மாற்றம் கொடுத்த சூப்பர் ஹீரோக்கள்!

‘‘ஒவ்வொரு குழந்தையும் நினைத்தால், தங்களைச் சுற்றி பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். அப்படி மாற்றத்தை உருவாக்கிய சூப்பர் ஹீரோக்கள் இவர்கள்’’ எனப் புன்னகையுடன் சொல்கிறார் ஸ்ரீதேவி.

ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் நடைபெறும் போட்டி, ‘ஐ கேன் - டிசைன் ஃபார் சேஞ்ச்’. தாங்கள் படிக்கும் சூழலில், தங்களைச் சுற்றி புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் பள்ளிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் போட்டி இது.

டிசம்பர் 5, 6-ம் தேதிகளில் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 20,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள், முதல் 20 இடங்களைப் பிடித்து பரிசுகளை வென்றிருக்கின்றன.

சென்னை, வில்லிவாக்கம் ஒன்றிய ஐயப்பன்  நகர் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

“ஒரு கலந்தாய்வுக்குச் சென்றிருந்தபோது ‘ஐ கேன்’ பற்றித் தெரியவந்தது. என் பள்ளி மாணவர்களிடம் சொன்னேன். அதில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சொன்னதைச் செயல்படுத்தினோம்’’    என்கிறார் ஸ்ரீதேவி.

‘‘எங்கள் பள்ளியின் முகப்பில், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிடுவாங்க. அந்தக் குப்பைகளை வெச்சே பள்ளியின் பிரச்னைகளைத் தீர்த்தோம். மக்கும் குப்பை, மக்கா குப்பைனு பிரிச்சோம். மக்கும் குப்பைகளைக்கொண்டு உரம் தயாரிச்சு, தோட்டம் போட்டோம். பாட்டில்களில் அழகான தொங்கும் தோட்டம் உருவாக்கினோம். காலி பாட்டில்களில் மண்ணை அடைச்சு, தரையில் உட்கார்ந்து எழுதுற மாதிரி டெஸ்க்குகளைத் தயாரிச்சோம்’’ என ஆச்சர்யங்களை அடுக்குகிறார்கள் மாணவர்கள்.

இவை அனைத்தையும் மூன்று நிமிடங்கள் ஓடும் ஆவணப் படமாகவும், போட்டிக்கு அனுப்பி, தேசிய அளவில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

இதே போட்டியில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டலைப் பகுதி பஞ்சாயத்துப் பள்ளியும் பரிசு வென்றிருக்கிறது. ‘‘எங்கள் பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை இல்லை. பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிச்சோம். ஒவ்வொரு பாட்டிலையும் நீளவாக்கில் இரண்டாகப் பிரித்து, நீளமான கொம்புகளில் இணைத்தோம். அதையே மேல் கூரையாக்கினோம்’’ என்கிறார்கள்.

இதே மாவட்டத்தின் காளாச்சேரி மேற்கு ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி மாணவர்கள் செய்தது வித்தியாசமானது. ‘‘பொதுவாக, மேடையில் பேசி பரிசுகள் வாங்க ஆசைப்படுவோம். ஆனா,  கூட்டத்தைப் பார்த்தாலே உதறல் வந்துரும். இந்த மேடை பயம் நீங்க, களிமண்ணில் வண்ண வண்ண முகமூடிகள் செய்து போட்டுக்கிட்டுப் பேசினோம். இந்த மாதிரி மற்றவர்களும் செய்யலாம்னு போட்டிக்கு அனுப்பினோம். பரிசு கிடைச்சது’’ என்கிறார்கள் பெருமிதத்தோடு.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள், ஹான்ஸ் போன்ற போதைக்கு அடிமை ஆவதைத் தடுக்க, மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ததுடன், அதுபோன்ற மாணவர்களிடம் பேசி  அவர்களை மாற்றி இருக்கிறார்கள், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியைச் சேர்ந்த அம்மையப்பன் மேற்கு ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி மாணவர்கள்.

‘‘எங்களைவிட வயதில் பெரிய மாணவர்களிடம் அன்பாகவும் பொறுமையாகவும் பேசி, அவர்களை மருத்துவரோடு பேசவெச்சோம். பலரும் அந்தத் தீய பழக்கத்தில் இருந்து மீண்டு வந்திருக்காங்க” என்கிறார்கள் பெருமையுடன்.

சாக்பீஸ் தூசுகளில் இருந்து தப்பிக்க, பிளாஸ்டிக் பாட்டில்களில் சாக்கைக் கட்டி, அதன் மூலம் தூசுகளைச் சேகரிக்கும் யோசனையை அளித்து பரிசு வென்றிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், சாலை அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.

சபாஷ் ஹீரோக்களே!

- தா.நந்திதா படங்கள்: தே.சிலம்பரசன், க.சதீஷ்குமார், ப.அருண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick