Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆற்றைக் கடந்து மலையில் நடந்து...

‘ஆஹா டைம் ஆகுதே, இந்த ரெட் சிக்னல் எப்போ மாறுமோ. டிராஃபிக்ல மாட்டிக்கிட்டு எப்போ ஸ்கூல் போய்ச் சேருவோமோ!’ என டென்ஷன், டென்ஷன், டென்ஷன் ஆகும்.

அப்பாவின் பைக் பின்னாடியோ, பள்ளி வாகனத்திலோ  உட்கார்ந்தபடி இப்படிப் புலம்புவோம். பள்ளிப் பேருந்து, ஆட்டோ என நகரத்தில் கிடைக்கும் வசதியிலேயே டென்ஷன் ஆகிறது. ஆனால், ஆற்றைக் கடந்து, காட்டில் நடந்து, மலையில் ஏறி, ஆவலோடு பள்ளிக்குச் சென்று படிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள் தெரியுமா?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பரளிக்காடு. பில்லூர் அணைக்கட்டைச் சுற்றி அமைந்துள்ள பரளிக்காடு, தோண்டை, பூச்சமரத்தூர் ஆகிய பழங்குடியினரின் கிராமங்களுக்கும் வெளி உலகுக்கும் உள்ள ஒரே தொடர்பு, ஆற்றைக் கடக்க உதவும் பரிசல். அணைக்கட்டின் அருகில் இந்தக் கிராமங்கள் இருப்பதால், நீரின் வேகம் எப்போது மெதுவாக இருக்கும், எப்போது சுழலாக மாறும் எனச் சொல்லவே முடியாது. இந்த ஆற்றில் தினமும் பரிசலைச் செலுத்திக்கொண்டு பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் சில சுட்டிகள்.

இரண்டு அல்லது மூன்று பேருக்கு ஒரு பரிசல். புத்தகச் சுமையையும் சேர்த்து, நீரின் வேகத்தை எதிர்த்துத்   துடுப்புப் போட்டு, மறு கரையில் இருக்கும் வேறு ஓர் ஊருக்குச் செல்ல வேண்டும். இதற்கே அரை மணி நேரம் ஆகும். பிறகு, அங்கே வரும் ஒரே ஓர் அரசுப் பேருந்தைப் பிடித்து, ‘பரளி பவர்ஹவுஸ்’ என்கிற இடத்தில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டும். மாலையில் திரும்பும்போதும் இதேதான். இந்தச் சவாலை தினமும் சந்தித்து, பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் பரளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, சதீஷ் மற்றும் ரகு.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சந்தியா, “நான் நாலாம் கிளாஸ் படிக்கும்போதே, தனியா பரிசலை ஓட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா வேலைக்குப் போறதால அவங்களால துணைக்கு வர முடியாது. தினமும் ஒரு மணி நேரம் துடுப்புப் போடணும். கை, தோள்பட்டை வலி தாங்க முடியாது. மழைக் காலத்துல இன்னும் கஷ்டம். பரிசல்ல தண்ணீர் ஏறிடும். அதை டப்பாவால அள்ளி அள்ளி வெளியில கொட்டணும். போட்டுட்டு இருக்கிற துணியும் மழையில தொப்பலா நனைஞ்சுரும். இதனால, எங்க ஊர்ல இருந்து பள்ளிக்குப் போயிட்டிருந்த பல பொண்ணுங்க நின்னுட்டாங்க. ஆனா, நான் தொடர்ந்து நல்லா படிச்சு, பெரிய ஆளா வருவேன்’’ என்கிறார்.

பத்தாம் வகுப்பு மாணவரான சதீஷ், “சில சமயம் லேட் ஆகி, இருட்டுல பரிசல் ஓட்டிட்டு வரணும். நைட்ல காட்டுக்குள்ள தனியா  போகவேண்டியதாயிரும். திடீர்னு யானையோ, கரடியோ எதிர்ல வரும். ஒரு முறை கரடி என்னைத் துரத்தி, தப்பிச்சேன்’’ என்கிறார்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் ரகு, ‘‘முன்னாடி, பரளி பவர்ஹவுஸ் பள்ளியில், 1000 மாணவர்கள் வரைக்கும் படிச்சுட்டு இருந்தாங்களாம். இப்போ, 60 பேர்தான் படிக்கிறாங்க. நல்லா படிச்சு முன்னேறி, அது மூலமா எங்க ஊருக்கும் எங்க ஜனங்களுக்கும் ஏதாவது செய்யணும்கிற ஆர்வம்தான், இவ்வளவு சிரமங்களைத் தாண்டி எங்களைப் போகவைக்குது. ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு, நாங்க கிளம்புறோம்’’ என்றார்.

புத்தகப்பையுடன் பரிசலில் ஏறிக்கொண்டு, தங்கள் எதிர்காலத்தை நோக்கி துடுப்புப் போடுகிறார்கள் அந்தச் சுட்டிகள்.

- ரா.சதானந்த்


ங்கி உயர்ந்த மரங்கள், சறுக்கும் பாறைகள், குறுக்கிடும் சிறு ஓடைகளையும் கடந்து, தோளில் மாட்டிய புத்தகப் பையுடன் உற்சாகமாக வருகிறார்கள் அவர்கள். ‘‘வேகமா வாங்க, ஸ்கூலுக்கு நேரமாச்சுல” என்றபடி, அந்தப் பள்ளிக்குள் நுழைகிறார்கள்.

தேனி மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் ஒன்று,  கண்ணக்கரை. அங்கே, இரண்டு மலைகளை அரண்களாக அமைத்தது போன்ற இடத்தில் அமைந்திருக்கிறது, அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளி. அங்கே பணிபுரியும் ஆசிரியர் ராகவன் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் மாணவர்களைப் புன்னகையுடன் வரவேற்கிறார்கள்.

‘‘இவங்க எல்லாம் சொக்கன் அலை, ஊரடிஊத்துக்காடு, அகமலை, பட்டூர், சுளுந்துக்காடு, அலங்காரம், அண்ணாநகர், தம்புராநகர், கரும்பாறை போன்ற மலைக்கிராமங்களில் இருந்து வர்றாங்க. ஒவ்வொரு ஊரும் 10 கிலோமீட்டர் தூரம் இருக்கும். வார நாட்கள்ல இங்கேயே தங்கிப் படிப்பாங்க. லீவு நாள்ல அவங்கவங்க ஊருக்குப் போவாங்க. இங்கே மின்சார வசதி இல்லை. சோலாரில் ஒரே ஒரு லைட்டு எரியும். அதுவும் ரெண்டு மணி நேரம்தான். அதுக்கப்புறம் மண்ணெண்ணெய் விளக்குதான். அதிலேயே நல்லா படிச்சு, பிரமாதமா மார்க் எடுப்பாங்க’’ என்கிறார் ராகவன்.

‘‘யாருக்காவது உடல்நிலை சரியில்லாமப் போனா, எங்ககிட்ட இருக்கிற மருந்தைக் கொடுப்போம். மாசம் ஒருமுறை டாக்டர் வருவார். ரொம்ப அவசரமா சிகிச்சை தேவைப்பட்டா, பெரியகுளத்துக்கு கூட்டிட்டுப் போவோம். இவங்க இங்கே இருக்கிறப்போ, எங்க குழந்தைங்க மாதிரி பார்த்துப்போம்’’ என்கிறார் ராஜேஸ்வரி.

‘‘எங்க ஊர்ல இருந்து எட்டு கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் நடந்து வந்தாலும், எங்களுக்கு அலுப்பே தெரியாது. ஏன்னா, ஜாலியா பேசிக்கிட்டே வருவோம். வர்ற வழியில் நாங்களே வெச்சிருக்கிற சாமியைக் கும்பிடுவோம். பழம் பறிச்சு சாப்பிடுவோம். இங்கே தங்கியிருக்கும் நாட்கள்ல பாறை மேல ஹாயா படுத்துக்கிட்டு கதை பேசுவோம். மரத்துல ஊஞ்சலாடுவோம். இப்படி இயற்கையோடு சேர்ந்து படிக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்கிறார் ஒரு சுட்டி.

‘‘இங்கே ஹாஸ்டல்ல டிவி இருக்கு; ஆனா, கரன்ட்டுதான் இருக்காது. அப்பா, அம்மாவை அஞ்சு நாளைக்குப் பார்க்காம இருக்கிறதுதான் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதைப் பார்த்தா படிக்க முடியாதே. நாங்க எல்லாரும் நல்லா படிச்சு, டாக்டர், போலீஸ், கலெக்டரா வருவோம்” என்று சொல்கிற அவர்களின் குரலில் நம்பிக்கைச் சுடர் ஒளிர்கிறது.

- ச.மோகனப்பிரியா   படங்கள்: வீ.சக்தி அருணகிரி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்!
யோகா எங்க செல்ல ஃப்ரெண்டு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close