தமிழர் பெருமை பேசும் கலைக்கூடம்!

சேலை கட்டிய  இரட்டையர்கள், வேட்டியுடன் தலைப்பாகை அணிந்த சிறுவர்கள், துறுதுறு என ஓடும் டாக்டர் மற்றும் நர்ஸ் சிறுமிகள், கம்பீரமாக வேனில் இருந்து இறங்கும் சுபாஷ் சந்திரபோஸ் என அந்த இடமே நொடியில் சந்தோஷப் பூங்காவாக மாறிவிட்டது.

சென்னை, தரமணியில் இருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாசலில்தான் இந்தக் காட்சி. ஜிப்பா போட்ட ஒரு சுட்டியை நிறுத்தி, ‘‘மாறுவேடப் போட்டியா?’’ எனக் கேட்டோம்.

‘‘உங்களுக்குத் தெரியாதா? நாங்க, பழந்தமிழர் வாழ்வியல் கூடத்தைப் பார்க்க வந்திருக்கோம். நீங்களும் உள்ளே வாங்க. நம் பழந்தமிழர்களின் பெருமைகள், திறமைகள் எல்லாத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்” என்று கைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்’. அதன் வாசலில், வள்ளுவரும் ஒளவையாரும் வரவேற்றார்கள். சுட்டிகள் குஷியாகி, வள்ளுவரின் காதருகே சென்று ரகசியம் பேசினார்கள்.  தங்களது கண்ணாமூச்சி விளையாட்டில் அவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.

‘‘போதும் போதும். உள்ளே போய்ப் பார்க்கலாம் வாங்க’’ என டீச்சர் அழைக்க, வள்ளுவருக்கு டாட்டா காட்டினார்கள்.

காட்சிக்கூடத்தின் உள்ளே நுழைந்ததும், நாம் படிக்கும் வரலாறு மற்றும் இலக்கிய நிகழ்வுகளை நேரடியாகக் காணும் உணர்வு. புறாவுக்காக தன் தசையைத் தந்த சிபிச் சக்கரவர்த்தி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன், முல்லைக்குத் தேர் தந்த பாரி, பசுவுடன் ஆராய்ச்சி மணி என ஓவியங்கள் ஒவ்வொன்றும் உயிரோவியமாக, மனதை அள்ளுகின்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வெண்கலச் சிலைகளில் தமிழர் வீரத்தைக் கம்பீரமாக வெளிப்படுத்துகிறார்கள்.

அந்தக் காலத்தில் இருந்த தமிழக நகரங்களின் வடிவமைப்பு, கட்டடங்கள், கோயில்கள் எல்லாம் மினியேச்சர்களாகச் சுண்டி இழுக்கின்றன. அரசர்களின் மாதிரி அரியணைகள், போர்க் கருவிகள், மண்பாண்டங்கள், வீட்டில் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், நீர் மேலாண்மை, நெசவுத் தொழில்நுட்பம், ஏர் மாடுகள், விருந்தோம்பல் எனக் கால இயந்திரத்தில் ஏறி, ஆயிரம் ஆண்டுகள் பின்னால் சென்றது போல இருந்தது.

‘‘நமது தமிழர்களின் பெருமைகளைப் பள்ளி மாணவர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்வதற்காக, 3 கோடியே 46 லட்சம் செலவில் இந்தக் காட்சிக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், தமிழக முதல்வர் திறந்துவைத்த இந்தக் காட்சிக்கூடத்தை ஒட்டி, குளிர்சாதன வசதியுடன்கூடிய சிறிய திரையரங்கு ஒன்றும் உள்ளது. இங்கே, தமிழகப் பெருமைகளைப் பேசும் குறும்படங்கள் ஒளிபரப்பாகும். இந்தக் காட்சிக்கூடம், அரசு விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இயங்கும். அனுமதி இலவசம். தங்கள் மாணவர்களைப் பள்ளிகள் அழைத்து வரலாம். பொதுமக்களும் தங்கள் குழந்தைகளோடு வந்து, நமது கலாசாரத்தைக் குழந்தைகளுக்கு அறியவைக்கலாம்’’ என்கிறார், இந்தக் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளர்.

நிச்சயமா நீங்களும் இங்கே வரணும்!

- பா.நரேஷ், அட்டைப் படம்: உ.கிரண்குமார், படங்கள்: பா.அபிரக்‌ஷன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick