Published:Updated:

`அசுர’ ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் 5 பெஸ்ட் இன்னிங்ஸ்!

Ben Stokes
Ben Stokes ( AP )

ஸ்டோக்ஸின் இந்த இன்னிங்ஸ் 1981–ல் இயன் போத்தம் ஆடிய இன்னிங்ஸிற்கு இணையாகப் பேசப்பட்டது.

பெஞ்சமின் ஆன்ட்ரூ ஸ்டோக்ஸ். தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் மீடியம் பௌலரான இவர், எப்போதெல்லாம் அணி தடுமாறுகிறதோ, அப்போதெல்லாம் பொறுமையாக ஆடி, ஆட்டத்தின் போக்கை மாற்றி, அணியைக் கரை சேர்ப்பதில் கில்லி.

Ben Stokes
Ben Stokes
AP

இரவு விடுதியில் அடிதடியில் ஈடுபட்டது, பிரபல ஆங்கில மாடலான 'கெட்டி பிரைசின்' மாற்றுத்திறனாளி மகனைக் கிண்டல் செய்து பின் மன்னிப்பு கேட்டது என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். அத்தனை விமர்சனங்களுக்கும் தற்போது தனது பேட்டால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார், இந்த ஆல்ரவுண்டர் `அசுரன்’.

தற்போது தன் கிரிக்கெட் வாழ்வின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் பென் ஸ்டோக்ஸின் அசத்தலான ஒன் மேன் ஷோ இன்னிங்ஸ் சில.

135 vs ஆஸ்திரேலியா, ஹெடிங்லி, இரண்டாம் டெஸ்ட், ஆஷஸ், 2019

2019 ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், ஸ்டோக்ஸ் ஆடிய வெற்றிக்கான இன்னிங்ஸிற்குத் தலைசிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் வரிசையில் நிச்சயம் இடமுண்டு. இரு அணிகளின் மானப்பிரச்னையாகக் கருதப்படும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்து, இரண்டாவது டெஸ்ட்டை டிரா செய்து, மூன்றாவது டெஸ்டில் தோல்வியடையும் தருணத்தில் இருந்த இங்கிலாந்தை, ஒற்றை ஆளாக கரை சேர்த்திருக்கிறார் ஸ்டோக்ஸ்.

Ben Stokes
Ben Stokes
AP

முதல் இன்னிங்ஸில் 67 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 359 என்னும் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கியது. மூன்றாம் நாளின் இறுதியில் களமிறங்கிய ஸ்டோக்ஸ் 50 பந்துகள் சந்தித்து வெறும் 2 ரன்களுடன் களத்தில் நின்றார். நான்காம் நாளில் சீரான இடைவெளியில் விக்கெட்விழ, மறுமுனையில் ஸ்டோக்ஸ் நங்கூரம் போட்டார். ஆஸ்திரேலியா பௌலர்கள் ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்த எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

கடைசி ஒரு விக்கெட் மட்டும் இங்கிலாந்திடம் இருந்த நிலையில் வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. டெயிலெண்டர் லீச்சுக்கு அதிக ஸ்ட்ரைக் தராமல், சூழ்நிலையை மிக நேர்த்தியாக கையாண்டார் ஸ்டோக்ஸ். அதுவரை 174 பந்துகள் சந்தித்து 61 ரன்கள் மட்டுமே அடித்த அவர், அடுத்த 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் விளாசி 72 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் ஆஷஸ் கனவை உயிர்பெற வைத்தார்.

ஸ்டோக்ஸின் இந்த இன்னிங்ஸ் 1981–ல் இயன் போத்தம் ஆடிய இன்னிங்ஸிற்கு இணையாகப் பேசப்பட்டது.

84 vs நியூஸிலாந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2019.

1992 உலகக் கோப்பைக்குப் பின், 27 ஆண்டுகள் கழித்து, இந்த முறைதான் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது. இறுதிப்போட்டியில் தான் பிறந்த நாடான நியூசிலாந்தை கடைசி நேரத்தில் ஒற்றை ஆளாக வீழ்த்தி, இங்கிலாந்தின் 44 ஆண்டுக் கால உலகக் கோப்பை கனவை நனவாக்கினார்.

கடந்த உலகக் கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கொண்ட அணி எனக் கருதப்பட்டஇங்கிலாந்திற்கு 242 என்னும் இலக்கை நிர்ணயித்தத்து நியூஸிலாந்து.

Ben Stokes
Ben Stokes
AP

இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து சேஸ் செய்யும் என்ற வேளையில், பேர்ஸ்டோ தவிர முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்த நிலையில் பட்லருடன் ஜோடி சேர்ந்து 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்டோக்ஸ். பட்லர் அவுட்டானதும் `கேம் மாறிவிடுமோ’ என்ற சூழல் இருந்தது. ஆனால், மறுமுனையில் முழு நம்பிக்கையுடன் இருந்தார் ஸ்டோக்ஸ். 81 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அவர், அடுத்த 34 ரன்களை எடுக்க சந்தித்த பந்துகள் 17.

எட்டு விக்கெட் இழந்து கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்கோரை சமனில் முடித்தார் ஸ்டோக்ஸ். சூப்பர் ஓவரிலும் அசத்தலாக ஆடினார். ஒரு வழியாக கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து, `கிரிக்கெட்டின் மெக்கா’ லார்ட்ஸில் உலகக் கோப்பையுடன் நிற்கும் அந்தப் பொன்னான தருணம் அரங்கேறியது.

ஆஷஸின் சாம்பலில் இருந்து இங்கிலாந்தை உயிர்ப்பித்த பென் ஸ்டோக்ஸ்! #Ashes

120 vs ஆஸ்திரேலியா, பெர்த், 2–வது டெஸ்ட், ஆஷஸ் 2013

2011–ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான ஸ்டோக்ஸ், டெஸ்ட் அணியில் தேர்வாக இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டி இருந்தது. ஒருவழியாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2013 ஆஷஸ் தொடருக்கான அணியில் இடம்பெற்ற ஸ்டோக்ஸ், தனது இரண்டாவது போட்டியிலேயே உலகிற்கு தான் யார் எனக் காட்டினார்.

முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து. மூன்றாவது டெஸ்டில் 504 என்னும் இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. அதுவும் வெடிப்புகள் நிறைந்த பெர்த் மைதானத்தில் ஜான்சனின் அசுர வேக பந்துவீச்சை சமாளித்து ஆடுவது, சவாலான விஷயம்.

Ben Stokes
Ben Stokes
AP

121 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழப்பு என்ற நிலையில் பேட் செய்ய வந்த ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் அனைத்து வேகப்புலிகளையும் நேர்த்தியாக எதிர்கொண்டார். அதுவும் மார்பிற்கு மட்டுமே குறிவைத்து வீசும் ஜான்சனின் பந்துகளை நாலாப்பக்கமும் விளாசினார். இறுதியில் 195 பந்துகள் சந்தித்து 120 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தோல்வியடைந்தாலும், ஸ்டோக்ஸின் போராட்டத்திற்கு பெர்த் மைதானமே எழுந்து நின்று பாராட்டியது.

101 vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட், 2015

2015 ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டின், முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் ஆட்டமிழந்து, சதத்தை நழுவ விட்டு, லார்ட்ஸின் `ஹானர் போர்டில்’ இடம்பெறும் வாய்ப்பை இழந்தார் ஸ்டோக்ஸ். ஆனால், அடுத்த இன்னிங்ஸிலேயே அந்த போர்டில் இடம்பிடிக்கும் வகையில் ஒரு இன்னிங்ஸ் ஆடினார்.

நியூசிலாந்தின் அனைத்து பௌலர்களையும் குறிப்பாக டிம் சௌதி இரண்டாவது புது பந்தில் வீசிய 6 ஓவர்களில் மொத்தம் 53 ரன்கள் விளாசினார். 85 பந்துகளில் சதமடித்து லார்ட்ஸ் மைதானத்தில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியில் முதலிடத்தில் இருந்த அசாருதீனை (87 பந்துகளில் சதம்) பின்னுக்குத் தள்ளினார்.

Ben Stokes
Ben Stokes
AP

பேட்டிங்கில் மட்டுமன்றி 345 என்னும் இலக்கை துரத்திய நியூசிலாந்தின் வில்லியம்சன், மெக்கலம் உட்பட மிக முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுமார் 124 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் பென் ஸ்டோக்ஸ்

258 vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி, 2016

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் விளாசிய 258 ரன்கள், அவரது சாதனைகளில் முக்கியமான ஒன்று. சுமார் 140 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டோக்ஸ் அன்று உலகிலேயே அதிவேகமாக,196 பந்துகளில் 250 ரன்கள் அடித்ததை `கிரிக்கெட்டின் பைபிள்’ விஸ்டன், `murderous assault’ என வர்ணித்தது. இந்த இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் அடித்தது 11 சிக்ஸர்கள்.

Ben Stokes
Ben Stokes
AP

2017 ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸிற்கு எதிராக அவர் அடித்த 103 ரன்கள் தொடங்கி, நீண்டுகொண்டே போகும் இந்தப் பட்டியலில், கடந்த உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற ஸ்டோக்ஸ் ஆடிய இன்னிங்ஸ் வேற லெவல். அன்று பென் ஸ்டோக்ஸ் போராடிய விதம் நம்மை மெய் சிலிர்க்கவைக்கும். இறுதியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தாலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை போராட்டத்துக்கான உதாரணமாக அதை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு