சூப்பர் ஹீரோஸ்! - ராஜேஷ் தாமோதர் கச்சி - உயிர்க் காப்பான் | Super Heroes - Chutti Vikatan | சுட்டி விகடன்

சூப்பர் ஹீரோஸ்! - ராஜேஷ் தாமோதர் கச்சி - உயிர்க் காப்பான்

புனேவின் சிவாஜி நகர்ப் பகுதியில் ஓடும் ‘முலா-முத்தா’ ஆற்றங்கரையில்தான் ராஜேஷ் தாமோதர் கச்சியின் வீடு அமைந்திருந்தது. அது அவருக்கு மிகவும் பழகிய ஆறு. நடக்க ஆரம்பித்த வயதிலேயே அந்த ஆற்றில் நீந்திப் பழகிய அனுபவம் ராஜேஷுக்கு உண்டு. ஆற்றில் வெள்ளம் வந்தால், வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். கழுத்தளவு நீரில் நடந்துசென்று பிறருக்கு உதவும் பழக்கம், சிறுவயதிலேயே ராஜேஷுக்கு ஆரம்பித்துவிட்டது.

‘அடுத்தவங்களுக்கு உதவுறதுதான் நாம கடவுளுக்குப் பண்ற சேவை’ – இது ராஜேஷின் பாட்டி அடிக்கடி சொல்லும் வாசகம். அது அவரது மனத்தில் பதிந்துபோனது.

அப்போது ராஜேஷுக்கு 19 வயது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள டெங்கிள் பாலத்தின் மீது தன் நண்பர்களுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது, ஆற்றின் நடுவே செடி ஒன்றை பற்றியபடி ஒரு கை நீருக்கு வெளியே நீண்டிருந்தது. அது உதவி கேட்பதாகத் தெரிந்தது. ராஜேஷின் நண்பர்கள் பயந்து ஓடிவிட்டனர். ஆனால், ராஜேஷ் யோசிக்காமல் நீருக்குள் குதித்து, எதிர்நீச்சல் போட்டு அந்தக் கையை நோக்கிச் சென்றார்.

ஓர் இளம்பெண், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள். ராஜேஷ் அவளைப் பத்திரமாக மீட்டார். கரைக்கு வந்தும், கண்களில் பயம் குறையாமல் நடுங்கும் அந்தப் பெண்ணை, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
ராஜேஷின் பாட்டி, அந்தப் பெண்ணுக்கு மாற்று உடை கொடுத்தார். நெருப்பை மூட்டி குளிர்காயச் செய்தார். டீ போட்டுக் கொடுத்தார். பிறகு, அந்தப் பெண் யார் என்று விசாரித்தார்கள்.

‘வீட்டில் திருமண ஏற்பாடு செய்துவிட்டார்கள். அது எனக்குப் பிடிக்காமல் ஆற்றில் குதித்துவிட்டேன்’ என்றாள் அந்தப் பெண்.

ராஜேஷ், அந்தப் பெண்ணை அவளது வீட்டில் கொண்டுபோய்விட்டார். அவளது குடும்பத்தினர் ராஜேஷைக் கட்டிப்பிடித்து கண்ணீருடன் நன்றி சொன்னார்கள். ‘தம்பி, நீதான் எங்க கடவுள்!’ என்றார்கள்.

உயிர் பிழைத்த அந்தப் பெண்ணின் கண்களில் தெரிந்த நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ராஜேஷை நெகிழச் செய்தது. ‘நான் மட்டும் இவளைக் காப்பாற்றாமல் போயிருந்தால், இந்தக் குடும்பத்தின் சந்தோஷமே தொலைந்துபோயிருக்கும்’ என நினைத்த ராஜேஷ், உறுதியான முடிவு ஒன்றை எடுத்தார். இனி, உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரைக் கண்டாலும் காப்பாற்றுவேன்.

அதுமுதல் யாராவது ஆற்றில் தவறி விழுந்துவிட்டாலோ, உயிரைப் போக்கிக்கொள்ள குதித்துவிட்டாலோ, அந்த மனிதர்களைக் காப்பாற்றுவதையே கடமையாகச் செய்ய ஆரம்பித்தார். வாழ்க்கை பெற்றவர்கள் சொல்லும் நன்றி, ராஜேஷுக்கு மேலும் உத்வேகம் கொடுத்தது.

அதே பகுதியில் தள்ளுவண்டியில் பாவ் பாஜி, முட்டை புர்ஜி விற்கும் சாட் கடை போட்டிருக்கிறார் ராஜேஷ். கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். பாவ் பாஜிக்காக வெங்காயத்தை வேகவேகமாக வெட்டிக்கொண்டிருப்பார் ராஜேஷ். திடீரென மொபைலில் அழைப்பு வரும்.

‘ராஜூ பையா! ஆத்துல ஒரு சின்னப் பையன் விழுந்துட்டான்’ என்று குரல்  பதறும்.   அப்படியே தன் கடையை விட்டுவிட்டு, மொபைலில் பேசியபடியே ஓட ஆரம்பிப்பார் ராஜேஷ்.

சரியான நேரத்தில் சென்று அந்த உயிரைக் காப்பாற்ற முயல்வார். காப்பாற்றிக் கரை சேர்ப்பதுடன், தேவைப்பட்டால் அவர்களை அருகிலிருக்கும் சாஸூன் பொது மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்ப்பார்.
தண்ணீரில்  விழுந்த நபரின் குடும்பத்தினரிடம் சிகிச்சைக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் தன்னால் முடிந்த உதவி செய்வார் ராஜேஷ்.

‘இன்றைக்கு ஓர் உயிர் என்னால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதுதான் எனக்கு வேண்டும்’ என்று மன நிம்மதிகொள்வார். அதேசமயம், தன்னால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகும் நேரத்தில் கவலையில் மூழ்கிவிடுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick