ஜாலி உலகம் ஜூட்டோபியா!

ருவேளை, மனித இனமே தோன்றாமல் இந்தப் பூமி முழுவதும் விலங்குகளால் நிறைந்திருந்தால்? அதுதான் ஜூட்டோபியா (Zootopia). டிஸ்னி தயாரிப்பில், பைரன் ஹோவர்ட் (Byron Howard) மற்றும் ரிச் மூர் (Rich Moore) இயக்கத்தில் வந்திருக்கும் அட்டகாசமான அனிமேஷன் படம்.

விலங்குகளால் இயங்கும் தலைநகரம், ஜூட்டோபியா. அங்கே ஒரு முயல், அதிரடி போலீஸ் ஆகலாம். கம்பீரமான புலி ஒன்று, கிளப்பில் டான்ஸ் ஆடலாம். எனவே, காவல் துறையில் சேர்ந்து சாகசம்செய்ய ஆசைப்படுகிறது, ஜூடி ஹாப்ஸ் என்கிற பெண் முயல்.  காவல் துறையிலும் சேர்கிறது. ஆனால், அங்கே சின்னச்சின்ன எடுபிடி வேலைகளே கொடுக்கப்படுகின்றன. காரணம், வேட்டையாடும் பெரிய விலங்குகளே தலைமைப் பணிகளைச் செய்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், திடீரென நகரில் சில விலங்குகள் கடத்தப்படுகின்றன. அதில், ஒரு விலங்கைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வம்படியாகக் கேட்கிறது ஜூடி. ‘48 மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால், வேலையை விட்டுப் போய்விட வேண்டும்’ என நிபந்தனை விதிக்கிறது, உயர் அதிகாரியான சீஃப் போகோ என்கிற காட்டெருமை. நிக்கோலஸ் என்கிற நரியின் உதவியுடன் களத்தில் இறங்கும் ஜூடி, தனது திறமையை நிரூபித்ததா என்பதுதான் மீதிக் கதை.

எந்தெந்த விலங்குகளுக்கு என்னென்ன வேலைகள் பொருத்தமாக இருக்கும் என ஸ்கெட்ச் போட்ட விதம், அத்தனை கலாட்டா. அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் கதாபாத்திரமாக ‘ஸ்லாத்’ என்ற மிக மெதுவாக நகரும் கரடி, நகரின் மேயராக சிங்கம், துணை மேயராக, தலையாட்டும் ஆடு, தாதாவின் அடியாட்களாகக் கரடிகள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அதகளம் செய்கின்றன.

ஒரு கார் குறித்த முகவரி வாங்கச் செல்லும்போது, அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஸ்லாத்களிடம் மாட்டிக்கொண்டு ஜூடி திணறும்போது, வெடிச்சிரிப்பில் தியேட்டர்  குலுங்குகிறது. அந்தக் கரடிக்கு, படுவேகமாக, விறுவிறுப்பாகச் செல்லும் அமெரிக்க சீரியலின் பெயரான ஃப்ளாஷ் என வைத்திருப்பது செம கலாய்.

அனிமேஷன் படங்களின் திருட்டு டிவிடி விற்பது, பெரிய விலங்குகளுக்கு உயர்வான வசிப்பிடம், ஐஸ்க்ரீம் பார்லரில் மாறி மாறி ஐஸ் ஊட்டிக்கொள்ளும் யானை ஜோடி, ஃபிங்கர் சிப்ஸ் போல பாக்கெட் புல்லுக்கட்டைச் சாப்பிடும் ஆடு, செல்ஃபி எடுத்துக்கொள்ளும் விலங்குகள் என,  படம் முழுக்க சிரிப்போ சிரிப்பு.

‘தலைமைப் பதவிக்கு உருவமோ, இனமோ முக்கியம் இல்லை, திறமைதான் முக்கியம். இங்கு யாரும் எதுவாகவும் ஆகலாம், எல்லோரும் சமம்’ என ஜூடி கூறுவதுடன் படம் முடிகிறது.

குழந்தைகளோடு, பெரியவர்களும் பார்த்துக் குதூகலிக்கவேண்டிய  படம், ஜூட்டோபியா.

- பா.ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick