நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!

அசரவைக்கும் #VikatanHackathon 2016

 

“என் பேரு பிரேம். இப்போதைக்கு என்னோட லட்சியம், எங்க வீட்டு ஜிம்மியை ஓட்டப்பந்தயத்துல தோற்கடிக்கணும்” என்று வித்தியாசமான அறிமுகம் தந்தார் 6-ம் வகுப்பு படிக்கும் பிரேம்.

“பள்ளிக்கூடத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியில் எப்பவுமே நான்தான் முதல் இடம் பிடிப்பேன். ஓட்டப்பந்தயம் ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு அண்ணாவையே ஜெயிச்சேன். ஆனால், எங்க செல்ல நாய் ஜிம்மி, என்னைவிட வேகமா ஓடுது. எல்லாத்திலும் ‘நம்பர் ஒன்’னா இருக்கிற நான், ஜிம்மிகிட்ட தோத்துட்டேன்.  அதான் ஜிம்மியை ஜெயிச்சே ஆகணும்’’ என்று வேடிக்கையாக பதில் சொன்னார் பிரேம்.

சரி, இந்த லட்சியத்தை அடைய வாழ்த்துகள். பிரேமின் வாழ்நாள் லட்சியம் என்ன?
‘‘உசேன் போல்ட் சாதனையை முறியடிகிறது. ஆனால், ஒலிம்பிக்கில் ஜெயிக்க கடுமையான பயிற்சி வேணும். நல்ல கோச் வேணும். நல்ல ஷூ, எனர்ஜி டிரிங்க் இப்படி எக்கச்சக்கமான தேவைகள். இதுக்கெல்லாம் அப்பாகிட்டே பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு. அதனால, எந்தப் பயிற்சியும் எடுக்க முடியலை” என வருந்தியவர்,  ஜிம்மியோடு மட்டும் போட்டிபோடுகிறார்.

இப்படி பிரேமை போல லட்சியத்தை சுமந்துக்கொண்டிருக்கும் சுட்டீஸா நீங்கள்? உங்களுக்காகவே ‘கோ சாம்ப்’ (GO Champ) என்ற ஐடியாவை உருவாக்கி இருக்கிறார்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கீஸ்.

“இந்தியாவில் ஏகப்பட்ட விளையாட்டுத் திறன் வாய்ந்த மாணவர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுவதுதான் ‘கோ சாம்ப்’ உருவாக்கியதன் நோக்கம்.
 விளையாட்டில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கான ஒரு மேடை. மாணவர்களை, ஸ்பான்சர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுடன் இணைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்” என்கிறார் இந்த ஐடியாவை விகடன்  ஹேக்கத்தானில் முன்வைத்த நக்கேஷ்.

கோ சாம்ப் எப்படி செயல்படும்?


இதைப் புரிந்துகொள்ள பிரேம் சொன்னதையே  உதாரணமாக எடுத்துக்கொள்வோம். தனது பள்ளியில்  சிறந்த விளையாட்டு வீரராக இருக்கிறார் பிரேம். தன் திறமையை மேம்படுத்திக்கொள்ள உதவி தேவைப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் GO Champ ஆப் மூலம் பிரேமைப் பற்றிய தகவல்களை பதிவேற்றுவார். பயிற்சிகள்,  விளையாட்டு உபகரணங்கள், சத்தான உணவுகள் போன்றவற்றுக்கு ஆகும் செலவு போன்ற தகவல்கள் அதில் இடம்பெறும். பிரேமின் ஓட்டப்பந்தயத் திறனை, வீடியோவாகவும் இதில் பதிவேற்றலாம்.

பிரேம் பற்றிய தகவல், ஸ்பான்சர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆப் வழியாக சென்று சேரும். பிரேமின் திறமையைப் பார்த்து ஸ்பான்சர் நிறுவனம் உதவ முன்வரும். பயிற்சியாளர்களும் கிடைப்பார்கள். இப்போது, பிரேமின் பயிற்சிக்கான முட்டுக்கட்டைகள் தகர்ந்துவிட்டன. பிறகு என்ன? கூடிய விரைவில் ஒலிம்பிக் ட்ராக்கில், உசேன் போல்ட் சாதனையை முறிடிக்கும் ஓட்டத்தில் பிரேம் இருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்