மற்றும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் எங்கள் மாணவர்கள் இருக்க வேண்டும். நிச்சயம் இருப்பார்கள்’’ என்கிறார், முதல்வர் சியாமளா வெங்கடசுப்பு.

அவரது நம்பிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்!

- பெ.ரெ.லாவண்யா, கா.செ.கரிஷ்மா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick