நேரு 50

நேர்வழி காட்டிய நேரு

நவம்பர் 14-ம் தேதி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நாள். குழந்தைகள் தினம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்து இந்தியாவுக்கு நேர்வழி காட்டியவர், ஜவஹர்லால் நேரு. அயல்நாடுகளுடன் நல்லுறவு, நம்நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டது மட்டுமல்ல... பிற நாடுகளின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது, பஞ்சசீலக் கொள்கை வகுத்தது எனப் பல அருஞ்செயல்களை ஆற்றியவர். 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று அழைக்கப்படுபவர். நேரு அவர்களிடம் நமக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருந்தாலும், நேருவுக்குப் பிடித்தவர்கள், குழந்தைகள். குழந்தைகள்மீது கொள்ளைப்பிரியம் கொண்டவர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேருவைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.

1.மலர்ந்த ரோஜா

 ரோஜா மலரை விரும்பி தன் சட்டைப் பையில் அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் நேரு. அதனால், ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்பட்டார். இந்த ரோஜாவின் ராஜா, 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி காஷ்மீர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய அப்பா மோதிலால் நேரு. புகழ்பெற்ற வழக்கறிஞர். அம்மா சொரூப ராணி.

2.குரு – சிஷ்யன்

 ஜவஹர்லால் நேருவுக்கு 16 வயது இருக்கும்போது, மேற்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹரோ எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூஷ னுக்கு அனுப்பப்பட்டார். அதற்கு முன் வேறு எந்தப் பள்ளிக்கும் சென்று நேரு படிக்கவில்லை. ஆனால், வீட்டிலேயே ஹோம் டியூஷன் மாதிரி, தனி ஆசிரியர்கள் பாடம் கற்பித்தனர். அப்படி பாடம் சொல்லிக் கொடுத்தவர்களில், பெர்டினான்ட் ப்ரூக்ஸ் என்பவர் மூன்றாண்டுகள் நேருவுக்கு ஆசிரியராக இருந்தார். இவர்தான் நேருவுக்குப் புத்தகங்களைப் படிப்பதிலும், அறிவியல் சிந்தனைகளிலும் ஆர்வத்தை ஊட்டினார்.

3.வெள்ளையர் மட்டும்

 பேருந்துகளில் தற்போது `மகளிர் மட்டும்' என்று எழுதியிருப்பதுபோல அப்போது,   ரயிலின் சில பெட்டிகளில் 'வெள்ளையருக்கு மட்டும்' என்று எழுதப்பட்டிருக்கும். இது, நேருவுக்கு ஆங்கிலேயர்மீது வெறுப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லை, நேரு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அவ்வப்போது ஆங்கிலேயரின் இனவெறியைக் கண்டித்துப் பேசுவார்கள். அது, நேருவின் பிஞ்சு மனதில் ஆங்கிலேயர் பற்றி ஆழ்ந்த வெறுப்பை உண்டாக்கிவிட்டது.

4. நம்பிக்கை பிறந்த நாள்!

 நேரு இங்கிலாந்துக்குப் படிக்கச் செல்வதற்கு முன், ஆசிய கண்டத்தின் வரலாற்றில் ஓர் அதிசயமான நிகழ்வு நடந்தது. அது 1904 – 1905-ம் ஆண்டுகளில் குட்டி நாடான ஜப்பானுக்கும் மிகப்பெரிய நாடான ரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டது. பெரிய நாடான ரஷ்யாதானே ஜெயித்திருக்க வேண்டும். ஆனால்,  குட்டியான ஜப்பான் ஜெயித்து விட்டது. இந்தச் சம்பவம், நேரு மனதில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. திட்டமிட்டுப் போராடினால் ஆங்கிலேயரை விரட்டிவிடலாம் என்று மனதுக்குள் திட்டமிட்டபடியே ஆங்கிலேய நாட்டுக்குப் படிக்கச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick