உயிரியல் பூங்கா ஓர் உலா!

Z FOR ZOO

விடுமுறை பட்டியலில் உயிரியல் பூங்காவுக்கு எப்பவும் இடம் உண்டு. தத்தி நடக்கும் சின்னப் பறவைகள் முதல் தலையை உயர்த்திப் பார்க்கவைக்கும் ஒட்டகச்சிவிங்கி வரை ஒரே இடத்தில் பார்க்கலாம். எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு என்பதை உணர்த்துவதே உயிரியல் பூங்கா அமைப்பதன் நோக்கம். குறிப்பிட்ட உயிரினங்களுக்கு என்றே உலகில் சில வித்தியாசமான உயிரியல் பூங்காக்கள் உண்டு. அந்த இடங்களுக்கு ஒரு விசிட்...

தி பட்டர்ஃபிளை ஜூ (The Butterfly Zoo)

பட்டாம்பூச்சிகளுக்காகவே அமைக்கப்படும்  பூங்கா உலகம் முழுக்க உண்டு. அமெரிக்காவில் மட்டும் 35 பட்டாம்பூச்சி தோட்டங்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இதில், பழமையானது ‘தி பட்டர்ஃபிளை ஜூ’. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள இந்தப் பூங்கா 1988-ல் தொடங்கப்பட்டது. 5,000 வகைகளுக்கும் மேலான அரியவகை பட்டாம்பூச்சிகளால் நிரம்பியுள்ளது இந்தப் பூங்கா.

பாப்கார்ன் பார்க் (Popcorn park)

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ளது ‘பாப்கார்ன் பார்க்’. ஆதரவற்று விடப்பட்ட விலங்குகள், அடிப்பட்ட விலங்குகளைப் பராமரிக்கும் இடம். 1977-ல் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில், விலங்குகளை எப்படிப் பாதுகாப்பது என பார்வையாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். தத்தெடுத்து வளர்க்கவும் விலங்குகளை அளிக்கின்றனர்.

ஹெல்சின்கி உயிரியல் பூங்கா (Helsinki Zoo)

பின்லாந்து நாட்டின் கொர்கேசாரி தீவில், காடும் மலைச் சிகரங்களும் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது, ‘ஹெல்சின்கி உயிரியல் பூங்கா’. கரடிகள், மான்கள், சிபேரியன் புலிகள் என பலவகையான விலங்குகள் உள்ள இந்தப் பூங்கா, 1889-ல் தொடங்கப்பட்டது. உலகின் பழமையான உயிரியல் பூங்காவில் இதுவும் ஒன்று.

போலார் உயிரியல் பூங்கா (Polar Zoo)

நார்வே நாட்டில் இருக்கும் போலார் உயிரியல் பூங்கா, பல ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் பார்வையாளர்கள் இங்கு வாழும் விலங்குகளோடு நெருங்கிப் பழகலாம். Wolf camp, Fox camp போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, விலங்குகளோடு பழகி விளையாடலாம்.

சிங்கப்பூர் உயிரியல் பூங்கா (Singapore Zoo)

1973-ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில், இரவில் விழித்திருந்து வேட்டையாடும் விலங்குகள்தான் அதிகம் இருக்கின்றன. நைட் சபாரியில், காட்டில் நடந்து சென்று விலங்குகளைக் காணலாம். படகு சவாரியும் உண்டு.

ஜெருசலம் பிப்ளிகல் பூங்கா (jerusalem biblical zoo)

1940-ல் தொடங்கப்பட்டது. அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும் காப்பாற்றி வரும் இந்த வனவிலங்கு பூங்கா, பல முறை இடமாற்றம் செய்யப்பட்டது. இப்போது, இஸ்ரேலின் மல்ஹா பள்ளத்தாக்கில் உள்ளது.

பத்மஜா நாயுடு ஹிமாலயன் வனவிலங்கு பூங்கா (Padmaja Naidu Himalayan zoo)

மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் உள்ள இந்தப் பூங்காதான், மலைப்பிரதேச வாழ் விலங்குகளை பாதுகாத்து வரும் ஒரே இந்திய உயிரியல் பூங்கா. இந்தியாவின் மிக உயரமான இடத்தில் உள்ள வனவியல் பூங்காவும் இதுதான். 1958-ல் தொடங்கப்பட்டது. 1975-ல் சரோஜனி நாயுடுவின் மகளும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான பத்மஜா நாயுடு அவர்களின் நினைவாகப் பெயர் மாற்றம் பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்