Published:Updated:

இவர் உலக நாயகன் மட்டுமில்ல... கலாய் மன்னனும் கூட! - 'பிக் பாஸ்' கமலின் சர்காஸங்கள்

தார்மிக் லீ
இவர் உலக நாயகன் மட்டுமில்ல... கலாய் மன்னனும் கூட! - 'பிக் பாஸ்' கமலின் சர்காஸங்கள்
இவர் உலக நாயகன் மட்டுமில்ல... கலாய் மன்னனும் கூட! - 'பிக் பாஸ்' கமலின் சர்காஸங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு விதங்களில் எதிர்ப்புகள் வந்தாலும், கமல்ஹாசனின் பேச்சுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம், அவர் பேசுவதில் அரசியல், கேலி கிண்டல்கள், அறிவுரைகள் என எல்லாமே கலந்துகட்டி காணப்படுவதுதான். இக்கட்டுரையில் அவர் செய்த ஒட்டுமொத்த ரகளைகளில் ஒரு சின்ன பகுதியையும் தந்திருக்கிறோம். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மூன்று விதமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். வாரம் ஒரு நாள் கூட தவறாமல் பார்ப்பவர்கள், பிக் பாஸா? எனக்கு கிக் பாக்ஸிங்தான் பிடிக்கும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் இருப்பவர்கள், கடைசியாக கமலின் அதிரிபுதிரி பேச்சுக்காக மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியைக் காண்பவர்கள். எனக்குத் தெரிந்து இரண்டாவது ரக பார்வையாளர்கள், மூன்றாவது ரக பார்வையாளர்களாக மாறி வருவதை நாளுக்கு நாள் உணர முடிகிறது, நானும் அப்படி மாறியவன்தான். காரணம், இவரது பேச்சில் இருக்கும் குசும்பு, நடக்கும் சூழ்நிலைகளை மனதில் கொண்டு இவர் அடிக்கும் பன்ச் டயலாக்குகள், குறியீடுகள் வழியே மெசேஜ் சொல்வது போன்றவைதான். எபிசோடு ஆரம்பத்தில் செட்டில் இறந்தவருக்கு இரங்கல் தெரிவிப்பது தொடங்கி, ஜூலியிடம் 'It's Not Manipulation ' என்று காட்டமாக கூறியது வரை எல்லாமே ஏலியன் லெவல். 

பிறர் மீது தவறு இருந்தால், பொறுமை இழக்காமல் தன் ஸ்டைலில் எடுத்துரைப்பதுதான் கமலின் மேனரிசம். சமீபத்தில் கூறிய 'மருத்துவ முத்தம்' விஷயம் கூட அப்படித்தான். அர்த்தம் தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்குக் கூட ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரியை புரட்டிப் பார்த்தாவது அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கமல் பேசும் தமிழ் வார்த்தைகளுக்கு அவரே பாவப்பட்டு அர்த்தம் சொன்னால்தான் உண்டு. 'நான் என்ன சார் கெட்ட வார்த்தை பேசுனேன்?' என்று காயத்ரி ரகுராம் கேட்ட கேள்விக்கு வாயைத் திறக்காமலே வெறும் தலை முடியை மட்டும் உயர்த்திக்காட்டினார். 'வெளியே வரட்டும் நான் பார்த்துக்குறேன்' என்று அவர் மிரட்டியதை ஞாபகம் வைத்து, 'வெளியே நான் இருக்கேன், என்னை மீறி தொடு பார்க்கலாம்' என்ற தொனியில் டீல் செய்தது கெத்து. டயலாக்குகள் மட்டுமல்ல, ரியாக்‌ஷன்களும் மாஸ்தான். சமீபத்தில், 'நான் நடிச்சதே இல்ல சார்' என ஜுலி சொல்லியபோது இவர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் தெறி ரகம்.  

கிளிப்பிள்ளை போல் அந்த ஐந்து செகண்டு வீடியோ என்று ஜூலி கேட்டக் கொண்டே இருந்ததற்கு 'It's Not Manipulation, It's Hallucination' என்று இவர் கத்தி சொன்ன மறுகணம் ஆடியன்ஸ் மத்தியில் அப்ளாஸ் அள்ளியது. அதே எபிசோடில் இன்னொரு டயலாக்கும் பட்டையைக் கிளப்பியது. சசிகலா சிறையில் உலா வந்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வந்த நேரம் அது. அதை மனதில் வைத்துக் கொண்டு, நமீதா கேட்ட கேள்விக்கு 'வெளியில வேற 5 ஸ்டார் ஜெயில் கூட இருக்குங்க' என்று இவர் அடித்த கவுன்ட்டர், நோட்ஸ் இல்லாமலேயே எல்லாருக்கும் புரிந்தது. 

மேற்கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், இவரின் எல்லா எபிசோடுகளையும் கூர்ந்து கவனித்தால், இவர் இந்த தலைமுறை  மக்களை மிகவும் ரசிக்கிறார் என்பது தெரியவரும். வார்த்தைக்கு வார்த்தை 'இந்த ஜெனரேஷன் ஆட்கள், எல்லா விஷயங்களையுமே மிகவும் எளிமையாகவும், யதார்த்தமாகவும் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும், ஏன் நானே கற்றுக் கொள்ள வேண்டும்' என்று சிலாகித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் திட்டு வாங்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு கமலின் பாராட்டு குட்டி பூஸ்ட்தான். இப்படி எக்கச்சக்க விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனாலேயே இந்த ஷோவை கமலைத் தவிர வேறு யாரும் தொகுத்து வழங்க முடியாது எனக் கூறலாம். 

மேலும் பல கேலிகளும், கிண்டல்களும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் காணவிருக்கிறோம், அது வரை உங்களிடம் இருந்து விடைபெறும் நான்! (இதுவும் கமல் ஸ்டைல்).