Published:Updated:

16 காரணங்கள்.... கிங் கோலியை நாம் ஏன் கொண்டாடாமல் இருக்க முடியாது?! #Kohli #ICCAwards #Listicle

ஒருநாள் போட்டிகளில், 2011-12-ல் 54.70ஆக இருந்த அவரது பேட்டிங் சராசரி, 2013-2015-ல் 54.98 ஆகவும், 2016-2020-ல் 74.50ஆகவும் உச்சத்தைத் தொட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில், இதே காலகட்டத்தில் முறையே, 38.73, 46.73, 62.66 என்பது அவரது பேட்டிங் சராசரி.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி முடிந்தவுடன், சச்சினை தன் தோளில் சுமந்துகொண்டு மைதானம் முழுக்க பெருமையோடு வலம் வந்தார் கோலி. "21 வருடங்கள் இந்திய அணியின் சுமையைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தவரை, நாங்கள் இப்போது தூக்கிச் சுமக்கும் நேரம் வந்துவிட்டது!'' என்று சொன்னார். அப்போது எல்லோருடைய மனதிலும் எழுந்த கேள்வி, "யார் அந்தச் சுமையை, அடுத்து தூக்கிச் சுமக்கப் போகிறார்கள்?!'' என்று. அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை; இந்திய அணியின் சுமையை, அடுத்த பத்தாண்டுகள் தூக்கிச் சுமக்கப்போவதே விராட் கோலிதான் என்று.

எட்டாத உயரங்கள் இல்லை எனச் சொல்லுமளவிற்கு, பல சாதனைகளில் தன் பெயரை எழுதிக் கொண்டே இருக்கிறார் கோலி. இதற்கான அங்கீகாரமாய்த்தான், ஐசிசி சமீபத்தில் அறிவித்த 'கிரிக்கெட்டர் ஆஃப் தி டெக்கேட்' (பத்தாண்டுகள்) விருதை, விராத் கோலி வென்றிருக்கிறார். அவருடைய வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன, எந்த வகையில் அவர் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராய் இருக்கிறார்?

கோலி
கோலி

1. அழுத்தத்தைக் கையாளும் விதம்!

ஒருநாள் போட்டிகளில் 300+ இலக்கைத் துரத்துவதெல்லாம் இந்தியாவிற்கு ஒரு காலத்தில் அதிசய நிகழ்வாய்த்தான் பார்க்கப்பட்டது. காரணம், அது கூடவேகொண்டு வரும் அழுத்தம். 2012-ல் ஹோபர்ட்டில், 40 ஓவர்களில் 321 ரன்களை எட்ட வேண்டும் என்ற சூழ்நிலையில், 86 பந்துகளில், 133 ரன்களைக் குவித்த கோலி, 'சேஸிங் மாஸ்டர்' எனத் தான் கொண்டாடப்பட வேண்டியதற்கான முன்னோட்டத்தைக் காட்டினார் கோலி. இதன்பிறகுதான் இந்தியா, "சேஸிங் ப்ரஷரா, கிலோ என்ன விலை?!'' எனக் கேட்க ஆரம்பித்தது. இந்த பத்தாண்டுகளில் இந்தியா சேஸ் செய்து வென்ற போட்டிகளில், கோலியின் பெயரே அதிகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

2. தவறுகளிலிருந்து பாடம் கற்பது!

தோல்விதான் கோலியைத் தூண்டும் தீப்பொறி! எப்போதெல்லாம் விழுகிறாரோ, அப்போதெல்லாம் முன்பைவிடவும் வேகத்துடன் திரும்பி வருவது, கோலியின் சிறப்பம்சம். 2014-ல் இங்கிலாந்து தொடரில், 13.4 சராசரியுடன் திணறினார் கோலி. ஸ்விங் கண்டிஷன்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனப் பேச ஒரு கூட்டமே கிளம்பியது. ஆனால் கோலியோ, தனது குறைகளைக் களைந்து, அதே இங்கிலாந்தில், 2018 தொடரில், 5 போட்டிகளில் 593 ரன்களைக் குவித்தார்.

3. அவமானங்களை வெகுமானமாய் மாற்றும் நெஞ்சுரம்!

அவமானங்களை, தனது வெற்றிக்கான உரமாய் மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் கோலிக்கு நிரம்பவே உண்டு. 2015 உலகக்கோப்பையில், 50.83 சராசரியுடன் கலக்கினாலும், அரை இறுதியில் சோபிக்கத் தவறியதற்காக பல அவமானங்களைச் சந்தித்தார். ரன் வெறிபிடித்ததைப் போல், அதற்கான பதிலை, 2016 டி20உலகக் கோப்பையிலும், அந்த ஆண்டு ஐபிஎல்-லிலும் (973 ரன்கள்) ரன் மழையின் மூலமாய் பதிலடி கொடுத்தார்.

4. ஃபிட்னஸ் சவால்கள்!

"துணைக் கண்டத்தில் உள்ள கிரிக்கெட்டர்களுக்கும், மற்ற நாட்டு வீரர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அவர்களது உணவுமுறைதான்!" என்று ஒருமுறை சொல்லியிருந்தார் சச்சின். இது அவர்களது விளையாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி இருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த கொழுகொழு கோலியை நம்மால் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. இதன் காரணமாக, அவர், ரன் எடுக்க ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். தான் மிகவும் நேசிக்கும் கிரிக்கெட்டுக்காக, அர்ப்பணிப்புடன், உணவுமுறை மற்றும் கடினப் பயிற்சி மூலமாய், ஒட்டுமொத்தமாய் மாறி வந்தார் கோலி. மனோதிடத்துடன், உடல்வலிமையும் அதிகரிக்க, அது அவருடைய விளையாட்டை பலமடங்கு மேம்படுத்தியது.

தோனி - கோலி - கங்குலி
தோனி - கோலி - கங்குலி

5. பலவீனங்களை உணர்தல், விளையாடும் பாணியில் மாற்றம்!

கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ் போல, பவர்ஃபுல் ஹிட்டர் அல்ல, கோலி. கிரவுண்டட் ஷாட்கள், டிரைவ்கள்தான் அவருடைய ஆயுதம். அவர் அடித்த ரன்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம், ஒன்று மற்றும் இரண்டு ரன்களிலிருந்து வந்தவைதான். 2012-க்குப் பிறகு, இதுதான் தான் விளையாட வேண்டிய பாணி என்பதை உணர்ந்துதான், ஃபிட்னஸில் அவர் கூடுதல் கவனம் செலுத்தினார். அது அவரது ஓடி ஓடி ரன் எடுக்கும் வித்தகத்துக்கு உதவ, அதற்குப்பின்தான் அவரது சராசரியும் ஏறுமுகம் கண்டது‌. இதற்குமுன்பு, 100, 104, 107 ரன்களில் ஆட்டமிழந்து கொண்டிருந்த கோலி, இன்னமும் அதிக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது, இதற்குப்பின்தான். உதாரணமாக, 2018-ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 159 பந்துகளில், 160 ரன்களைக் குவித்தார் கோலி. அதில் 60 ரன்கள் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர்கள் மூலமாய் வந்தது. மீதம் 100 ரன்களும் அவர் ஓடியே எடுத்தவைதான். நல்ல பந்துகளை டிஃபெண்ட் செய்யாமல், சிங்கிளாக மாற்றுவதும், சிங்கிள் போக வேண்டியவற்றை, 2 அல்லது 3 ஆக்குவதும்தான் அவரது அணுகுமுறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. நிலைப்புத்தன்மை!

வெற்றிக்கு இவர் மட்டும் போதும் என சச்சினைக் கொண்டாடிய இந்திய ரசிகர்கள் இப்போது, கோலியைக் கொண்டாடி வருகின்றனர். இந்த பத்தாண்டுகளின் ஆரம்பத்தில், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பங்களாதேஷுடன் சதம் அடித்து, தனது கணக்கைத் துவங்கியவர், அடுத்த பத்தாண்டுகளில் மொத்தமாக 66 சதங்களை விளாசி, அனைவரையும் பிரமிக்க வைக்கும் பிதாமகனாக உருவெடுத்துள்ளார். 2020 வருடம்தான், கோலியின் காலண்டரில், சதமின்றி முடிவுக்கு வந்துள்ளது, அதிசயமாய்ப் பார்க்கப்படுமளவிற்கு, அவர் நிர்ணயித்து வைத்திருக்கும் பென்ச் மார்க் மிகச் சிறப்பானது.

7. வெற்றிக்கான வேட்கை!

கிரிக்கெட்டின் மீது மற்றவர்களுக்குள்ளது காதலெனில், கோலிக்குள்ளது வெறி! அதனை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும், ஒவ்வொரு தருணத்திலும் அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். தன்னுடைய மற்றும் சக வீரர்களின் சதம் மற்றும் அரைசதங்களுக்கான அவரது கொண்டாட்டம், விக்கெட் விழும்போது அவரது ஆக்ரோஷமான முகபாவம் என அவரது ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்பாடும் சொல்லும் விஷயம், அவர் அணுஅணுவாய், எந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறார் என்பதனை!

Virat Kohli
Virat Kohli
Rick Rycroft via AP

8. தலைமைப் பண்பு!

பேட்ஸ்மேனாகவும் கோலி, தனித்தன்மை மிக்கவராகத் திகழ்கிறார். தனது அணி வீரர்களின் திறனை வெளிக்கொணர்தல், செட்பேக்கை கம்பேக்காக மாற்றுவது, தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அணியை முன்னோக்கி வழிநடத்துவது என தலைமைப் பொறுப்பிற்கான அத்தனை இலக்கணங்களையும், அச்சுப்பிறழாமல் பின்பற்றுபவர்தான் கோலி!

9. அணியின் நலனே முக்கியம்!

அணியின் நலனை முன்னிருத்தி ஆடியுள்ளாரே தவிர, என்றுமே தன்னுடைய ரெகார்டுகளுக்காக ஆடியவர் அல்ல. இதனால்தான் டெஸ்ட்டில், ஏழாவது இடத்தில் இருந்து அணியை ஒன்றாவது இடத்திற்கு எடுத்துச் சென்று, 43 வாரங்கள், அதிலேயே நிலைத்திருக்கவும் செய்தார். 2019-ம் ஆண்டு, பங்களாதேஷுடனான தொடரை வென்றதன் மூலம் தொடர்ந்து, ஐந்து தொடர்களை வென்ற சாதனையையும் படைத்தார்.

10. கேப்டனாகவும், கேப்டனாக இல்லாமலும்!

பல வீரர்களுக்கு கேப்டன்ஷிப் என்பது, மகுடமாக இல்லாமல், முள்கிரீடமாகவே அமைந்து போகும். இந்தக் காரணத்துக்காகவே கேப்டன்ஷிப்பைத் துறந்து, வீரராகத் தொடர்ந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் கோலியைப் பொறுத்தவரை, கேப்டன்சி அவரது மகுடத்தில் ஒரு வைரக்கல், அவ்வளவே! 2008-ல் இருந்து, 2015-ம் ஆண்டு வரை கேப்டனாக இல்லாமல், பத்தாயிரம் ரன்களைக் கடந்த அவர், கேப்டனான பின், வெறும் நான்கே ஆண்டுகளில் அடுத்த பத்தாயிரம் ரன்களைக் கடந்தார்.

11. வித்தியாசமான ஆடும் முறைகள்!

துணைக் கண்டங்களில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இவரது பேட்டிங் சராசரி மிரளச் செய்வதாகவே இருக்கும். காரணம், சூழ்நிலை மற்றும் களத்திற்கேற்ப அவருடைய ஷாட் தேர்வுகள். ஃபிளிக் ஷாட், கவர் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ், இன்சைட் அவுட் என வெளுத்து வாங்கும் கோலி, இந்த ஷாட்களை ஆடுவதற்கான டெக்னிக்கல் விஷயங்களிலும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டே இருப்பார். சச்சினிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட ஃபார்வேர்ட் பிரஸ், பத்து நாட்கள் இடைவிடாப் பயிற்சியின் வாயிலாக அவர் தேர்ச்சி அடைந்த சாஃப்ட் பாட்டம் ஹேண்ட், ஆஸ்திரேலிய பெளலர்களின் பவுன்சர்களைச் சமாளிக்கப் பயன்படுத்திய டால் ஸ்ட்ரெய்ட் ஸ்டான்ஸ், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் அவர் பயன்படுத்திய, பேக் அண்ட் ஃபோர்த் டிரிக்கர் மூவ்மென்ட் என தேவையானவற்றை, தேவையான வகையில் பயன்படுத்தியதுதான் அவரை ஒரு யுகவீரனாக அடையாளம் காட்டி உள்ளது.

விராட் கோலி
விராட் கோலி

12. எல்லா களத்திலும் கிங்தான் கோலி!

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்களை விளாசி இருக்கிறார் கோலி. இதில் 24 சதங்கள் வெளிநாடுகளில் அடித்தவைதான். அதிலும் 20 சதங்கள் வலிமையான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வந்தவைதான் என்பது சொல்லும் அவரது சாதனையின் சரிதையை.

13. எல்லா ஃபார்மேட்டிலும் கிங்!

ஐசிசி, இந்த டெக்கேடுக்கான டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று ஃபார்மேட்டிலும், பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. இது அத்தனையிலும் இடம்பெற்றிருக்கிறது கோலியின் பேர்! இதற்குக் காரணம், எந்த ஃபார்மேட்டில் விளையாடுகிறாரோ அதற்கேற்றாற் போல் அவர் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதுதான். இதற்கு சாட்சி, மூன்று ஃபார்மேட்டிலும் அவருடைய பேட்டிங் சராசரி 50-க்கும் மேல் இருப்பதே!

14. மாற்றம் ஒன்றே மாறாதது!

தொடக்க காலகட்டங்களில், கோலியின் ஆக்ரோஷம் கொஞ்சம், ஓவர் டோஸ் ஆகி, அகங்காரமாய் அடையாளம் காட்டப்பட, அதனால் பல விமர்சனங்களைச் சந்தித்தார் கோலி. இவ்வளவுக்கும் தன்னை நோக்கி நீளும், கேலி, கிண்டலுக்கான பதிலாகவே அது இருந்தாலும், பல சமயங்களில் அது பேசுபொருளானது‌. கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது இதைக் காரணம் காட்டி விமர்சித்தவர்களும் உண்டு! ஆனால், உண்மையில் கேப்டனாக மாறிய பின் கோலியிடம் இயல்பாகவே ஒரு பக்குவம் வந்து ஒட்டிக் கொண்டது. அதன்பின் தனது விளையாட்டில் மட்டுமே, அந்த ஆக்ரோஷத்தை அவர் கொண்டு வரத் தொடங்கினார்‌. இதனால் அத்தகைய கடும் விமர்சனங்கள் காலப் போக்கில் காணாமல் போயின.

15. அனுபவம் தந்த பக்குவம்!

அனுபவம் ஏற ஏற, கோலியின் விளையாட்டில், பக்குவமும் பொறுமையும் குடிகொள்ள, சதங்கள் சுலபமாகின, இரட்டை சதங்கள் இலகுவாகின. தவறான ஷாட் செலக்‌ஷன் என்பதெல்லாம், நடக்காத கதை என்பதைப் போல், கொஞ்சமும் அசராமல் விளையாடத் தொடங்கினார். 'மற்றுமொரு நாள் மற்றுமொரு சதம்!' என்று, விளையாடும் அத்தனை தொடரிலும் சதமடித்து சாதனை படைக்கத் தொடங்கிய கோலிக்கு, ஒரு கட்டத்தில், டெஸ்ட்டில் இரட்டைச் சதம் என்பதும் நியூ நார்மல் எனச் சொல்வதைப் போல் அன்றாட நிகழ்வாகிப் போனது. 2016-ம் ஆண்டு தன்னுடைய முதல் இரட்டைச் சதத்தை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்த கோலி, இந்த ஐந்தே ஆண்டுகளில், 7 முறை இரட்டைச் சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

Kohli
Kohli

16. டாப் கியரில் வளர்ச்சி!

2011-ம் ஆண்டில் இருந்து, 2020 வரை கோலியின் கிரிக்கெட் பயணத்தை மூன்றாய்ப் பிரித்துப் பார்த்தால், அவர் எப்படி ஒரு அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒருநாள் போட்டிகளில், 2011-12-ல் 54.70ஆக இருந்த அவரது பேட்டிங் சராசரி, 2013-2015-ல் 54.98ஆகவும், 2016-2020-ல் 74.50ஆகவும் உச்சத்தைத் தொட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில், இதே காலகட்டத்தில் முறையே, 38.73, 46.73, 62.66 என்பது அவரது பேட்டிங் சராசரி. டி20-யிலோ, ஸ்ட்ரைக் ரேட், இதே காலகட்டத்தில் முறையே 130.71, 135.50, 141.73 ஆக உயர்ந்து நிற்கிறது. இந்த எண்கள் சொல்லும் கோலி எத்தகைய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார் என்பதனையும், ஐசிசியின் விருதுக்கு ஏன் அவர் சகல தகுதி படைத்தவர் என்பதனையும்!

கிரிக்கெட் புத்தகத்தின் உள்ள அத்தனை பக்கங்களிலும், பேட்டிங்குக்கான சாதனைகள் பட்டியல்களில், தனது பேரை முதல் பேராக மாற்றிக் கொண்டு வரும் கோலி, இந்த பத்தாண்டுகளில், மட்டுமல்ல, அடுத்த பத்தாண்டுகளின் முதல் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தப் போகிறார். ஓய்வு பெற்று இவர் செல்லும் சமயத்தில், இவரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், யாராலும் முறியடிக்கப்பட முடியாததாய் இருக்கப் போகிறது என்பது உறுதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு