Published:Updated:

ப.சிதம்பரம் கைது... தி.மு.க. கண்டன அறிக்கை வெளியிடாதது ஏன்?

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீட்டில் முன்பு நடத்தப்பட்ட சி.பி.ஐ ரெய்டுக்கு பழி தீர்க்கத்தான் ப.சிதம்பரத்தின் இன்றைய கைதுக்குத் தி.மு.க கண்டன அறிக்கை வெளியிடவில்லை எனச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?

மன்மோகன் சிங்குடன் ஸ்டாலின், ப.சிதம்பரம்
மன்மோகன் சிங்குடன் ஸ்டாலின், ப.சிதம்பரம் ( விகடன் )

''ப.சிதம்பரம் கைதுக்குத் தி.மு.க-விடமிருந்து கடுமையான கண்டனங்கள் வரவில்லை'' என்கிற குமுறல்கள், கதர்ச்சட்டைக்காரர்களிடமிருந்து எழுந்திருக்கின்றன.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
விகடன்

''ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் உடனடியாகத் தி.மு.க கருத்தைப் பதிவுசெய்யவில்லை. தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் இதுபற்றி கருத்து கேட்டபோதுதான், 'இது பழிவாங்கும் நடவடிக்கை' எனச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஸ்டாலின், ‘சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம். ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர். வழக்கைச் சட்டரீதியாகவே அவர் சந்திப்பார்’ எனப் பொதுவான கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஒரு கண்டன அறிக்கையைக்கூட ஸ்டாலின் வெளியிடவில்லை'' எனக் காங்கிரஸ்காரர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ப.சிதம்பரத்தின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து, அவரது தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் பேசிய கராத்தே தியாகராஜன், ``ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் ஸ்டாலின் வெளிப்படையாகக் கண்டித்து அறிக்கை வெளியிடாதது வருத்தமாக இருக்கிறது'' எனச் சொன்னார்.

மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம்
மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம்
விகடன்

காங்கிரஸ்காரர்கள் சொல்வதுபோல ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் முறையான கண்டனத்தைத் தெரிவிக்கவில்லையா? அப்படிச் சொல்லிவிட முடியாது. ''ப.சிதம்பரத்தை அரசியல்ரீதியாகப் பழிவாங்க வேண்டுமென்பதற்காக, முன்ஜாமீன் கோரிய நிலையில், கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது; சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்தது இந்தியாவுக்கே அவமானம்” எனக் கருத்து வெளியிட்டிருந்தார் ஸ்டாலின். ஆனால், காங்கிரஸ்காரர்கள் தி.மு.க-விடம் எதிர்பார்ப்பது விரிவான அறிக்கையையும் கடுமையான கண்டனத்தையும்தான்.

ப.சிதம்பரம் கைது விஷயத்தில் ஏன் தி.மு.க கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்யவில்லை என்கிற கேள்விக்குக் கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டியிலேயே பதில் இருக்கிறது. ''அவர்கள் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடந்தபோது சிதம்பரம் முதல் ஆளாக அதைக் கண்டித்தார். ஆனால், இன்று சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விகடன்

''அவர்கள் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடந்தபோது சிதம்பரம் முதல் ஆளாக அதைக் கண்டித்தார்'' எனக் கராத்தே தியாகராஜன் சொல்லியதற்குப் பின்னால் இருக்கும் ஃபிளாஷ்பேக் என்ன?

2004 - 2014-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்தது. மத்திய அமைச்சரவையிலும் பங்கேற்றது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது. 'இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுகிறோம்' என 2013 மார்ச் 19-ம் தேதி அறிவித்தார், அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி. அடுத்த நாள் தி.மு.க மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஸ்டாலின் வீடு
ஸ்டாலின் வீடு
விகடன்

2004 நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே 2009 நாடாளுமன்றத் தேர்தலையும் காங்கிரஸோடு கூட்டணி வைத்து எதிர்கொண்டது தி.மு.க. 2009 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான், இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தது. போரை நிறுத்தச் சொல்லி அரைநாள் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார் கருணாநிதி. தேர்தல் முடிவுகள் வெளியானபோது முள்ளி வாய்க்காலில் போர் முற்றுப் பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களோடு பிரபாகரனும் கொல்லப்பட்டிருந்தார். ''போரை நடத்தும் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க கூட்டணி அமைத்தது'' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தன. இது தி.மு.க-வுக்கு வடுவை ஏற்படுத்தியது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இலங்கை விவகாரத்தில் தி.மு.க செய்த துரோகத்தைப் பட்டியல் போட்டனர், எதிர்க்கட்சியினரும் இலங்கை ஆதரவாளர்களும்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தி.மு.க மீது விழுந்த பழியைத் துடைக்கவும் அடுத்து வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தது தி.மு.க. இதற்கு, எதிர்வினையாற்றியது காங்கிரஸ். 2013 மார்ச் 21-ம் தேதி ஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தியது சி.பி.ஐ. ஸ்டாலின் வீடு உட்படத் தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை போட்டார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க விலகும் முடிவுக்குப் பின்னணியில் இருந்தது அந்தக் கட்சியின் அப்போதைய பொருளாளர் ஸ்டாலின்தான் எனத் தகவல் வெளியானது.

ஸ்டாலின், ப.சிதம்பரம்
ஸ்டாலின், ப.சிதம்பரம்
விகடன்

இதைத் தொடர்ந்துதான் சி.பி.ஐ சோதனை அரங்கேறியது. சோதனை நடந்துகொண்டிருந்தபோதே அதை அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கண்டித்தார். ''ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியது பற்றித் தகவல் தற்போதுதான் கிடைத்தது. பிற துறைகளின் செயல்பாடுகள் பற்றி நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால், இந்தச் சோதனை குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசினேன். ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ நடத்திய சோதனையை எதிர்க்கிறேன். சி.பி.ஐ-யின் இந்தச் செயல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்'' என்று சொன்னார் ப.சிதம்பரம்.

மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தி.மு.க-வுக்குக் கடுமையான சோதனைகள் ஏற்பட்டன. அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கில் தி.மு.க சிக்கிக்கொண்டிருந்தது. இதற்குக் காரணம் ப.சிதம்பரம்தான் என்கிற பேச்சுகள் அப்போது எழுந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். கனிமொழி கைதானார். இதெல்லாம் சேர்ந்துதான் இலங்கத் தமிழர்கள் விவகாரத்தைக் காரணமாகச் சொல்லி, கூட்டணியில் இருந்து விலகியது தி.மு.க.

''ஸ்டாலின் வீட்டில் அன்றைக்கு நடந்த சி.பி.ஐ. சோதனைதான் ப.சிதம்பரத்தின் இன்றைய கைதுக்குக் கடுமையான கண்டனத்தை தி.மு.க-விடம் இருந்து வராமல் போனதற்குக் காரணம். இது முன்னே இட்ட தீ'' என்கிறார்கள் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள்.