வருங்கால வாக்காளப் பெருமக்களே...

லோ... ஹலோ... மைக் டெஸ்ட்டிங், தேர்வுக் களத்தில் இறங்கி மதிப்பெண்களை அள்ள, உங்கள் பொன்னான நேரத்தைத் திட்டமிட்டு செலவழித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் கமிஷனும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்றால் என்ன? தேர்தலுக்கான அறிவிப்பு முதல் ஆட்சி அமைப்பது வரை என்னவெல்லாம் நடக்கிறது?  வருங்கால வாக்காளர்களான நீங்களும் தெரிஞ்சுக்கலாமே!

பெரும்பான்மை பலம் பெற்ற கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார்கள். முதலமைச்சர், அவருக்குக் கீழ் பணியாற்றப்போகும் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார். ஆளுநர், இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

தேர்தலில் வென்ற கட்சி, மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில், பாதிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பர். அவர்களே   (தமிழகத்தில் மொத்தம் 234 அதில் பாதிக்கும் மேல் 118), ஆட்சி அமைக்கும் தகுதி பெறுவார்கள். எந்த ஒரு கட்சியும் இத்தனை சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறாத நிலையில், அதிக இடங்களைப் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அப்படி அழைக்கப்படும் கட்சி, ஆதரவுக் கட்சிகள் அல்லது கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சியை அமைக்கும். இதற்கு சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.  

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பகுதிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். மற்றவர்கள் டெபாசிட் தொகை இழந்ததாக அறிவிக்கப்படுவார்கள்.

தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் தேதி, திரும்பப் பெறும் தேதி, தேர்தல் நடக்கும் தேதி, வாக்குகள் எண்ணும் தேதி ஆகியவற்றை அறிவிக்கும். அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து தேர்தல் ஆணையம் முழு அதிகாரத்தையும் பெற்ற அமைப்பு ஆகிவிடும்.

போட்டியிட இருக்கும் கட்சிகள் தனித்தோ, பிற கட்சியுடன் கூட்டணி அமைத்தோ போட்டியிடுவார்கள். தங்கள் கட்சிக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வார்கள். எந்தக் கட்சியிலும் சாராமல் தனித்தும் (சுயேட்சையாகவும்) போட்டியிடலாம். ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட முடிவுசெய்பவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்வார். தேர்தலில் போட்டியிட, 25 வயதுக்கு மேற்பட்டவராக, ஏதாவது ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்ற, இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

வேட்புமனுவில், வேட்பாளரைப் பற்றிய சுய விவரங்கள், சொத்து விவரங்கள் போன்ற தகவல்களைக் குறிப்பிட வேண்டும். டெபாசிட் தொகையாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். மனு தாக்கலின்போது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களை ஒருவர் முன்மொழிய வேண்டும். பிற சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவர்கள், வாக்குரிமைபெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வேட்புமனுக்கள் பரிசீலனையில், போதிய தகுதிகள் இல்லாத வேட்பாளர்கள், முறையான ஆவணங்கள் இல்லாத, தவறாக நிரப்பப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதி உடைய வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசியக் கட்சிகளுக்கு, அந்தக் கட்சிகளின் சின்னங்களையும், பிற சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு, தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் சின்னங்களும் வழங்கப்படும்.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும், இறுதிப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள், சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள். பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் அகர வரிசைப்படி வேட்பாளர்களைப் பிரித்துவைப்பார்கள்.

வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளோ, பணமோ வழங்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உண்டு. ஒரு வேட்பாளர், தேர்தல் ஆணையம் சொல்லும் அளவுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு, அந்தச்  செலவுக் கணக்குகளை ஆணையத்துக்கு அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில், பொதுமக்கள் வாக்களிப்பு முடிந்ததும், வாக்களித்த இயந்திரங்கள் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டு, வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

- சுப.தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick