Published:Updated:

'சிறந்த தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்'

விகடன் விமர்சனக்குழு
'சிறந்த தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்'
'சிறந்த தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்'

அக்.30,2011

'சிறந்த தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்'

உலகின் எல்லா மூலைகளிலும் தமிழன் கால்பதித்துவிட்டான். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை பல்வேறு உலக நாடுகளிலும் வசித்து வரும் தமிழரின் எண்ணிக்கை சுமார்7.4 கோடி.

கலாசார வேறுபாடுகளைத் தகர்த்தெரிந்து, அந்நாட்டின் தேவைகளுக்கு ஏற்றார் போன்று தன்னை வடிவமைத்துக் கொண்டுவிட்டனர், தமிழர்கள். பேசும் மொழி தமிழாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டில் வசிக்கும் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான பேச்சு வழக்கு உண்டு.

சிங்கப்பூர் தமிழர் ஒரு விதமாகவும், ஃபிஜி தமிழர் ஒரு விதமாகவும் பேசுவதை நாம் அனைவரும் கவனித்திருக்கலாம். ஒரே நாளில் வந்ததில்லை இந்த மாற்றம். குடியேறிய நாள்தொட்டு, ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமான மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கிறது தமிழ் மொழி. இதற்கு அந்நாட்டின் இயல்பான பேச்சு வழக்கும், இலக்கியங்களும் ஒரு முக்கியக் காரணம். 

வேறுபாடுகளை களைத்து, சக தமிழரிடம் புரிதலை அதிகப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தி வருகிறது. அக்டோபர் 28 தொடங்கி, 30 வரை நீண்டுள்ள இம்மாநாடு "தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்" என்ற தலைப்பை கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. 

உலகத் தமிழர்கள் அனைவரும், உணர்வால் ஒன்றுபட்டிருந்தாலும், பழகும் விதத்திலும், பேசும் தொனியிலும் அதிகமாகவே வேறுபடுகின்றனர். அந்நாட்டின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் வகையில் சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட சிறப்புமிகு கல்வியாளர்கள், நூலாசிரியகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழியலாளர்கள், தமிழ்ச் சங்கத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கட்டுரை படைத்து வருகின்றனர்.

இயற்கையை ரசித்து சிலர்... சமூக அவலங்களை எதிர்த்து சிலர்... விஞ்ஞான விந்தைகளின் வியப்பில் ஆழ்ந்து சிலர்... இப்படி வெவ்வேறு காரணங்களுக்காக. இது போன்ற தனிப்பட்ட அனுபவம் சார்ந்த படைப்புகள் அனைத்தும் நாட்டுக்கு நாடு, மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றது. அவை தமிழகத்தில் இருக்கும் நம் தாயக எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டது.

நாம் அறிந்த தமிழ் இலக்கியம் ஒரு சிறிய வட்டத்தில் தேங்கிவிடக் கூடாது என்கிற உயரிய எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இந்த மாநாடு. உலகம் முழுவதும் பரந்த அளவில் பரவியிருக்கும் தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை பருந்துப் பார்வையில் ஆராய்வதுடன், அவற்றின் சிறப்பியல்புக்ளையும், தற்போதைய போக்குகளையும் மதிப்பீடு செய்யும் வகையில் அமைந்துள்ளது இம்மாநாடு.

இம்மாநாட்டை மூன்று முக்கிய அங்கங்களாக பிரித்து வடிவமைத்துள்ளனர். முதல் அங்கத்தில் தாயகம் கடந்த தமிழ் இலக்கியம், அந்தந்த நாட்டுச் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து சில கட்டுரைகளும், இரண்டாம் அங்கத்தில் மின் தமிழின் புதிய பரிமாணங்களும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் உள்ள சவால்களையும் ஒரு குழு அராய்கிறது. தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தின் வருங்காலம் பற்றிய தொலைநோக்குச் சிந்தனையை உள்ளடக்கிய மூன்றாம் அங்கத்துடன் இம்மாநாடு நிறைவு பெறுகின்றது.

இதில் இந்தியாவின் பிரதிநிதிகளாக கவிஞர் வைரமுத்து, சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் சிவகுமார், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து விவாதிக்க, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா என உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் திறமையான பேச்சாளர்கள் குவிந்துள்ளனர். அனல் பறக்கும் விவாதங்களும், சிந்தனையைத் தூண்டும் அனுபவங்களும் தமிழ் பிரியர்களுக்கு இனிமையும் புதுமையுமாக அமைந்துள்ளது.

இம்மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் கூறுகையில், "நமக்கு தெரிந்த நவீன கவிஞர்கள் எல்லாம் வாலி, வைரமுத்து, முத்துகுமார் மட்டுமே. நம்மில் எத்தனைப் பேர் சுசீந்திரனின் (ஜெர்மனி) மொழிபெயர்ப்பு நூல்களை புரட்டியிருக்கிறோம்? எத்தனைப் பேர் முனைவர் சேரனின் (கனடா) கவிதைகளை ரசித்திருக்கிறோம்? இவர்களின் பெயரையாவது கேள்விபட்டதுண்டா? இப்படி வெளிச்சம் படாமல் எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். 

ஓர் ஆங்கில நாவல் அமெரிக்காவில் எழுதப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதன் மதிப்பை, உள்ளடக்கத்தை வைத்தே முடிவு செய்கிறோம். அப்படி இருக்கும்பொழுது, சிறந்த தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணாமல் போவது, நாம் எழுத்தாளனுக்கும் மட்டுமல்ல, தமிழுக்கும் கொடுக்கும் அவமரியாதை. அதையெல்லாம் சரிசெய்வதற்கான முதற்படியே இம்மாநாடு," என்றார். 

தமிழ் மொழி, எல்லைகள் கடந்து ரசிக்கும் படியான உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும். தகுதியான படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்தாலே அந்த கனவு தானாக நிறைவேறும்!

- சிங்கப்பூரிலிருந்து ஏ. ஆதித்யன்