சென்றதும் வென்றதும்! - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

கொள்ளையர்களிடம் இருந்து தப்பி, போர்ச்சுக்கலில் கரை ஒதுங்கிய கொலம்பஸ், லிஸ்பன் என்னும் நகரை அடைந்தார். அவருடைய வாழ்க்கையை மாற்றியது அந்த நகரம். ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரில் இருந்தும் கப்பல்கள் அங்கே வந்துசென்றன. ஒவ்வொரு கப்பலில் இருந்தும் பலவிதமான கதைகளும் தரையிறங்கின. ‘நான் அங்கே அதைப் பார்த்தேன், இங்கே இதைப் பார்த்தேன்' என்று மாலுமிகள் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டார்கள்.

அப்போது, கொலம்பஸின் சகோதரர் பார்த்ததோலிமியோ, லிஸ்பனில்தான் இருந்தார். வரைபடம் தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரைப் பார்த்து, கொலம்பஸும் வரைபடத்தின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். புதிய இடங்களைக் கண்டறிந்த மாலுமிகளிடம் பேசி, வரைபடங்களை உருவாக்குவார். விரைவில், ‘நம்பகமான வரைபடம் வேண்டுமா? கொலம்பஸிடம் கேள்' என்று மக்கள் சொல்லும் அளவுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் புகழ்பெற்றன.

ஸ்பானிஷ், போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட மொழிகளையும் கற்கத் தொடங்கினார் கொலம்பஸ். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதிய இடங்களுக்குக் கப்பலில் சென்று, ஆபத்தான சூறாவளி, பனி படர்ந்த பிரதேசங்களை எப்படிக் கையாள்வது என்பதைத் தெரிந்துகொண்டார். ஐஸ்லாந்து,  ஆர்ட்டிக் பிரதேசத்தையும் விட்டுவைக்கவில்லை.

1300 தொடங்கி 1500 வரையிலான மத்திய காலத்தை, மறுமலர்ச்சிக் காலகட்டம் என்பார்கள்.  கலை, இலக்கியம், அறிவியல், புவியியல், மருத்துவம் எனப் பல துறைகளில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை ஐரோப்பியர்கள் நிகழ்த்தினார்கள். கொலம்பஸ், வரைபடத்தை உருவாக்குபவர் என்பதால், புதிய இடங்களைக் கண்டறிவதில் ஆர்வம் மிகுந்தது.

குறிப்பாக, ஐரோப்பாவில் இருந்து மேற்கே ஆசியா செல்வதற்கான நேரடிக் கடல்வழிப் பாதையைக் கண்டுபிடிக்க விரும்பினார். அப்போது, ஆசியா செல்வதற்குத் தெற்கு நோக்கியே பயணம்செய்ய வேண்டும். மிகப் பெரிய ஆப்பிரிக்கப் பிரதேசத்தைச்  சுற்றிக்கொண்டு ஆசியா செல்ல வேண்டும். கொலம்பஸ், மேற்கு நோக்கி முன்னேற விரும்பினார். அட்லாண்டிக் கடல் வழியாக மேற்கை அடைந்துவிட்டால், ஆசியாவைச் சுலபமாகத் தொட்டுவிடலாம். கிழக்கிந்தியத் தீவுகளைச் சுலபமாக அடைய முடிந்தால், எக்கச்சக்கமான பயண நேரத்தையும் பயணச் செலவையும் மிச்சப்படுத்தலாம்.

போர்ச்சுக்கல் மன்னரை அணுகி, தன் கனவுத் திட்டத்தை விவரித்தார் கொலம்பஸ். அனுமதி கிடைக்கவில்லை. இங்கிலாந்து சென்றும்  பலன் இல்லை. இறுதியாக, 1491-ம் ஆண்டு கொலம்பஸை ஆதரிக்க முன்வந்தார், ஸ்பானிஷ் மன்னர். கொலம்பஸ் புதிய இடத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அங்கு கிடைக்கும் செல்வத்தில் 10 சதவிகிதம் கொலம்பஸுக்குக் கிடைக்கும். அந்த இடத்தின் கவர்னராக நியமிக்கப்படுவார்.

1492, ஆகஸ்ட் 3 அன்று மூன்று கப்பல்களில் கொலம்பஸின் பயணம் தொடங்கியது. தி நினா, தி பிண்டா, தி சாண்டா மரியா என்பதே அந்தக் கப்பல்கள். ‘கிழக்கிந்தியத் தீவுகளுக்கு விரைவில் சென்றுவிடுவேன். அங்கிருந்து பொன்னும் ரத்தினங்களும் கொண்டுவருவேன்' என்று பூரிப்படைந்தார் கொலம்பஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்