Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!

S FOR STORYவிஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி.

து பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது. அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது.

நரி, அந்தப் பொருளையே உற்றுப் பார்த்தது. காற்று பலமாக வீசும்போது அது அசைந்ததும், பயம் அதிகமானது. அந்த வழியாகச் சென்ற கரடியை அழைத்துக் காட்டியது. கரடிக்கும் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், நரி போல கரடி பயப்படாமல், காலால் நகர்த்தி, முகர்ந்து பார்த்தது. கரடி அதைக் கையில் எடுத்தும் ஒன்றும் ஆகவில்லை.

கரடி, நரியை முறைத்தவாறு, ‘‘நீ சரியான பயந்தாங்கொள்ளி. காட்டில் ஏதாவது அதிசயப் பொருள் கிடைத்தால், சிங்க ராஜாவிடம்தான் கொடுக்க வேண்டும். இதை, ராஜாவிடம் கொடு” என்றது.

நரி பயத்துடன் பார்த்தது. கரடி, நரியின் முதுகில் செல்லமாய் அடித்து, ‘‘சரி, நானே கொண்டுவருகிறேன். நீ துணைக்கு வா’’ என்றது.

ஒரு பாறை முன் வந்து நின்ற சிங்க ராஜாவின் காலடியில் அந்தப் பொருளை வைத்தது கரடி. சிங்கம் சத்தம் எழுப்ப, காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் அங்கு கூடின. எந்த விலங்குக்கும் அந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை.

‘‘இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டது சிங்க ராஜா.

‘‘ராஜா, இது வானத்திலிருந்து விழுந்தது” என்றது நரி.

“வானத்திலிருந்தா” என்றபடி அந்தப் பொருளைப் புரட்டிப் பார்த்தது சிங்கம். அப்போது, அதன் உள்ளேயிருந்த திரவம் கொஞ்சம் கசிந்து கீழே விழுந்தது. மற்ற விலங்குகள் பயந்து விலக, நரி ஓடியேவிட்டது.

மரத்திலிருந்து தாவி வந்த குரங்கு, அந்தப் பொருளை உற்றுப் பார்த்து, “இதை ஏற்கெனவே எங்கோ பார்த்திருக்கிறேன். ஆங்... மனிதர்கள் இதை வைத்திருப்பார்கள்” என்று சொன்னது.

‘மனிதர்கள் நம்மை அழிப்பதற்காக இதை அனுப்பினார்களோ’ என விலங்குகள் பயந்தன.

‘‘யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் பிரச்னையைக் காட்டு உளவு அதிகாரி சிறுத்தையார் சரிசெய்வார்” என்றது சிங்க ராஜா. சிறுத்தை முன் வந்து நின்றது. அந்தப் பொருளைப் பத்திரமாக, ஒரு கொடியால் இணைத்து முதுகில் கட்டிக்கொண்டது.

அடுத்த நாள் காட்டுத் தீ ஏற்பட்டு, மரங்கள் எரிந்தன. சிறுத்தை நெருப்புக்குப் பயந்து ஓடும்போது, முதுகிலிருந்த அந்தப் பொருள் நெருப்பு அருகே விழுந்து, உருகி, மறைந்துவிட்டது. அதைப் பார்த்த விலங்குகளுக்குப் பயம் அதிகமானது.

அடுத்து வந்த நாட்களில், காடுகளில் தொடர்ந்து அதேபோன்ற பொருள் கிடைத்தன. சிலவற்றில் திரவம் இல்லை. ‘‘இந்தப் பொருட்களை அருவியில் தூக்கி எறிந்துவிடலாமே’’ என்றது புலி.

‘‘நெருப்பில் பட்டு காணாமல்போனதுபோல, தண்ணீரில் என்னாகுமோ? தண்ணீரெல்லாம் வீணாகிவிடும்” என்று மறுத்தது சிறுத்தை.

சிங்க ராஜாவுக்குக் கோபத்துடன், “இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?’’ எனக் கேட்க,  “நாளை முடிவு கட்டுகிறேன்” என்றது சிறுத்தை.

அடுத்த நாள், இதுவரை சேர்ந்த அந்தப் பொருட்களை காட்டுக்கு அருகே, சாலையின் நடுவே கிடத்தியது சிறுத்தை. அப்போது, ஜீப் வரும் சத்தம் கேட்டு புதருக்குள் ஒளிந்துகொண்டது.

ஜீப் நின்றது. அதில் இருந்த அதிகாரிகளும் டிரைவரும் இறங்கினர். சாலையில் கிடந்த அந்தப் பொருட்களைப் பார்த்து, “இவ்வளவு தண்ணீர் பாட்டில்கள் எப்படி வந்தன? இதை விலங்குகள் விழுங்கினால் ஆபத்து என்று தெரியாதா?” என்றார் ஒருவர்.

அப்போது அவருக்கு இருமல் வர, டிரைவர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து தந்தார். அவர் அதைத் திறந்து குடிப்பதை, மறைந்திருந்த சிறுத்தை பார்த்தது. சாலையில் கிடந்த பாட்டில்களை எடுத்து ஜீப்பில் போட்டார் டிரைவர். ஜீப் புறப்பட்டது.

சிறுத்தை, காட்டுக்குள் சென்று நடந்தவற்றை சிங்க ராஜாவிடம் கூறி, ‘‘அது தண்ணீர் பாட்டில்தான். ஆனால், பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அந்தப் பாட்டில் ஆபத்தானதாம். எத்தனை ஆண்டுகள் மண்ணில் இருந்தாலும் அழியாதாம். அதைக் கடிக்கவோ, விழுங்கவோ கூடாது’’ என்றது.

அனைத்து விலங்குகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
தினம் தினம் கவனி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close