தண்ணீர் 3496

W FOR WATER

ரு நாளைக்கு நாம் சராசரியாக 3,496 லிட்டர் தண்ணீரைச் ‘சாப்பிடுகிறோம்‘ என்றால் நம்புவீர்களா?

‘இல்லேப்பா, நான் ஒரு நாளைக்கு நாலு கிளாஸ்  தண்ணீரைக் குடிச்சாலே பெரிய விஷயம்’ எனச் சொன்னால், அது ரொம்பத் தப்பு. ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது முக்கியம்.

சரியான அளவு தண்ணீரைக் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவது.

நாம் தினசரி 3,496 லிட்டர் தண்ணீர் சாப்பிடுகிறோம் எனச் சொன்னது, நம் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு.

குளிப்பது, துணிகளைத் துவைப்பது,  கழிவறைப் பயன்பாடு, சமையலுக்காக என ஒரு வீட்டில், ஒரு மனிதருக்கான சராசரி தண்ணீர் பயன்பாடு 137 லிட்டர் என்கிறது ஓர் ஆய்வு.

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் எத்தனை விதமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என கணக்குப் போட்டுப் பாருங்கள்.  அந்தப்  பொருட்களைத் தயாரிக்கும்போது, மூலப் பொருளாக தண்ணீர் பயன்படுத்தப்பட்டு, உடுத்தும் ஆடை முதல் படிக்கும் புத்தகம் வரை எல்லாவற்றிலும் நீர் ஒளிந்திருக்கிறது. அதற்கு எல்லாம் சேர்த்துதான் இந்தக் கணக்கு.

ஒரு பொருளை வீணாக்கும்போது அதனோடு தண்ணீரையும் சேர்த்தே வீணாக்குகிறோம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் காபி பொடி அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஹெல்த் டிரிங்ஸ் இருக்கும் டப்பாவை, சரியாக மூடவில்லை என வைத்துக்கொள்வோம். அது கெட்டியாகி, கீழே கொட்டும் நிலை. அப்போது, பெற்றோரின் பணம் மட்டுமா வீணாகிறது? ஒரு கிலோ காபி பொடி தயாரிக்க 18,900 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தண்ணீரையும் வீணடித்ததாகவே அர்த்தம்.

இந்தியாவில் அன்றாடப் பயன்பாட்டுக்கான தண்ணீருக்காகப் போராடும் மக்கள் 70 சதவிகிதம். மீதி இருக்கும் 30 சதவிகித மக்களுக்குத்தான் தண்ணீர் எளிதில் கிடைக்கிறது. நாம் வீணடிக்கும் உணவுப் பொருட்களால், வீணாகும் தண்ணீரின் அளவு 92 சதவிகிதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி, அன்றாட வாழ்வில் தண்ணீர் வீணாவதை எப்படியெல்லாம் தவிர்க்கலாம்?

பல் துலக்கும்போது குழாயைத் திறந்தேவைக்காமல், தேவைக்கு ஏற்ப திறந்து பயன்படுத்தவும். இதன் மூலம், ஒரு நிமிடத்துக்கு 6 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

ஷவரில் குளிக்கும்போது, ஒரு நிமிடத்துக்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஆகவே, தினமும் ஷவர் குளியலைத் தவிர்த்து, ஒரு வாளியில் தண்ணீரைப் பிடித்துவைத்துக் குளிக்கலாம்.

வாஷிங் மெஷினில் துணி துவைக்கும்போது, முழுக் கொள்ளளவு பயன்படுத்த வேண்டும். குறைவான துணிகளைத் துவைக்கும்போது, அதிகமாக தண்ணீர் செலவாகும்.

பயணத்தின்போது வாங்கும் தண்ணீர் பாட்டிலை, முழுமையாகக் குடியுங்கள். ஹோட்டலுக்குச் செல்லும்போது, தேவையான தண்ணீரை மட்டுமே கிளாஸில் ஊற்றிக் குடியுங்கள்.

உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், துணி துவைக்கவும் பாத்திரம் கழுவவும் பயன்படுத்தும் நீர், தோட்டத்துச் செடிகளுக்குச் செல்ல வழி செய்யுங்கள்.

இப்படிச் சின்னச்சின்ன விஷயங்களில் தண்ணீர் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், நாளைய தண்ணீர் தேவைக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை அளிக்கலாம். நான் தண்ணீரை சரியாகப் பயன்படுத்துபவன் எனப் கம்பீரமாகச்ச் சொல்லிக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்