Published:Updated:

``பேக் டு பேக் செஞ்சுரி; சாதனைகளை அடுக்கிய கோலி!” - தொடரை வென்ற இந்தியா

பிரேம் குமார் எஸ்.கே.

சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 70 இன்னிங்ஸில் 9 சதம் அடித்துள்ளார். கோலி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 35 இன்னிங்ஸில் 9 சதங்கள் அடித்துள்ளார்.

Virat kohli
Virat kohli ( AP )

இந்திய அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைபற்றியது. அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் கோலியின் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது.

Gayle
Gayle
AP

இந்நிலையில் 3 -வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் அதிரடியில் இறங்கியது கெயில் - லீவிஸ் ஜோடி.

டி20 போட்டியின் வேகத்தை இருவரும் காட்ட ரன்கள் மளமளவென உயர்ந்தது. 10 ஓவர்களுக்கு உள்ளாகவே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. ஒருவழியாக சஹால், லீவிஸை வெளியேற்ற அடுத்த ஓவரிலே கெயிலும் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 121/2 ஆக இருந்தது. அதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரன்னைக் கட்டுப்படுத்தினர்.

Indian team
Indian team
AP

நடுவில் மழையால் ஆட்டம் பாதித்ததால், போட்டி 35 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 35 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கெயில் 72 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார். டக்வொர்த் லீவிஸ் முறைபடி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றிக்கான இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடியாக 2 பவுண்டரிகள் அடித்த ரோஹித் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் கோலி. கடந்த போட்டியில் சதமடித்த கோலி, இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடி வந்த தவான் 36 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பன்ட் முதல் பந்திலே வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடி கோலிக்கு பக்க பலமாகச் செயல்பட்டார்.

kOhli - Shreyas Iyer
kOhli - Shreyas Iyer
AP

அரைசதம் கடந்த கோலி சதத்தை நோக்கி முன்னேற தன் பங்குக்கு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அசத்தினார் ஸ்ரேயஸ். 5 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உதவியுடன் ஸ்ரேயஸ் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 43 -வது சதத்தை அடித்தார். இறுதியில் இந்திய 32.3 ஓவர்களிலேயே 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி கைப்பற்றினார்.

கோலி கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் தனது 21 -வது சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களில் பாண்டிங் 22 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 220 இன்னிங்ஸில் பேட்டனாகச் செயல்பட்டு 22 சதமடித்துள்ளார். கோலி 76 இன்னிங்ஸில் 21 சதமடித்துள்ளார்.

Gayle - kohli
Gayle - kohli

அதே போன்று குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சினைச் சமன் செய்துள்ளார் கோலி. சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 70 இன்னிங்ஸில் 9 சதம் அடித்துள்ளார். கோலி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 35 இன்னிங்ஸில் 9 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் தனது 43 -வது சதத்தை 415 -வது இன்னிங்ஸில் எடுத்தார், கோலி தனது 230 -வது இன்னிஸ்சில் அதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 185 இன்னிங்ஸ் முன்னதாக.

விருதுகளைப் பெற்ற கோலி பேசுகையில், ``கடந்த சில போட்டிகளில் எனக்கு நானே சில சவால்களை ஏற்படுத்திக்கொண்டேன். இங்கு ஸ்ரேயஸ் குறித்து சொல்ல வேண்டும். அவர் என் மீது இருந்த அழுத்தத்தை குறைத்தார். அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. அது ஒரு கேம் சேஞ்சிங் இன்னிங்ஸ். இந்திய அணிக்கு தற்போது தேவை எல்லாம், எந்த இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள்தான். ஸ்ரேயஸ் அப்படியான வீரர். அவர் தனது ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

Indian Team with trophy
Indian Team with trophy
AP

போட்டியில் நடுவே மழை பெய்தபோது எங்களுக்கு பதற்றம் இருந்தது. முதல் 10 ஓவர்களில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். டக்வொர்த் லீவிஸ் முறையை கையில் எடுக்கும் போது மிகப்பெரிய இலக்கு வரும் என நினைத்தேன். ஆனால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி கட்டுப்படுத்தினர். இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

``செஞ்சுரி நம்பர் 42!” - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக மாஸ் காட்டிய கோலி

எனக்கு ஏற்பட்ட காயம் பெரிய அளவில் இல்லை. முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முழுமையாக தயாராகி விடுவேன் என நம்புகிறேன். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டம் இருக்கிறது. அது டெஸ்ட் போட்டி ஏற்றாற்போல் வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்” என்றார்.

Kohli
Kohli
AP

இந்திய அணி 2006/07 முதல் தற்போது வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 9 ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளது. இவை அனைத்திலும் இந்திய அணியே தொடரை கைப்பற்றியுள்ளது.