Published:Updated:

அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani

நித்திஷ்
அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani
அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani

கவுண்டமணி - தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரம். 'சின்ராசு பாட ஆரம்பிச்சுட்டா குழந்தை அழுகுறதை நிறுத்திடும்' என ஒரு வசனம் வருமே. அதன் நிஜ வெர்ஷன் கவுண்டமணி. கல்லையே கரைத்துக் குடித்த சிடுமூஞ்சிக்காரர்களையும் லேசாக்கும் வித்தை இவருக்கு மட்டுமே சாத்தியம். 'மனசே சரியில்லை. யாராவது கவுண்டமணி காமெடி போடுங்கப்பா' என உச்ச நட்சத்திரம் சிவாஜி சொன்னது இதன் ஒரு சோறு பதம். இளையராஜாவோ இன்னும் ஒரு படி மேலே. ரீ-ரெக்காடிங்கின்போது வெடிச் சிரிப்போடு வெளியேறுவார். இப்படி சகலரையும் சிரிக்க வைத்த அந்த காமெடி அரசருக்கு இன்று பிறந்தநாள்! யோசித்துப் பார்த்தால் வாழ்த்துகளோடு எழுத அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

சுப்பிரமணி கவுண்டமணியான கதை!

மேடை நாடகங்கள் வழியே சினிமாவில் கால் பதித்து சிக்ஸர் அடித்தவர்கள் அனேகம் பேர். அதில் கவுண்டமணி முக்கியமானவர். எதிரே இருப்பது சீனியர், எதிர்த்துப் பேசினால் என்னாகும் போன்ற நினைப்பெல்லாம் இவருக்கு இருந்ததே இல்லை. சரமாரியாக கவுன்ட்டர் கொடுத்து சபையை அதிரடிப்பார். இந்த பழக்கம்தான் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத் என 90-களின் உச்ச நடிகர்கள் படத்திலும் கவுண்டமணியை தனியாகத் தெரிய வைத்தது. காமெடியன்னா இவர்தான் என பேர் வாங்கிக் கொடுத்தது. இப்படியான ரகளை கவுன்ட்டர்களால் 'கவுன்ட்டர் மணியாக' பின் கவுண்டமணியாக விஸ்வரூபம் எடுத்தார்.

ஆல் இன் ஆல் அழகுராஜா!

அவரின் கேரக்டரைப் போலவே தமிழ் சினிமாவின் ஆல் இன் ஆல் அழகுராஜா கவுண்டமணிதான். காமெடியன், ஹீரோ, வில்லன், சீரியஸ் வேடம் என எதையும் விட்டு வைத்ததில்லை. கவுண்டருக்கு பெரிய பலமே அவரின் வசனங்கள்தான். படம் முழுக்க பன்ச் பேசினாலும் அடுத்த படத்தில் பேசுவதற்கும் அவரிடம் விஷயங்கள் இருக்கும். புத்தகங்கள், உலக சினிமா, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் என இவரின் தேடல் பரந்துபட்டது. அதே போல், 'தமிழ்சினிமாவுல இந்தக் கேரக்டர்ல நடிச்சவங்க யாராவது இருக்காங்களா?' எனத் தேடினால் கண்டிப்பாக அதில் கவுண்டரின் பெயர் இருக்கும். பலரும் யோசிக்கும் பிச்சைக்காரர் வேஷம் தொடங்கி ஃபேன்டஸி எமதர்மன் வரை எல்லாம்... எல்லாம் இதில் அடங்கும்.

தடை... அதை உடை!

சினிமாவைப் போன்ற சென்டிமென்ட் பைத்தியம் பிடித்த துறையை வேறெங்கும் பார்க்கவே முடியாது. ஆனால் கவுண்டரிடம் அவை எல்லாம் வேலைக்கே ஆகாது. எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியானாலும் 'கறுப்பு' சட்டையில்தான் வருவார். கடவுள் நம்பிக்கை இவருக்கு அதிகம்தான். ஆனால் சாமியார்களை வெளுத்து வாங்குவார். 'அவன் என்ன நமக்கும் சாமிக்கும் நடுவுல மீடியேட்டரா?, இதெல்லாம் ஏமாத்து வேலைப்பா!' என போட்டுத் தாக்குவார். குண்டு துளைக்காத இதயம் கொண்டவராக இருந்தாலும் தான் இறந்ததாக பரவும் வதந்தியை கேட்பது கொடுமைதான். ஆனால் அதையும் நக்கலாக எதிர்கொள்ள கவுண்டமணியால்தான் முடியும். 'என் மேல அநியாயத்துக்கு பாசக்காரங்களா இருக்காங்க போல' என வதந்தி பரப்புவர்கள் பற்றி அவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் - பக்கா கவுண்டர் ஸ்டைல். 

தில்லு தொரை:

தமிழ் சினிமாவின் வயது நூறை நெருங்கிவிட்டது. இத்தனை ஆண்டுகளாகியும் படைப்பாளிகள் தொடத் தயங்கும் ஒரு ஏரியா - அரசியல். லேசாக அரசியல் பேசிய படங்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும் என்னனென்ன தொல்லைகள் வந்தன என்பதை பார்த்துக்கொண்டேதான் வருகிறோம். ஆனால் கவுண்டர் இதிலும் விதிவிலக்கு. 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற ஒற்றை டயலாக்கில் மொத்த பேரையும் காலி செய்தார். 'மீசைக்கு என்ன எண்ணெய் போடுற?' என அமைச்சரவை மீட்டிங்கில் பேசுவார். ட்ரோல் வெலல் - கவுண்டமணி! 'எதுக்கு இந்த மனு..... எல்லாம், இதைக் கொடுத்து என்ன நடக்கப் போகுது? என வெடிப்பார். 'ஓட்டு வரும், காசு வரும்னா எதுல வேணாலும் அடிவாங்கத் தயார்' என வெளுப்பார். 'சினிமாவுல சம்பாதிச்சதெல்லாம் முதலமைச்சர் கோஷம் போட்டு காலி பண்ணப் பாக்குறியா?' என குத்திக் காண்பிப்பார். சமகாலத்தில் அரசியலை பொளந்து கட்டி பகடி செய்த ஒரே ஆள் இவர்தான். இந்த தில்லு - அவரின் கெத்து. நடிப்பதைக் குறைத்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் அவரின் வசனங்கள்தான் சோஷியல் மீடியாவின் சொத்து.

மைனஸ் இல்லை... ப்ளஸ்!

கவுண்டரின் மேல் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள் இரண்டு. ஒன்று, எல்லாரையும் ஏகவசனத்தில் பேசுவாரென்பது. ஆனால், அது சினிமாவுக்காக அவர் மேற்கொண்ட ஸ்டைல் என்பது அவரின் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். 'இங்க எல்லாரும் மனுஷன்தான். எல்லாருக்கும் மரியாதை கொடுக்கத்தான் செய்யணும்' என்பார். மற்றொன்று செந்திலை அடித்து அடித்தே புகழ்பெற்றவர் என. உண்மையில் கவுண்டமணி - செந்தில் நடுவே இருக்கும் கெமிஸ்ட்ரி ரியல் ஜோடிக்குக் கூட இருக்காது. 'அவர் இல்லன்னா நான் இந்தப் படத்துல நடிக்கமாட்டேன் சார்' என செந்தில் சொன்ன வார்த்தைகள் இந்த பாசத்திற்கான சாட்சி.

நோ பப்ளிசிட்டி:

சூப்பர்ஸ்டாரே வீடு தேடி வந்து அழைத்தாலும் தனக்கு சம்பந்தமில்லாத விழாக்களில் இவர் கலந்துகொள்வதில்லை. தன் குடும்பத்தின் மேல் கேமரா வெளிச்சம்படாமல் பார்த்துக்கொள்வார். பேட்டி, புகழாரம் என எங்கேயும் கவுண்டமணியின் முகத்தை நீங்கள் பார்க்க முடியாது. 'நாம அப்படி என்ன சாதிச்சுப்புட்டோம்?' என பணிவாக அனைத்தையும் மறுப்பார். அதையும் மீறி யாராவது புகழ்ந்தால்... 'இப்ப ஏன் நீ கூட்டத்துல பாம்பு புகுந்தமாதிரி பேசுற?' என அதே இடத்தில் வைத்துக் கலாய்ப்பார். அதே சமயம் நெருங்கிய நண்பர்கள் மறைந்தால் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் முதல் கார் கவுண்டருடையது. இந்த இறுக்கமும் நெகிழ்ச்சியும்தான் கவுண்டமணியை தன்னிகரற்ற கலைஞனாக்குகிறது.

'தலைவர்' கோஷத்தில் உங்களுக்கு உடன்பாடில்லைதான். ஆனாலும்... 'பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!'