அக்கக்கா கிளி எப்படிப் போச்சு?

காலையில் சாப்பிட்ட கையோடு, சூரியனா, நாங்களா? பார்த்துடுவோம்னு மரத்தடியில் கூடி இருந்தாங்க சுட்டீஸ் கேங். ‘‘இன்னிக்கு என்ன விளையாடப் போறீங்க?’’ எனக் கேட்ட அடுத்த நிமிஷம், நான்கு குழுவாகப் பிரிஞ்சு கூடிப் பேசினாங்க. இதோ, அவங்களோட ஆட்டம் ஆரம்பம்...

அளந்து அளந்து குதி!

ஒரு வட்டம் போட்டு, அதில் வாணி  என்ற சிறுமி  திரும்பி நின்று, தன் தலைக்கு மேல் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். அது, பின்புறமாக கொஞ்ச தூரம் தள்ளி விழுந்தது. விளையாட்டில் சேர்ந்த மற்றவர்களில் ஒரு சுட்டி, ‘‘ஆறு” எனச் சொல்ல, அதே எண்ணிக்கையில் நொண்டி அடித்து, வட்டத்தைவிட்டு வெளியேறி, அந்தக் கல்லை அடைந்தார் வாணி. பிறகு, அதே ஆறு எண்ணிக்கையில் நொண்டி அடித்துக்கொண்டே அந்தக் கல்லை, கால்களால் எத்தி, வட்டத்துக்குள் சேர்த்ததும், எல்லோரும் கை தட்டினார்கள்.

‘‘எப்பூடி? எத்தி விளையாடுறதில் என்னை அடிச்சுக்க முடியாது’’ எனக் குட்டி பாரதியாராக மீசையை முறுக்கினார்.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடுவார்கள். குறைந்த எண்ணிக்கையில் கல்லை அடைந்து, வட்டத்தில் சேர்ப்பதுதான் இந்த விளையாட்டின் சவால்.

தெளி தெளி, தண்ணீர் தெளி!

எங்கிருந்தோ ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில்  தண்ணீரோடு சிவக்குமார் வந்ததும், ‘‘ஏய்... நான் வரேன் நான் வரேன்” எனக் கும்பல் கூடியது.

‘‘இதான் தண்ணீர் விளையாட்டு. தரையில் ஒரு வட்டம், அதுக்குள்ளே தண்ணீர் வாளியை வெச்சுடணும். சாட் பூ ட் த்ரீ போட்டு தோற்கிறவங்க, அந்த வட்டத்தில் நிற்கணும். மத்தவங்க கொஞ்சம் தள்ளி பெருசா ஒரு வட்டம் போட்டு, அதில் நிற்கணும். ரெடி சொன்னதும், சின்ன  வட்டத்தில் இருக்கிறவன், கையால் தண்ணீரை அள்ளி, மத்தவங்க மேலே தெளிக்கணும். வெளிவட்டத்தில் இருக்கிறவங்க தண்ணீர் மேலே படாமலும் வட்டத்தை விட்டு வெளியே போகாமலும் தப்பிக்கணும். தண்ணீர் மேலே பட்டால் அவுட்”  என்றான் சிவக்குமார்.

அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற ஜாலி விளையாட்டுதான்.

டப்பா டான்ஸ்!

இரண்டு பேர் தரையில் எதிர் எதிரே உட்கார்ந்து, உள்ளங்கால்களை சேர்த்ததும்,  மத்தவங்க தாண்ட ஆரம்பிச்சாங்க. கால் மேல் கால், அந்தக் கால்கள் மேலே கைகள் என உயரம் அதிகமாக அதிகமாக, ஒலிம்பிக் ஹை ஜம்ப் வீரர்களாக மனசில் நினைச்சுக்கிட்டு ஓடிவந்து, உற்சாகமாகத் தாவினாங்க நம்ம சுட்டீஸ்.

அக்கக்கா கிளி!

எல்லோரும் வட்டமாக அமர்ந்து கால்களை நீட்டிக்கிட்டாங்க. உட்கார்ந்தவாறே சுற்றி சுற்றி வந்த, ‘‘அக்கக்கா கிளி எப்படிப் போச்சு? அக்கக்கா கிளி செத்துப்போச்சு... எப்படிப் போச்சு?  இப்படிப் போச்சு’’ என கைதட்டிக்கிட்டே பாடினாங்க. அப்புறம், ஒருத்தர் மேலே ஒருத்தர் படுத்துக்கிட்டு பாட்டைத் தொடர, சிரிப்பும் ஆரவாரமாக அந்த இடமே கலகலத்தது.

- ச.மோகனப்பிரியா, படங்கள் : வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick