இது அஞ்சலி உப்பு!

தமிழ்மகன், ஓவியம் : ஸ்யாம்

‘‘ஐ... எவ்ளோ தண்ணி... எவ்ளோ தண்ணி!'' என துள்ளிக் குதித்தாள் அஞ்சலி.

அவள் வாழ்நாளில் கடலை நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அத்தையின் ஊரான சென்னைக்கு இதற்கு முன்பும் வந்திருந்தாலும், கடற்கரைக்கு வந்தது இல்லை. நீர் அலையில் குதித்து விளையாடியபோது, சில துளிகள் அவள் வாய்க்குள் சென்றன. உவ்வே... ஒரே உப்பு!

‘‘இதுல யாரு உப்பைக் கொட்டினாங்க?’’ என ஆச்சர்யமாகக் கேட்டாள்.

சித்ரா அத்தைக்குச் சிரிப்பு தாளவில்லை. ‘‘இதுல யாரும் உப்பைக் கொட்டலை அஞ்சலி. இந்தத் தண்ணியில இருந்துதான் உப்பையே தயாரிக்கிறாங்க” என்றார்.

அஞ்சலியின் கண்கள் ஆச்சர்யத்தில் மேலும் அழகானது.  கடலை, தன் சிறிய கண்களால் அளந்து பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் பரந்து விரிந்து கிடந்தது. இவ்வளவும் உப்பா?

பக்கத்தில் இருந்த மாமாவிடம், ‘‘இந்தத் தண்ணீரில் இருந்து உப்பை எப்படி உருவாக்குறது?” எனக் கேட்டாள்.

‘‘தண்ணியை வெயிலில் வைத்தால் உப்பாகிடும்” என்றார்.

அஞ்சலி, ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டாள். `அப்படியானால், நம் வீட்டுக்குத் தேவையான உப்பை நாமே உருவாக்கலாமே' என்ற யோசனை உருவானது.

டி.வி விளம்பரங்களில் பார்த்திருக்கிறாள். வெவ்வேறு கம்பெனி உப்பை, வெவ்வேறு விளம்பரங்களில் கையில் வைத்திருக்கும் ஆன்ட்டி சிரிச்சுக்கிட்டே, ‘‘இது ......... உப்பு'' என அந்த உப்பின் பெயரைச் சொல்லி சிரிப்பார்.

`இந்தத் தண்ணீரை எடுத்துட்டுபோய் நாமே உப்பைத் தயாரிச்சு, அஞ்சலி உப்பு என அம்மாகிட்டே கொடுக்கலாமே' என நினைத்தாள். ஆர்க்கிமிடீஸ் மாதிரி ‘யுரேகா’ என கத்தவில்லை. ஆனால், மனசுக்குள் அப்படி ஒரு வேகம்.

தோளில் மாட்டியிருந்த ‘வாட்டர் பேக்'கில் இருந்த நல்ல நீரை கீழே ஊற்றிவிட்டு, கடல் நீரை நிரப்பிக்கொண்டாள். யாருக்கும் சொல்லவில்லை. சர்ப்ரைஸாக உப்பை உருவாக்கி அசத்துவதுதான் அஞ்சலியின் திட்டம்.

அன்று இரவுதான் ஊருக்கு கிளம்பினார்கள். வீட்டுக்கு வந்ததுமே, மொட்டைமாடிக்கு ஓடினாள் அஞ்சலி. அங்கே, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காகப் பயன்படுத்திய பழைய பிளாஸ்டிக் வாளி ஒன்று இருந்தது. தூசு படிந்திருந்த அதைக் கழுவித் துடைத்துவிட்டு, கடல் நீரை ஊற்றினாள். வெயில் படும்படியான இடத்தில் வைத்தாள்.

`நாளைக்கு இது உப்பா மாறினதும், அம்மாகிட்டே கொண்டுவந்து கொடுக்கணும். 'ஏய் செல்லக்குட்டி, இதை எப்படிச் செய்தே?'னு கேட்டு ஆச்சர்யப்படுவாங்க' என நினைத்துக்கொண்டாள்.

மூன்று நாட்களாக பள்ளியைவிட்டு வந்ததும் மாடிக்குச் சென்று பார்த்தாள் அஞ்சலி. நீர் அப்படியேதான் இருந்தது. தூசு, தும்புகள் அதில் விழுந்திருந்தன. சில பூச்சிகளும் விழுந்துகிடந்தன. அவளுக்குப் பொறுமையே போய்விட்டது.

சோகத்துடன் கீழே வந்தபோது, ‘‘அஞ்சலி, உனக்கு என்ன ஆச்சு? தினமும் வந்ததும் மாடிக்கு ஓடுறே. குருவி ஏதாவது கூடு கட்டியிருக்கா?'' எனக் கேட்டார் அம்மா.

``ஒண்ணும் இல்லே'' எனச் சொல்லிவிட்டு படிக்க அமர்ந்துவிட்டாள். அப்பா வீட்டுக்கு வந்ததும், அஞ்சலியின் சோகத்தைப் பற்றி அம்மா சொன்னார்.

அஞ்சலியை மடியில் அமர்த்திக்கொண்டு காரணத்தைக் கேட்ட அப்பா, அவளை மாடிக்கு அழைத்துவந்தார்.

‘‘உப்பை உருவாக்க நினைச்சது பெரிய விஷயம் செல்லம். நீர் ஆவியானால்தான் உப்பு கிடைக்கும். அதுக்கு, பாத்திகட்டி தண்ணீரைத் தேக்கணும். மரக்காணம் பீச்ல நிறைய உப்பளங்கள் இருக்கு. ஒருநாள் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். இயற்கை கொடுக்கும் விஷயம்தான் உப்பு. ஆனா, அதுக்கு மனிதர்களின் உழைப்பும் முக்கியம். மழை வந்துட்டா, அவங்களோட பல நாள் உழைப்பு கரைஞ்சுடும். இங்கே மழை வந்திருந்தா, இந்த வாளியில் வெச்சிருந்த நீர் எல்லாம் வீணாகி இருக்கும். ஒரு வாளி கடல் தண்ணியையே காப்பாத்த முடியலையே... ஏக்கர் அளவுக்கு உள்ள தண்ணியையும் அதில் உருவாகும் உப்பையும் பாதுகாக்கிறது எவ்ளோ கஷ்டம்! நமக்கு சுலபமா கிடைக்குதுனு வீணாக்கும் ஒரு துளி உப்பும் பல பேரின் உழைப்பு’’ என்றார்.

``புரிஞ்சதுப்பா. எதுவுமே சுலபமா கிடைச்சுடாது. எதையும் வீணாக்கக் கூடாது. இல்லையா அப்பா?’’ என்ற அஞ்சலியின் தலையை வருடினார்.

‘‘ஆமா. சுலபமா கிடைச்சுட்டா அதில் சுவை இருக்காது. சரி, அம்மாகிட்டே போய் பெரிய தட்டு வாங்கிட்டு வா’’ என்றார் அப்பா.

அஞ்சலி வேகமாகச் சென்று திரும்பினாள். அந்தத் தட்டில் தண்ணீரை ஊற்றிவைத்த அப்பா, ''நாளைக்கு சாயந்திரம் பாரு'' என்றார்.

மறுநாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் மாடிக்கு ஓடினாள் அஞ்சலி. அடிக்கும் வெயிலுக்கு தட்டில் ஊற்றியிருந்த நீர் காணாமல் போயிருந்தது. தூசு போல மெல்லியதாக வெள்ளைப் படலம் படர்ந்திருந்தது.

`ஐ... அஞ்சலி உப்பு!' என குஷியாகத் துள்ளினாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்