Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாங்க விளையாடலாம்

ஆடலாம், பாடலாம், தேடலாம், ஓடலாம்

‘அப்பாடி! சம்மர் லீவு விட்டுட்டாங்க, நாளைக்கே கிராமத்துல இருக்கிற தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போய், அங்கே இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியா விளையாடுவேன்’ நகரத்தில் இருந்து கிராமத்துக்கு உற்சாகமாகச் செல்லும் சுட்டிகள்,  என்னவெல்லாம் விளையாடலாம்?

ஆபியம்: முதுகில் கை ஊன்றித் தாண்டுதல்!

எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடும் சூப்பரான விளையாட்டு. சா, பூ, த்ரி போட்டு கடைசியில் மாட்டிக்கொள்பவர், குனிந்து நிற்க வேண்டும். அவரின் முதுகில் கை வைத்து, வரிசையாக மற்றவர்கள் தாண்ட வேண்டும். முதல் ஆபியம் சொல்லித் தாண்டும்போது, குனிபவர், கால் விரல்களைத் தொட்டபடி குனிந்திருக்க வேண்டும்.  இரண்டாவது ஆபியத்தில்    கால் விரல்களிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலும், மூன்றாவது தாண்டலுக்கு முட்டிகளையும், நான்காவது ஆபியத்தில் இடுப்பிலும் கை வைத்து நிற்க வேண்டும். இப்படியே 10 ஆபியம் வரை கை மேலே மேலே உயர்ந்துகொண்டே இருக்கும். யார், முதுகைத் தாண்ட முடியாமல் இருக்கிறாரோ, அவர் அடுத்ததாகக் குனிந்து நிற்க வேண்டும். கால்களை அகலமாக்குதல், கைகளால் உடம்பை உயர்த்துதல் ஆகியவற்றில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

நுங்கு வண்டிப் பந்தயம்

இந்த விளையாட்டில், நாம் ஓட்டப்போகும் வண்டியை நாமே உருவாக்க வேண்டும். பனை நுங்குகளைத் தோண்டி எடுத்த பின், கோம்பைகளை விட்டெறிந்துவிடுவார்கள். அதில் இரண்டை எடுத்துத் துளையிட்டு, இடையில் கம்பு செருக வேண்டும். அதைப் பிடித்துக்கொண்டு ஓட, நீளமான கவைக் கம்பால் அதைத் தள்ள வேண்டும். இதேபோல தயார்செய்திருப்பவர்களோடு பந்தயம் வைத்து, விளையாடி வெற்றி பெறுவது ஜாலியாக இருக்கும்.

விழாமல் விழுது தொங்கல்!

ஆலமரத்தில் நிறைய விழுதுகள் தொங்கும். அதில், எல்லோரும் சேர்ந்து சத்தம் போட்டுக்கொண்டு தொங்குவதே ஜாலிதான். அதில்கூட இரு அணிகளாகப் பிரிந்து, எந்த அணி அதிக நேரம் விழுதுகளிலிருந்து விழாமல், அதிக வீச்சில் ஆடுகிறார்கள் எனப் போட்டி போட்டு விளையாடுவார்கள்.

குலை குலையா முந்திரிக்கா!

இந்த விளையாட்டில், எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். சா, பூ, த்ரி போட்டு கடைசியில் மாட்டுபவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக உட்கார வேண்டும். உதாரணமாக, பூரணி என்கிற சிறுமி மாட்டிக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். பூரணி கையில் ஒரு துண்டு வைத்துக்கொண்டு, ‘குலை குலையா முந்திரிக்கா’ என்று பாடிக்கொண்டே அந்த வட்டத்தைச் சுற்ற வேண்டும். உட்கார்ந்திருப்பவர்கள், ‘நரியே, நரியே சுத்தி வா...’ என்பார்கள். பூரணி உடனே, ‘ஓட்டு மேலே ஏறுவேன்’ என்றதும், ‘ஈட்டியாலே குத்துவேன்’ என்று பதிலடி கொடுப்பார்கள். பாட்டின் முடிவில், அந்தத் துண்டை உட்கார்ந்திருப்பவர்களில் யார் மீதாவது போட வேண்டும். பூரணி, சுந்தர் மீது துண்டைப் போடுகிறார் என்றால், சுந்தர், பூரணியைத் துரத்துவார். பூரணி, வட்டத்திலேயே ஓடி, சுந்தரின் இடத்தில் உட்கார்ந்துவிட வேண்டும்.  உட்காருவதற்குள் சுந்தர் பூரணியைத் தொட்டுவிட்டால், பூரணி, மீண்டும் பாட்டுப் பாடி ஓட வேண்டும். பூரணியைத் தொட முடியாவிட்டால், சுந்தர் விளையாட்டைத் தொடர வேண்டும்.

