மேரி க்யூரி - நோபல் பரிசு பெற்ற முதல் பெண்!

நவம்பர் 7 மேரி க்யூரி பிறந்த தினம்

* 1867 நவம்பர் 7-ம் தேதி, போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் பிறந்தார், மேரி க்யூரி (Marie Curie). பெற்றோருக்கு இவர் ஐந்தாவது குழந்தை. ஆசிரியர்களான க்யூரியின் பெற்றோர், போலந்து நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள். அதனால், பல சிரமங்களைச் சந்தித்தனர்.

* தன்னுடைய பத்தாவது வயதில் உறைவிடப் பள்ளியில் சேர்ந்த மேரி க்யூரி, சிறப்பாகக் கல்வி கற்று, தங்கப்பதக்கம் பெற்றார். மேற்படிப்பு படிக்க தனது மூத்த சகோதரியுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அதாவது, சகோதரியின் படிப்புக்காக இவர் வேலைக்கு சென்று உதவுவது. சகோதரி படிப்பு முடித்து வேலையில் சேர்ந்ததும், இவரது மேற்படிப்பு படிப்புக்கு அவர் உதவுவது. இதன்படி, வீடுகளுக்குச் சென்று பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார் மேரி க்யூரி.

* தந்தை போல இயற்பியல் துறையில் சிறந்து விளங்க, இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதுகலை பட்டம் படிக்கும் லட்சியத்துடன், 1891-ம் ஆண்டு  பாரிஸுக்குப் பயணமானார். காலையில் படிப்பு, மாலையில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு என உழைத்து, 1893-ம் ஆண்டு, இயற்பியலில் பட்டம் பெற்றார். பேராசிரியர் காப்ரியல் என்பவரின் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து பணிபுரிந்தார்.

*
தன்னுடைய காந்தம் பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளால் ஐரோப்பா முழுவதும் பெருமையாகப் பேசப்பட்டவர் பியரி க்யூரி (Pierre Curie). 1895-ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் மேரி. திருமணத்துக்குப் பிறகு ‘மேடம் மேரி க்யூரி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1897-ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

* பியரி க்யூரி, மேரி க்யூரி இருவரும் இணைந்து கதிரியக்கச் செயல்பாடுகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு புதுவகைத் தனிமங்களைக் கண்டறிந்ததாக 1898-ம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டனர். அந்தத் தனிமங்களுக்கு பொலோனியம் (Polonium) மற்றும் ரேடியம் (Radium) என்று பெயரிட்டனர். மேரி க்யூரி, தன் தாய்நாடான போலந்தைக் கௌரவிக்கும் வகையில் ‘பொலோனியம்’ என்றும், லத்தீன் மொழியில் ‘ஒளிக்கதிர்’ என்று பொருள்கொண்ட ரே (ray) என்ற சொல்லில் இருந்து ரேடியம் என்றும் பெயரிட்டார்.

* 1903-ம் ஆண்டு கதிர் இயக்கத்தையும் அதை வெளிப்படுத்தும் பொருட்களையும் கண்டுபிடித்தற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார் மேரி க்யூரி.

* சொர்போன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பியரி க்யூரி, 1906-ம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது பணியை, மேரிக்கு வழங்கியது பல்கலைக்கழகம். ஓர் உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் நினைவாக உருவாக்கும்  கனவுடன், அந்தப் பதவியை ஏற்றார்் மேரி. சொர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியர் ஆனார்.

* ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்து, ரேடியத்தை தனியே பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததற்காக 1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார் மேரி க்யூரி.

*
நோபல் பரிசு பெற்ற முதல் பெண், இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர், இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் போன்ற சிறப்புகளை மேரி பெற்றார்.

*
மேரியின் வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உடற்கட்டிகளைக் குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

*
1914-ம் ஆண்டு நடந்த முதல் உலகப் போரின்போது, ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ்ரே கருவிகளைப் பொருத்தி, மருத்துவ சிகிச்சைக்கு உதவினார். பாரிஸ் மற்றும் வார்சா நகரங்களில் ‘க்யூரி’ பெயரில் மருத்துவ நிறுவனங்களை உருவாக்கினார். இன்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான முக்கிய மையங்களாக அவை உள்ளன.

*
வாழ்நாள் முழுவதும் ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் என அர்ப்பணித்தவர், கதிர்வீச்சின் பாதிப்புக்கு அதிகமாக ஆளானார். அதனால், அப்லாஸ்டிக் அனாமியா (Aplastic anemia) என்கிற ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட மேரி க்யூரி, தனது 66-வது வயதில், 1934-ம் ஆண்டு உலகை விட்டுப் பிரிந்தார்.  மேரி க்யூரி கண்டறிந்த ரேடியம் வெளிப்படுத்தக்கூடிய காமா கதிர்கள்தான், இன்று புற்றுநோய் சிகிச்சைக்குப் பெருமளவில் பயன்படுகின்றன.

உலகின் நன்மைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மேரி க்யூரியை வணங்குவோம்!

- சு.சூர்யா கோமதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்