Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேர்பட நோக்கு வலிகளை நீக்கு!

ஸ்மார்ட்போன் எச்சரிக்கை

‘‘என் அப்பாவைவிட, ஸ்மார்ட்போன் பற்றியும் அதை எப்படி யூஸ் பண்றதுன்னும் எனக்கு அதிகம் தெரியும்’’ எனப் பெருமையாகச்  சொல்லும் சுட்டியா நீங்கள்? அப்படின்னா, இதைப் படிங்க.

சமீபத்தில் வெளியான மூன்று வெவ்வேறு ஆய்வுகள், மருத்துவ உலகில் பரபரப்பாகி இருக்கு. முதலாவது ஆய்வு, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்து இருப்பது.

இரண்டாவது ஆய்வு, இந்தியாவின் நகர்ப்புறத்தில் உள்ள சிறுவர்கள், ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு மணி நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள் என்பது.

மூன்றாவது ஆய்வு, 18 வயது முதல் 44 வயது உள்ள இந்தியர்களில், 50 சதவிகிதம் பேர் புதுவகையான கழுத்து மற்றும் தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புது வகையான நோய்க்குப் பெயர், டெக்ஸ்ட் நெக் (Text Neck). பல மணி நேரம் ஸ்மார்ட்போனை குனிந்து பார்ப்பதால் வரும் நோய் இது.

பல காலமாக தலையைக் குனிந்தபடி செய்யும் பல வேலைகள் உண்டு. ஆனால், ஸ்மார்ட்போன் வந்த பிறகு, இன்னும் அதிகமாகி இருக்கு. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மெசேஜ், மெயில்கள் என எப்போதும், எதையாவது டைப் செய்துகொண்டே இருப்பதை டெக்ஸ்டிங் (Texting) என்பார்கள். இதை ஸ்மார்ட்போனில் செய்யும்போது, அதிகம் குனிகிறோம். இதனால், முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், இளம் வயதிலேயே கழுத்து மற்றும் முதுகெலும்பு வளைகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘இப்போது, சிறுவர்கள் அதிகமாக ஸ்மார்ட்போனில் கேம்ஸ் விளையாடுவதால், அவர்களும் குனிந்தபடியே இருக்கிறார்கள். இதனால், இவர்களுக்கும் சீக்கிரமே இந்த டெக்ஸ்ட் நெக் நோய் வரும்.  இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏற்கெனவே பல சுட்டிகள் இந்த நோயினால் பாதிப்படைந்துள்ளனர்’ என்கிறார்கள்.

தொலைக்காட்சி, கணினி போன்றவற்றால் ஏற்கெனவே பல புதிய நோய்கள் வந்திருக்கு. ஜாய் ஸ்டிக்குகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக விளையாடும் ‘பிளே ஸ்டேஷன்’ கேம்களால், கட்டை விரலின் அமைப்பில் ஏற்படும் கோளாறுக்கு ‘பிளே ஸ்டேஷன் தம்ப்’ என்று பெயர். தொலைக்காட்சி, கணினி போன்ற டிஜிட்டல் திரைகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பதால் வரும் நோய்க்கு, ‘டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். தொடர்ச்சியாக கணினி மவுஸ்களைப் பயன்படுத்துவதால் வரும் நோய்க்கு, ‘கார்பல் டனல் சிண்ட்ரோம்’ என்று பெயர்.

‘இந்த நோய்களைவிட டெக்ஸ்ட் நெக் நோயின் பாதிப்பு பயங்கரமானது. முதுகெலும்பின் வடிவமே மாறிவிடலாம். எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் சீக்கிரத்திலேயே வரலாம். தசைகள், முதுகெலும்புத் தட்டுகள் போன்றவை பாதிக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், கழுத்து எலும்பு இணைப்புகளின் பலம் குறைந்து, பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘என்னால் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாதே. கேம்ஸ் விளையாட மட்டும் இல்லே, எத்தனையோ யூஸ்ஃபுல்லான ஆப்களை டவுண்லோடு செய்து பயன்படுத்துறேனே’ என்கிறீர்களா?

சரிதான். ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும்போது, தலையைக் குனிந்துகொண்டே இருக்காதீங்க. கண்களுக்கு நேராக, சற்றுத் தொலைவில் பிடித்துப் பயன்படுத்துங்க.

கணினி, தொலைக்காட்சி, டேப்லெட், புத்தகம் என  எந்தப் பொருளாக இருந்தாலும் கண்களுக்கு நேராக, சரியான தூரத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

சரியான கோணத்தில் கணினி, ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தினாலும், தொடர்ச்சியாகப் பயன்படுத்தக் கூடாது.  இடைவெளியில் ஓய்வு எடுக்க வேண்டும். வேறு திசையில் பார்வையைத் திருப்பி, தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும்.

இந்தப் புதிய நோய்க்கு ஒரு தீர்வையும் ஸ்மார்ட்போனிலேயே கொண்டுவந்திருக்கிறார்கள். ‘The Text Neck Indicator’ எனும் ஆப் இருக்கிறது. இதை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுண்லோடு செய்ய வேண்டும்.  நீங்கள் தவறான கோணத்தில் போனைப் பயன்படுத்தும்போது,  சிவப்பு நிறத்தில் ஒரு வட்டம் தெரியும். சரியான கோணத்துக்கு மாறியதும், பச்சை நிறத்துக்கு அந்த வட்டம் மாறிவிடும்.

அப்புறம் என்ன? அந்த ஆப்பை டவுண்லோடு செய்துட்டாபோச்சு என்கிறீர்களா? அது ஒரு சிறிய தீர்வுதான். பெரிய தீர்வு என்பது நம் மனக்கட்டுப்பாடுதான். தேவை இல்லாமல் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைக் குறையுங்கள். கேம்ஸ் விளையாடுவதை ரொம்ப ரொம்பக் குறையுங்கள். நம் ஆரோக்கியம் நம் கையில்தான்!

- சுப.தமிழினியன்,படங்கள்: அ.குரூஸ்தனம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நன்றி சொன்னோம் நாங்கள்!
பளபளக்கும் பழசு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close