கிட்டி, புள்

கிட்டி என்பது நீளமான குச்சி, புள் என்பது இருபுறமும் கூர்மையாகச் சீவப்பட்ட சின்னக் குச்சி. ஒரு குழியின் முனையில், புள்ளை வைத்து, கிட்டியால் கெந்திவிட்டு, கிட்டியைக் குழியின் மீது வைக்க வேண்டும். எவ்வளவு தூரம் விழுகிறதோ, அந்த இடத்திலிருந்து எதிர் அணியினர் கிட்டியைச் சரியாக அடித்துவிட்டால், கெந்தியவர் அவுட். இல்லாவிட்டால், அவர் ஆட்டத்தைத் தொடர்வார். அடுத்த கெந்தலின்போது, அந்த தூரத்திலிருந்து கிட்டியால் தடுத்து, திருப்பி அனுப்புவார். அந்த இடத்திலிருந்து குழிக்கு எவ்வளவு காலடிகள் இருக்கிறதோ, அதுவே கெந்தியவருக்கான பாய்ன்ட். இரு அணிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரை, முதலில் அடையும் அணிக்கே வெற்றி.

கிச்சுக் கிச்சு தாம்பாளம்!

இருவர் ஆடும் விளையாட்டு இது. இருவரும், மணலில் எதிர் எதிராக அமர்ந்துகொள்ள வேண்டும். மணலில் பாம்புபோல குவித்துக்கொண்டே போய், எதிரே இருப்பவருக்குத் தெரியாமல், சிறு குச்சியை அதற்குள் மறைத்துவிட வேண்டும். அந்தக் குச்சியை எதிரே இருப்பவர் கண்டுபிடித்துவிட்டால், வெற்றிபெற்றவராவார். இல்லாவிட்டால் தோல்விதான்.

கோலி அல்லது பளிங்கி

கோலி விளையாட்டில், பலவிதமான ஆட்டங்கள் உள்ளன. ஒரு குழியைத் தோண்டிக்கொள்வர். குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியைத் தூக்கி எறிந்து, குழிக்குள் விழச்செய்ய வேண்டும். மூன்று முறை குழிக்குள் விழவைக்க முடியாதவர்கள் தோற்றவர்கள். இதுபோல வட்டத்தில் இருந்து கோலியை வெளியே கொண்டு வரும் ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும்.

பம்பரம்

அபீட் எடுக்க, கடைசியில் மாட்டுபவரின் பம்பரத்தை, ஒரு வட்டம்போட்டு அதில் வைக்க வேண்டும். மற்றவர்கள், பம்பரத்தில் குத்துவிட்டு அந்தப் பம்பரத்தை வெளியே எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும்போது, பம்பரம் வட்டத்துக்குள்ளே மாட்டிக்கொண்டால், அவரும் மாட்டிக்கொள்வார். பம்பரம் வெளியே வந்ததும் எல்லோரும் அபீட் எடுக்க, கடைசியில் மாட்டுபவரின் பம்பரத்தில் ஆணியால் ஆக்கர் போடுவார்கள்.

மெள்ள வந்து கிள்ளிப் போ!

எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடும் விளையாட்டு இது. வட்டமாக, கால் நீட்டியபடி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அதில், ஒருவரின் கண்களை மட்டும் மூடிக்கொண்டு, ‘மல்லிகையே மல்லிகையே மெள்ள வந்து கிள்ளிப்போ’ என்று பாட்டுப் பாட, வட்டத்திலிருந்து யாரேனும் ஒருவர் வந்து, சத்தம் இல்லாமல் மெள்ளக் கிள்ளிவிட்டு, பழையபடி உட்கார்ந்துகொள்வார். மூடிய கண்களைத் திறந்ததும், யார் கிள்ளியது எனச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லோரும் கை, கால்களை ஆட்டியபடி குழப்புவார்கள். சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், கண்டுபிடிக்கப்பட்டவரின் கண்களை மூடி, பாட்டுப் பாட வேண்டும். இல்லையேல், மீண்டும் அவரின் கண்களைப் பொத்தியே ஆட வேண்டும்.

எத்துச்சில்லு!

மண்ணில் ஆறு அல்லது எட்டு கட்டங்களை வரைந்துகொள்ள வேண்டும். முதல் கட்டத்தின் வெளியே ஓட்டுச் சில்லை வைத்து, காலால் எத்திக்கொண்டே மறுபுறம் கொண்டு வர வேண்டும். கட்டங்களின் கோட்டில் சில்லு மாட்டிக்கொண்டால், அவர் அவுட். இதைப் பின்புறமாக எத்திக் கொண்டும் ஆடுவர்.

உங்களில் யாருக்காவது கிராமத்துக்குச் செல்லும் வாய்ப்பு இல்லையா? அதனாலென்ன, இந்த விளையாட்டுகளை நகரத்து வீதிகளிலேயே விளையாடி, கிராமத்தை இங்கே கொண்டு வாருங்கள், கோடையைக் கொண்டாடுங்கள்.

- த.க.தமிழ் பாரதன், ச.மோகனப்பிரியா, அட்டை: சசிகுமார் படங்கள்: வீ.சக்தி அருணகிரி,அ.குரூஸ்தனம்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
புதிரோடு விளையாடு!
த்ரில் த்ரில் தீம் பார்க்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close