க்யூட் ஸ்டோரி - 1

இயற்கையின் குழந்தைகள்!

ர்த்தி, அன்பும் இரக்கமும்கொண்ட சிறுமி. அவளின் தங்கை கீர்த்தி, அதற்கு நேர்மாறானவள்.

ஆர்த்திக்கு இயற்கையின் மீது அவ்வளவு பிரியம். தன் வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து, விதவிதமான பூச்செடிகளை வளர்த்துவருகிறாள். அங்கே வரும் பறவைகள், அணில், வண்டுகளுக்குக் கூட செல்லப் பெயர் வைத்து அழைப்பாள்.

கீர்த்திக்கு இது எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ‘‘செடி வளர்க்கிறேன், கொடி வளர்க்கிறேன் என நீ செய்யும் காரியத்தால், பூச்சிகள்தான் வருகின்றன’’ எனச் சிடுசிடுப்பாள்.

ஒரு நாள், ஆர்த்தி தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். கீர்த்தியும் அங்கே இருந்தாள். அப்போது, ரோஜா முள்ளில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி சிக்கிக்கொண்டு படபடத்தது.

அந்த வண்ணத்துப்பூச்சியை பக்குவமாகப் பிடித்த ஆர்த்தி, மெதுவாக விடுவித்து, பறக்கவிட்டாள்.

இதைப் பார்த்த கீர்த்தி, ‘‘சரியான முட்டாள். இவ்வளவு அழகான வண்ணத்துப்பூச்சியை விளையாட வைத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டாயே’’ என்றாள்.

‘‘இந்த உலகில் உள்ள ஒவ்வோர் உயிரினமும் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டவை. நமது சந்தோஷத்துக்காக அவற்றை அடைத்துவைப்பது சரியல்ல” என்றாள் ஆர்த்தி.

மறுநாள்... இருவரும் தோட்டத்துக்கு வந்தபோது, ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கே ஒரு சிறுமி நின்றிருந்தாள். கண்ணைக் கவரும் அழகான ஆடையில் புன்னகைத்தாள்.

‘‘யார் நீ... எங்கள் தோட்டத்தில் நீ எப்படி வந்தாய்?” எனக் கேட்டாள் கீர்த்தி.

‘‘உன் தோட்டமா? உனக்குத்தான் இந்தத் தோட்டமே பிடிக்காதே. ஆர்த்திதான் எல்லாச் செடிகளையும் வளர்க்கிறாள். நேற்று, என் குழந்தைகளில் ஒன்றான வண்ணத்துப்பூச்சியைக் காப்பாற்றினாள். அதற்கு நன்றி சொல்லவே வந்தேன்” என்றாள் அந்தச் சிறுமி.

இதைக் கேட்ட ஆர்த்தி, ‘‘இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.

‘ஆர்த்தி, நான்தான் இயற்கை தேவதை. பூக்கள், பூச்சிகள், புழுக்கள் எல்லாம் எனது குழந்தைகளே. உன்னைப் போன்ற அன்பான மனிதர்களை நம்பியே அவற்றை நான் படைக்கிறேன். நேற்று நீ செய்த செயலுக்கு மிக்க நன்றி’’ என்றாள்.

இதைக் கேட்ட கீர்த்தி, ‘நேற்று, நான் பேசியதையும் இந்தத் தேவதை தெரிந்துகொண்டு இருக்குமே. என்னை ஏதாவது செய்யுமோ?’ எனப்  பயத்துடன் பார்த்தாள்.

கீர்த்தியின் மனதைப் படித்தது போல அவள் பக்கம் திரும்பிய தேவதை, ‘‘வருத்தப்படாதே கீர்த்தி. நீ விவரம் தெரியாமல்தான் அப்படி நடந்துகொண்டாய். இனியாவது இயற்கையையும் மற்ற உயிரினங்களையும் நேசிக்கப் பழகு. ஏனெனில், எவ்வளவு அறிவியல் தொழில்நுட்பம் இருந்தாலும் இயற்கைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை’’ எனச் சொல்லிவிட்டு காற்றில் கலந்தாள் இயற்கை தேவதை.

‘‘ஆர்த்தி, அந்தத் தண்ணீர் ஜாடியை இப்படி கொடு. இனி, நீ ஒரு நாள், நான் ஒரு நாள் என செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கவனித்துக்கொள்வோம்” என்றாள் கீர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick