தென்னிந்தியாவைச் சுற்றி வந்தோம்!

மிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா எனத் தென்னிந்தியா முழுவதையும் நான்கு மணி நேரத்தில் சுற்றி வர முடியுமா? நாங்கள் சுற்றி வந்தோமே!

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு அருகே 10 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் தென்னிந்தியப் பண்பாட்டுக் கலாசார மையம், ‘தக்‌ஷின்சித்ரா’.

தட்சிணம் என்றால், தெற்கு. சித்ரம் என்றால்,  காட்சி என்று பொருள். தென்னிந்தியர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை எடுத்துக்காட்டும் பல வகை வீடுகள், கலைப் பொருட்கள், தொழிற்கருவிகள் எனப் பல விஷயங்கள் அடங்கிய பொக்கிஷ உலகம். இந்த தக்‌ஷின்சித்ராவை உருவாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த டெபோரோ தியாகராசன் என்பவர். நமது கலாசார விஷயங்களை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இடத்தை உருவாக்கினாராம்.

இங்கே ஒவ்வொரு வீட்டிலும், அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நெசவாளர்கள், குயவர்கள், மீனவர்கள் என இதுவரை நாங்கள் பெயராக மட்டுமே கேள்விப்பட்ட பல்வேறு தொழில் செய்பவர்களின் வீடுகள், எங்களை மிகவும் கவர்ந்தன. பொம்மலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மண்பானை செய்வது, ஓவியம் வரைவது என நாள் முழுவதும் இங்கே பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்த்து ரசித்தோம். மாட்டு வண்டியில் ஜல் ஜல் பயணம் செய்தோம். அது, அப்பாவின் பைக் பயணத்தைவிட ஜாலியாக இருந்தது. எல்லாம் முடிந்து கிளம்பியபோது, சொந்த ஊரைவிட்டே கிளம்புவதுபோல மனம் வலித்தது.

- ஜெ.அசிண்டா சோபியா, ர.பவித்ரா, ஹெச்.ரக்‌ஷனா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick