சூப்பர் கேர்ள் ஒலிவியா

லிவியா ஃபார்ன்ஸ்வொர்த் (Olivia Farnsworth)...

இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷயர் (West Yorkshire) நகரைச் சேர்ந்த இந்த 7 வயது சிறுமியைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, ஒலிவியாவுக்கு ஒரு கார் விபத்து நடந்து, உடம்பிலிருந்து ரத்தம் கொட்டியது. பார்த்தவர்கள் பதறிவிட்டார்கள். ஆனால், சாலையில் இருந்து எழுந்த ஒலிவியா, அமைதியாக வீட்டுக்குச் சென்றாள். அம்மா, அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். “ஆமா, என் மேல கார் ஏறியது. ஆனா, வலி இல்லை’’ என்றாள் ஒலிவியா.

‘‘அது மட்டுமா? தொடர்ந்து மூன்று நாட்கள் தூங்காமலும் இருந்தாள். ஒலிவியாவுக்குப் பசி எடுக்கவில்லை. நான் கட்டாயப்படுத்திதான் சாப்பிடவைக்கிறேன். அதுவும் அவளுக்குப் பிடித்த மில்க்‌ஷேக்கா இருக்கணும். எவ்வளவு நேரம் விளையாடினாலும் சோர்ந்துபோகவே மாட்டாள்’’ என்று அடுக்கினார், ஒலிவியாவின் அம்மா நிக்கி.

ஒலிவியாவைப் பரிசோதித்த டாக்டர், ‘‘இதுக்கெல்லாம் காரணம், குரோமோசோம் 6 என்கிற குறைபாடுதான். உலக அளவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேருக்கு இந்தக் குறைபாடு இருக்கு. ஒவ்வொருவருக்கும்  வலியின்மை, பசியின்மை, தூக்கக் குறைபாடு என ஏதாவது ஒன்றுதான் இருக்கும். ஆனால், ஒலியாவுக்கு எல்லாமே இருப்பது ஆச்சர்யம்’’ என்கிறார்.

ஒலிவியாவைச் சுற்றி இருப்பவர்கள், ‘அயர்ன் கேர்ள்’ என்றும் ‘சூப்பர் பவர் கேர்ள்’ என்றும் அழைத்து, சூப்பர் பவர் கேரக்டராக கார்ட்டூன் வரைகிறார்கள். ஒலிவியாவும் ஜாலியாக போஸ் கொடுக்கிறாள்.

‘‘குறைகளை நினைத்து வருந்தாமல், எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என ஜாலியாக வலம் வருகிறார் ஒலிவியா.

- பா.நரேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick