Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தன்னம்பிக்கை தந்த கடல் பூதம்!

“புள்ளைங்களா, உங்களுக்கு ஸ்கூல்னா பிடிக்கும்தானே? நல்லாப் படிப்பீங்களா?”

கோமாளி வேடத்தில் இருந்த, வேலு மாமா எனச் செல்லமாக அழைக்கப்படும் வேலு சரவணன் கேட்டதும், அத்தனை குழந்தைகளும் ஒரே குரலில், ‘நல்லாப் படிப்போம்’ என அதிரவைத்தார்கள்.

கடலூர் மாவட்டம், தியாகவல்லி நடுநிலைப் பள்ளி வளாகம் 600-க்கும் மேற்பட்ட மாணவக் குழந்தைகளால் மிகப் பெரிய பூந்தோட்டம் போல மாறியிருந்தது. கடந்த மாதம் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. மக்களின் வாழ்வாதாரங்களைச் சுருட்டிச் சென்ற மழை வெள்ளம், மாணவர்களையும் மனரீதியாகச் சுருட்டிவிட்டது. புத்தகங்களை இழந்து, பயத்திலும் மனஉளைச்சலிலும் இருந்தவர்களை உற்சாகப்படுத்தி, உதவிப் பொருட்கள் வழங்கத் திட்டமிட்டோம். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், தியாகவல்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சாமிக்கச்சிராயர்.

ஆனந்த விகடனும் ராகவா லாரன்ஸும் இணைந்து அளிக்கும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 31-ம் தேதி இரண்டு இடங்களில் இந்த நாடக நிகழ்ச்சி நடந்தது. அன்று காலை, பரவனாற்றுத் தீவுப் பகுதியைச் சுற்றி உள்ள திருச்சோபுரம், நஞ்சலிங்கப்பேட்டை, தம்மனம்பேட்டை, சித்திரப்பேட்டை, நொஞ்சிக்காடு, தியாகவல்லி ஆகிய கிராமங்களின் 7 அரசுப் பள்ளி  மாணவர்கள் திரண்டு இருந்தார்கள். தொடங்கியது குதூகலமான நாடகம்.

‘‘என் பேரு கோரி. எனக்கும் ஸ்கூலுக்குப் போய் படிக்கப் பிடிக்கும். கடலுக்குப் போய் மீன் பிடிக்கவும் ஆசை. ஆனா, என் அம்மா துணி துவைக்கப் போகச் சொல்றாங்க. இன்னிக்கு அவங்களுக்குத் தெரியாம மீன் பிடிக்கப்போறேன். நீங்களும் என்னோடு வர்றீங்களா?” எனக் கேட்டார்.

குழந்தைகளும் ‘கடல் பூதம்’ நாடகத்துக்குள் நுழைந்தார்கள். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் கோரிக்கு, வாய் கட்டப்பட்ட ஒரு சொம்பு கிடைக்கிறது. அதைத் திறந்ததும் ஒரு பூதம் வருகிறது. இங்கே இருக்கும் எல்லோரையும் சாப்பிட்டுவிடுவேன் எனப் பயமுறுத்துகிறது. தந்திரமாகப் பேசி, அதை மீண்டும் சொம்புக்குள் போகவைக்கிறார் கோரி.

கடலில் துடுப்புப் போடும்போது, ‘ஐலசா... ஐலசா’ எனக் குரல் கொடுப்பதும், கடல் பூதத்தை வேலு மாமாவோடு சேர்ந்து  கடுப்பேற்றுவதுமாக நாடகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சி கடலில் மிதந்தார்கள் குழந்தைகள். நாடகம் முடிந்ததும், ஒவ்வொரு மாணவருக்கும் பென்சில் பாக்ஸ், கிரயான், ஸ்கெட்ச் பென்கள், பலூன், சாக்லேட் அடங்கிய ஒரு செட் கொடுக்கப்பட்டது. டென்னிகாய்ட் (ரிங் பால்), கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால் என விளையாட்டுப் பொருட்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

பிற்பகல் பொன்னாங்குப்பம், சந்தைவெளிப்பேட்டை, இந்திரா நகர், வடக்குத்து ஆகிய ஊர்களைச் சேர்ந்த பள்ளிகளின் 740 மாணவர்கள், வடக்குத்து   எஸ்.கே.எஸ். திருமண மண்டபத்துக்கு வந்திருந்து,  வேலு சரவணனின் நாடகத்தால், உற்சாகம் பெற்றார்கள். அவர்களுக்கும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறோம் என அறிந்ததும் நம்மோடு இணைந்தார் மதுரை, கீழவாசல் ஈஸ்டர்ன் ஜவுளிக் கடை உரிமையாளர் கேசவன். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 1,713 ஆடைகளை அனுப்பிவைத்தார். அதையும் வழங்கினோம்.

‘‘மழையும் வெள்ளமும் ஊரையே மூழ்கடிச்சுடுச்சு. வீடு, புத்தகப் பை, சட்டைகள் எதுவும் மிஞ்சல. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டு இருக்கோம். இப்போ பார்த்த ‘கடல் பூதம்’ நாடகம், மனசுல இருந்த கொஞ்சம் கவலையையும் நீக்கிடுச்சு’’ எனக் குதூகலமாகச் சொன்னார் பிரசாந்த் என்ற மாணவர்.

‘‘ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் உதவிப் பொருட்கள் பெரிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கு” எனப் பூரிப்புடன் சொன்னார்கள் ஆசிரியர்கள்.
 

‘‘கஷ்டங்களைப் பார்த்து துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளணும்னு ‘கடல் பூதம்’ நாடகம் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். இனி எதுக்கும் கவலைப்பட மாட்டேன்” என்றார் எட்டாம் வகுப்பு பவித்ரா.

இதற்குத்தானே ஆசைப்பட்டோம்!

படங்கள்: எஸ்.தேவராஜன், அ.குரூஸ்தனம்


ழை பெய்தால் சுட்டிகளுக்கு செம ஜாலியாக இருக்கும். அம்மாவுக்குத் தெரியாமல் நனைவார்கள், கப்பல் விடுவார்கள். ஆனால், சென்னை அமிர்தா வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷா வேற மாதிரி.

சென்னை, ராமாபுரத்தில் இருக்கும் வர்ஷா, ‘‘மழை வெள்ளம் வந்தப்ப, எங்க வீட்டு மாடியில் இருந்தபடி மக்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்தேன். அதை மறக்கவே முடியாது. அவங்களுக்கு நாம ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் மதுவந்தி, ஆஷி, தியா, ஸஷாங்க் ஆகியோரோடு சேர்ந்து என்வலப் கவர்களில் நிறைய டிசைன்ஸ் வரைஞ்சேன். அதை, எங்க அப்பார்ட்மென்ட்டில் சேல்ஸ் பண்ணினோம். மொத்தம் 10,240 ரூபாய் கிடைச்சது’’ என்கிறார் வர்ஷா.

அந்தப் பணத்தை விகடன் அலுவலகத்துக்கு அனுப்பி, வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு நேபாளத்தில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி இருக்கிறார் வர்ஷா.  

படங்கள்: உசேன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
புதிரோடு விளையாடு!
சிரிப்போ சிரிப்பு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close