சுட்டி ஸ்டார் நியூஸ்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பறவைச் சண்டை!

பால்டு ஈகிள், அமெரிக்காவின் சுதந்திர அடையாளச் சின்னமாகக்  கொண்டாடப்படுகிறது. இந்தக் கழுகு, தனது உணவுக்காக நடுவானில் கடல் பறவைகளிடம் சண்டையிட்ட அற்புதமான காட்சி ஒன்றைப் புகைப்பட கலைஞர் டேவிட் கேனலஸ் என்பவர் சமீபத்தில் படம்பிடித்தார். கழுகின் மேல் புறம் ஒரு கடல் பறவையும், கீழ்ப்புறம் ஒரு கடல் பறவையும் வெறித்தனமாகப் பறந்து பறந்து தாக்குதல் நடத்தின. ஆனால், கழுகின் சீற்றத்தின் முன் தாக்குப்பிடிக்க முடியுமா?

இந்தக் கடுமையான போரில், இரண்டு சீகல் பறவைகளும் தோற்று, உயிர் இழந்துவிட்டதாம். தற்போது, இந்தப் புகைப்படங்கள் உலகம் முழுக்க வைரலாகப் பரவிவருகிறது.

தண்ணீர் உறிஞ்சும் சாலை!

இங்கிலாந்தில் உள்ள டார்மாக் (TARMAC)  என்ற கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம், ‘டாப்மிக்ஸ் பெர்மிபல்’ எனும் புதிய வகை கான்கிரீட் கலவை ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தக் கலவையால் போடப்படும் சாலைகளில் 4,000 லிட்டர் தண்ணீரை ஊற்றினாலும், ஓரிரு நிமிடங்களில் பூமிக்குள் உறிஞ்சப்பட்டுவிடும். கான்கிரீட் சாலையின் அடிப்பகுதியில், பெரிய கூழாங்கற்களையும் கான்கிரீட் துண்டுகளையும் போடுகிறார்கள்.  அதனால், தண்ணீர் கீழ் நோக்கி உறிஞ்சப்பட்டு, அடிப்பகுதியை அடைந்து விடுகிறது. நடைபாதைகள், தெருக்கள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை இதன் மூலம் தவிர்க்கலாம் என்பதால்  இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோபோ ஹோட்டல்!

ஜப்பானில் உள்ள நாகசாகி அருகே  ஹென் நா (Henn-na Hotel) என்ற பெயரில் புதிதாக ஒரு ஹோட்டலைத் திறந்துள்ளார்கள். முழுக்க முழுக்க ரோபோக்களால் இயங்கும் உலகின் முதல் ஹோட்டல் இது.

வாடிக்கையாளர்களை வரவேற்பது, ஆர்டர் எடுப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என எல்லாமே ரோபோக்கள்தான். இங்கே, மின்சாதனங்களை உபயோகிக்க ஸ்விட்ச்சுகள் கிடையாது. ஒவ்வோர் அறையிலும் உள்ள ரோபோக்களிடம் சொன்னால், அவையே குறிப்பிட்ட சாதனத்தை இயக்கும்.

உப்புநீர் முதலை!

உலகத்திலேயே முதலைதான் அதிக வலிமையுடன் கடிக்கும் விலங்கு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் வாழும் உப்புநீர் முதலைகள் (Saltwater crocodiles), சிங்கம், புலியைவிட மூன்று மடங்கு அதிக வலிமையுடன் இரையைக் கடிக்கின்றன என்கிறார்கள். முதலையின் தாடையில் ஆயிரக்கணக்கான புலன் உறுப்புகள் இருக்கின்றன. தாடையில் உள்ள ஒவ்வொரு நரம்பும், மண்டை ஓட்டில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியே வருகிறது. இதனால், தாடையில் இருக்கும் நரம்புகளுக்குப் பாதுகாப்பும், அதிக வலிமையும் ஏற்படுகிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick