நாமும் ஆகலாம் சிந்து!

நாமும் சிந்துவாக மாற என்ன செய்ய வேண்டும்? பேட்மின்டன் விளையாட்டுக்கான அடிப்படை விஷயங்கள்..

சீனக் குழந்தைகள் விளையாடிய ‘தை தியான் சை' அல்லது, ஜப்பானின் ‘ஹெனட்சுகி' விளையாட்டில் இருந்து 19-வது நூற்றாண்டில் இந்த இறகுப்பந்து என்கிற பேட்மின்டன் விளையாட்டு உருவானதாக கூறப்படுகிறது.

பெரியவர் முதல் சிறியவர் வரை யார் வேண்டுமானாலும் பேட்மின்டன் விளையாடலாம். ‘ராக்கெட்' என அழைப்படும் பேட், நெட், கோழி இறகுகளால் செய்யப்பட்ட பந்து போன்றவை பேட்மின்டன் விளையாட்டுக்குத் தேவை.

8 வயதில் இருந்து பேட்மின்டன் பயிற்சியில் ஈடுபடலாம். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட பேட்மின்டன் சங்கம் இருக்கும். அந்த மையத்தை அணுகவும். பயிற்சியில் சேரும் குழந்தைகளுக்கு அகில இந்திய பேட்மின்டன் மையத்திடம் இருந்து ஒரு 'கோட்வேர்டு' வழங்கப்படும். இதனைப் பெறுவதற்கு வயது சான்றிதழ் அவசியம். நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றால், அந்த மாவட்ட பேட்மின்டன் சங்கமே அகில இந்திய பேட்மின்டன் சங்கத்திடம் இருந்து 'கோட்வேர்டு' பெற்றுத் தரும்.

காலை 5 மணி முதல் 7 மணி வரை ஃபிட்னெஸ் பயிற்சி மிக அவசியம். 7 மணி முதல் 9 மணி வரை பேட்மின்டன் பயிற்சி. மாலையிலும் 3 மணி நேரம் நிச்சயமாக பயிற்சியில் ஈடுபட வேண்டும். பயிற்சியின்போதே உங்களது வேகம், ஸ்டோக்ஸ்

முறைகள், மூவ்மென்ட்ஸ் ஆகியவற்றைப் பார்த்து, நீங்கள் சிங்கிள்ஸ் ஆட்டத்துக்கு ஏற்றவரா, அல்லது டபுள்ஸ் விளையாட வருமா எனத் தீர்மானித்து, பயிற்சி அளிப்பர்.

பேட்மின்டனில் 13, 15, 17, 19 என்ற வயது அடிப்படையில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்படுபவர்கள். இன்டர் டிஸ்ட்ரிக்ட் போட்டிகளில் பங்கேற்பார்கள். இன்டர் டிஸ்ட்டிரிக்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்கள் தமிழக அணிக்கு தேர்வுசெய்யப்பட்டு, தேசிய அளவில் பங்கேற்க அனுப்பப்படுவார்கள்.

தேசிய அளவிலான போட்டிகளில் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்கள்தான் தமிழகம் சார்பாக பங்கேற்க முடியும். அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் இன்டிவிஜுலாக தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கலாம். மாவட்ட அளவிலானப் போட்டிகளின்போதே, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஏராளமானோர் ஸ்பான்சர் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாள் பயிற்சிக்கு முன்பும் முளைவிட்ட பயிர், தண்ணீரில் ஊறவைக்கப்பட்ட கொண்டைக்கடலை உட்கொண்டால், உடலுக்கு சக்தி கிடைக்கும். புரோட்டீன் அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு, ஐஸ்கிரீம் வகைகளைத் தவிர்க்கவும்.

குனிந்து நிமிர்ந்து, வளைந்து நெளிந்து ஆட வேண்டிய ஒரு ஆட்டம் பேட்மின்டன். உடலின் அனைத்து பாகங்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதனால், கண்டிப்பாக வார்ம் அப் செய்துவிட்டுத்தான் கோர்ட்டுக்குள் இறங்க வேண்டும். இல்லையென்றால், காயமடைந்து விடுவோம்.

பேட்மின்டனில் வேகமாக ஸ்மாஷ் அடிக்கும்போது பந்தை எதிர்கொள்ள மனமும் மூளையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதனால், யோகாவில் ஈடுபடுவது அவசியம். நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் ஆகியவை பேட்மின்டனில் சிறப்பாக ஜொலிக்க உதவும்.

பேட்மின்டன் ராக்கெட்டை கையில் தூக்கிட்டீங்களா? இனி, நீங்களும் சிந்துதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்