Published:Updated:

தாமஸ் சரியாக கண்காணிப்பாரா?-சுப்ரீம்கோர்ட் கேள்வி

விகடன் விமர்சனக்குழு
தாமஸ் சரியாக கண்காணிப்பாரா?-சுப்ரீம்கோர்ட் கேள்வி

புதுடெல்லி, நவ.30,2010

முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டும் தருணத்தில் தொலைத் தொடர்பு செயலராக இருந்த பி.ஜே.தாமஸ், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சிபிஐ-யின் விசாரணையை மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படிச் சரியாக செயல்பட முடியும் என்று உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது. ##~~##

மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஜே.தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

அதேபோல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்திலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்பது குற்றச்சாட்டு.

இதனிடையே, தாமஸின் நியமனதுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில், மத்திய அரசு சில ஆவணங்களை கடந்த வாரம் தாக்கல் செய்தது.

அந்த விசாரணையின்போது, "ஆவணங்களை இன்னும் பார்க்கவில்லை. எனினும், கிரிமினல் வழக்கில் தொடர்புடைய ஒருவர், மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படி செயல்படுவார் என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது," உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், 2ஜி முறைகேடு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது.

அப்போது, "மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு கீழ் சிபிஐ இயங்குகிறது. குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில் தகவல் தொடர்பு ஆணையராக இருந்தவர் தாமஸ். அப்படியிருக்க, அவராலேயே இந்த வழக்கு விசாரணையைக் கண்காணிப்பது கடினமாக இருக்கும்," என்று நீதிபதிகள் கூறினர்.

அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால கிருஷ்ணன், மத்திய அரசிடம் இருந்து உரிய பதில்களைக் கேட்டறிந்து சொல்வதாக தெரிவித்தார்.

அதேநேரத்தில், ஊழல் கண்காணிப்பு சட்டப்படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒருவரை நியமிக்க இடமுண்டு என்று சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறினார்.

அதற்கு பதில் அளித்த மனுதாரரான பொது நல வழக்கு மையத்தின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கர்நாடக முன்னாள் போலீஸ் டைரக்டர் ஜெனரலும், ஊழல் கண்காணிப்பு ஆணையர்களில் ஒருவருமான ஆர்.ஸ்ரீகுமாரை அந்த பொறுப்பில் நியமிக்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், சி.பி.ஐ.யின் விசாரணையை கண்காணிக்க எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லாத ஓய்வு பெற்ற இரு நேர்மையான போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
 

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கை நீதிமன்றம் கண்காணிப்பதில் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இருக்கிறதா என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு, வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கோபால் சுப்ரமணியம் மற்றும் வேணுகோபால் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், கண்காணிக்கும் பொறுப்பை வெளியே தன்னிச்சையான அமைப்பு எதற்கும் வழங்க வேண்டாம் என வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக்கொண்டார்.