சிறகு விரிக்கும் கொக்கு! - புத்தக விமர்சனம்

கே.யுவராஜன்

யிரம் ரூபாய்க்கு வாங்கும் பொம்மையைவிட, நம் கையால் களிமண்ணில் செய்யும் ஒரு குட்டி உருவம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் அல்லவா? இரண்டு முக்கோணங்களை மலைகளாக்கி, அதன் நடுவில் ஒரு சூரியனைக் கொண்டுவந்து உருவாக்கும் ஓர் ஓவியம் உற்சாகத் துள்ளலை உண்டாக்கும் அல்லவா? அப்படி பெரும் மகிழ்ச்சியை, உற்சாகத் துள்ளலைக் கொடுக்க வந்திருக்கிறது, ‘கொக்குகளுக்காகவே வானம்’ என்ற ஒரிகாமி புத்தகம்.

ஒரிகாமி எனப்படும் ஜப்பானியக் கலை, உலகம் முழுக்க காகிதங்களை உயிர் பெறச்செய்து, வயது வித்தியாசமின்றி மகிழவைப்பது தெரியும். ஒரிகாமிக்காக ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் உள்ளன. தமிழில் இதற்கான முயற்சி மிக அரிதாகவே நடக்கும். அப்படி ஓர் அரிய பொக்கிஷமாக இந்தப் புத்தகம் உள்ளது. அழகான அட்டைப்படம், கைக்கு அடக்கமாகச் சதுர வடிவம் எனப் பார்க்கும்போதே புத்தகம் நம்மை ஈர்க்கிறது. ஒரிகாமி கலையின் தந்தை எனப் போற்றப்படும் அகிரா யோஷிசவா அவர்கள் பற்றிய குறிப்பு, ஆயிரம் கொக்குகள் செய்ய முயன்ற சிறுமி சசாகி, ஒரிகாமிக்கான அடிப்படை காகித மடிப்புகள் என அன்பும் அக்கறையுமாக ஆரம்பப் பக்கங்கள் நம்மைத் தயார்ப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்கிறது.

பூனை, பென்சில், சாமுராய் தொப்பி, ஆமை, வாத்து, குதிரை, கொக்கு என விதவிதமான உருவங்களை எப்படி உருவாக்குவது எனப் படங்களுடன் தரப்பட்டுள்ளது. வாலைப் பிடித்து அசைத்தால், கொக்கு சிறகுகளைப் படபடவென அடித்துக்கொள்வது அவ்வளவு அழகாக இருக்கிறது. பல உருவங்களைப் படைத்திருக்கும் நூலாசிரியர் தியாக சேகர் மற்றும் அவற்றுக்கு ஓவியங்களால் உயிர் கொடுத்திருக்கும் சண்முக வடிவேல் ஆகியோருக்கும் பலமான கைகுலுக்கல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick