பேய்கள் ஜாக்கிரதை பிரகதீஷ்!

-சபாஷ் சுட்டி இயக்குநர்

‘‘நம் தமிழ் சினிமாவில் இது பேய் சீசன் ஆச்சே. அதான், பேய் இல்லைங்கிறதையும், விளை நிலங்களைக் காப்பாற்றணும், ஆக்கிரமிப்புகளை அகற்றணும்கிற விஷயத்தை பேய் மூலமே சொல்லி இருக்கேன்” எனச் சிரிக்கிறார் பிரகதீஷ்.

தஞ்சாவூர்,  டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பிரகி என்கிற பிரகதீஷ், சுட்டி குறும்பட இயக்குநர். இவரது ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்ற குறும் படம், அனைவரையும் கவர்ந்துள்ளது.

‘‘ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது, கும்பகோணத்துக்கு டூர் போயிருந்தோம். அங்கே சில அண்ணாக்கள் கேமரா  வெச்சு படம் பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க. கேட்டதுக்கு, ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறதாச் சொன்னாங்க. அதை கவனிச்சுப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்ததும், ஒரு கதை ரெடி பண்ணினேன். என் தம்பியை வெச்சு செல்போனில் எடுத்து, அப்பாகிட்டே காமிச்சேன். அவர், தஞ்சாவூரில் ‘பிம்பம் ஸ்டுடியோஸ்’ வெச்சிருக்கிற ஷாகுல் அங்கிள்கிட்டே கூட்டிட்டுப் போனார். அவர்கிட்டே கேமரா, எடிட்டிங் பற்றி  கத்துக்கிட்டு, படங்களை எடுக்க ஆரம்பிச்சேன்’’ என அசரவைக்கிறார் பிரகதீஷ்.

பிரகதீஷ் எடுத்திருக்கும் ‘பேய்கள் ஜாக்கிரதை’ குறும்படத்தில், ஒரு வயல்வெளிப் பகுதியை வாங்கி,  அடுக்குமாடி கட்டும் திட்டத்தோடு அந்த இடத்தைப் பார்க்க ஒருவர் வருகிறார். அங்கே ஒரு சிறுவன், தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறான். வேறு சில விநோதமான விஷயங்களும் நடக்கின்றன. பயந்துபோன அவர் ஊருக்குள் விசாரிக்க, அங்கே பேய் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஓட்டம் பிடிக்கிறார் வந்தவர். அது, ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் ஒரு தாத்தாவின் இடம். அதைக் காப்பாற்ற, இரண்டு சிறுவர்கள் சேர்ந்து செய்யும் நாடகமே அது. நகைச்சுவையுடன் தொடங்கி, மனதைத் தொடும் ‘நச்’ செய்திகளுடன் முடிகிறது இந்த 8 நிமிடக் குறும்படம்.

பாரதியாரின் சீடரான அமரர் திரிலோக சீதாராமன் பற்றி, இயக்குநர் ரவிசுப்ரமணியம் இயக்கிய குறும்படத்தில் சிறுவயதுக் கதாபாத்திரம், ஈழ இயக்குநர் சோமித்ரனின் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார் பிரகதீஷ்.

“சூர்யா அங்கிள் என்னோட ஃபேவரிட் ஹீரோ.  வருங்காலத்தில் பெரிய டைரக்டராகி, அவரை வெச்சுப் படம் எடுப்பேன்” எனப் புன்னகைக்கிறார் சுட்டி இயக்குநர்.

- ச.அருண் படங்கள்: கே.குணசீலன், ம.அரவிந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick