Published:Updated:

ஓர் ‘ஈ’ரோ இந்திய சினிமாவையே ஆட்டிவைத்தது எப்படி? #5YearsOfNaanEe

முத்து பகவத்
ஓர் ‘ஈ’ரோ இந்திய சினிமாவையே ஆட்டிவைத்தது எப்படி? #5YearsOfNaanEe
ஓர் ‘ஈ’ரோ இந்திய சினிமாவையே ஆட்டிவைத்தது எப்படி? #5YearsOfNaanEe

சினிமா புதுமையின் அடையாளம். இதுவரை பார்த்திராத, கேட்டிராத ஒன்றை திரையில் காட்டும் போது மக்கள் அதைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவியும். அதற்கு நிதர்சனமான சாட்சி ‘நான் ஈ’. மில்லியனில் தயாராகி பில்லியனில் வசூலித்த ‘நான் ஈ’, வெளியாகி இன்றோடு ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. 

பத்தோடு ஒன்றாக இந்தப் படத்தைக் கடந்துவிட முடியாது. எந்தவொரு விஷயத்தையும் முதலில் சொல்லும் போதுதான் அதற்கு மதிப்பு. அதனால்தான் ‘ஆரண்யகாண்டம்’, ‘சூதுகவ்வும்’  போன்ற படங்களை இன்றும் கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் ‘நான் ஈ’ விஷூவலி ட்ரென்ட் செட்டிங் படம். தெலுங்கு வாசம் வீசும் படங்களுக்கு தமிழில் வரவேற்பு இருக்காது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆனாலும் யோசித்துப்பார்க்க முடியாத ஹிட்.  அதை சாத்தியப்படுத்தியது இந்த ‘ஈ’.

இப்படத்தின் கதை எப்படி உருவானது ? 

நட்சத்திர ஹோட்டலில் ராஜமெளலியும், அவரின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும் தங்கியிருந்த நேரம். அன்று இரவு ஈ ஒன்று கொடுத்த குடைச்சலால் தூக்கத்தை தொலைக்கிறார் விஜயேந்திர பிரசாத். இரவு இரண்டு மணிக்கு மகனின் அறைக்கதவைத் தட்டி, விஷயத்தைச் சொல்கிறார். தந்தையை படுத்தி எடுத்த ஈ, வில்லனை படத்தில் பழிவாங்கினால் எப்படியிருக்கும் என்று இரவு மூன்று மணிக்கு இருவரும் யோசிக்கிறார்கள். கதையும் பிறந்துவிட்டது. அடுத்த ஒரு மாதத்தில் கதையைத் தயார் செய்கிறார் விஜயேந்திரபிரசாத். அதற்கு விஷூவலில் உயிர் கொடுக்கிறார் ராஜமெளலி.

நம்மை விட உருவத்திலோ, சாதியிலோ குறைந்தவர்களை மதிக்காத மனித இயல்பை ராஜமெளலி கதையாகக் கொண்டு களமாடியிருக்கிறார். பாகுபலிக்கான சோதனை முயற்சியை ஐந்து வருடத்திற்கு முன்னாடியே நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் ராஜமெளலி.  பொதுவாக  ராம நாராயணன் படங்களில் யானை, பாம்பு, நாய், குரங்கு போன்றவையே பழிவாங்கும். அந்தமாதிரியன கதைகளை மட்டுமே பார்த்திருக்கிறோம். ஒர் ஈ பழிவாங்கும் எனும் சிந்தனைதான் படத்தின் முதல் வெற்றி. பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதே குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில், ஹீரோவே இல்லாமல், ஈ ஹீரோயிசம் செய்து கைத்தட்டலை வாங்கிவிட்டது இரண்டாவது வெற்றி.

தொழிலதிபர் சுதீப்புக்கு மயங்காத பெண்களே கிடையாது. அவரின் பார்வை சமந்தா மேல் விழுகிறது. சமந்தாவிற்கு ஹீரோ நானி மீது காதல். அதனால் நானியை நசுக்கி கொல்கிறார் சுதீப். மறுபிறப்பு எடுக்கும் நானி, ஓர் ஈயாக மாறிவிடுகிறார். சுதிப்பை பழிவாங்குகிறார். சிம்பிளான கதை, ஆனால் திரைக்கதையில் நிகழ்ந்திருப்பது மேஜிக். 

கன் ஷூட்டராக சுதீப், மைக்ரோ ஆர்ட்டிஸ்டாக சமந்தா என கேரக்டரின் வடிவமைப்புக்கான கேள்விக்கு, ஈ- பதிலாக வந்து நிற்கிறது. ஃபேன்டசி படங்களுக்கு லாஜிக் தேவையில்லை. அந்த ஓட்டையைப் பயன்படுத்தி பல படங்கள் பல்பு வாங்கியிருக்கிறது. லாஜிக் ஓட்டையை லாபகமாக கையாண்டிருப்பார் ராஜமெளலி. ஒர் ஈயால் பழிவாங்க முடியும் என்பதிலேயே லாஜிக் மீறல் தொடங்கிவிடுகிறது. இருப்பினும் விஷூவலில் நம்பவைத்திருப்பார். படத்தின் உயிர் விஷூவல் எபெக்ட்ஸ் செய்த கமலக்கண்னன் மற்றும் எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் கையில். இரண்டிலுமே இருந்த நேர்த்தி படத்தின் ப்ளஸ். அதை சாத்தியப்படுத்தியதற்கு ராஜமெளலிக்கு பாராட்டுகள். 

படம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே ஹீரோ இறந்துவிடுகிறார். ஹீரோவாக இந்த ‘ஈ’ரோ மாறிவிடுகிறது. படம்முடிந்து வெளியே வரும்போது ஈயின் ஹீரோயிசம் மட்டுமே மனதில் நிற்கிறது. சுதீப்பின் வில்லத்தன நடிப்பும், சமந்தாவின் அழகும் படத்துக்குப் ப்ளஸ். 

‘வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன். பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்..’, ‘ கொஞ்சம் உலறிக்கொட்டவா, கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா..’ என காதலில் லவ் பீட்டை எகிறவைப்பதாகட்டும், ஈயாக மாறும் நானிக்கும் சமந்தாவிற்குமான காதலாகட்டும் எல்லாமே கலர்ஃபுல்! தெலுங்கு படத்திற்கான விதிமுறையை மீறிவிடக்கூடாது என்பதற்காக வரும் திடீர் மந்திரவாதி, சந்தானம் என்ட்ரி இவைகளைத் தவிர்த்துவிட்டால் படம் நிச்சயம் இந்திய சினிமா. 

குழந்தைகளுக்கான படம் என்று இதை ஒதுக்கிவிட முடியாது. காதல், வன்முறை, சண்டை என அனைத்தும் இதில் அடக்கம். குறிப்பாக விஷூவலில் நேர்த்தியான படம், இதுவரை இந்திய சினிமாவிலேயே வரவில்லை என்ற வாதத்தை உடைத்தது இந்தப் படம். இதையெல்லாம் தாண்டி காதல் மட்டுமே இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த படத்திற்கும் கூட காதல்தான் அடிநாதம். காதலியைத் தேடி நியூயார்க் செல்வதும், மறுபிறவி எடுப்பதும் காதலர்களுக்கு சாத்தியம்தான். காதலைக் கொண்டாடும் ஒவ்வொருவரின் மனதிலும், காதலியோடு சேர்த்து, நான் ஈ’ மேஜிக் ஆழமாக பதிந்திருக்கும்.