Published:Updated:

அலைவரிசை ஒதுக்கீடு: மாதவன் நாயர் விளக்கம்

விகடன் விமர்சனக்குழு

திருவனந்தபுரம், பிப்.14-2011: எஸ். பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில், சட்ட விதிகளுக்கு உட்பட்டே இஸ்ரோ செயல்பட்டது என்று முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு, எஸ்.பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இஸ்ரோவின் விற்பனை பிரிவான ஆண்டிரிக்ஸ் கார்பரேஷன், தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு இந்த அலைவரிசைகளை ஒதுக்கியது.

இதில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் எஸ் பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி அதிக அதிகாரம் கொண்ட கமிட்டி, விசாரணை நடத்திவருகிறது. எனவே நான் இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்றாலும், இந்த ஒதுக்கீடு, அப்போதைய விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்தது என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.