Published:Updated:

``தோனிக்கும் அது நிகழும்; இந்திய கிரிக்கெட் இதை உணர வேண்டும்!” - கங்குலி ஓப்பன் டாக்

டெண்டுல்கர், லாரா, பிராட்மேன்... எல்லோரும் ஒருநாள் தங்களின் விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ளதான் வேண்டும்.

MS Dhoni
MS Dhoni

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்ததும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து தானாக முன்வந்து விலகி ராணுவ பயிற்சி மேற்கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. சுமார் 20 நாள்கள் காஷ்மீரில் ராணுவ முகாமில் தங்கி அவர்களுடன் பணியாற்றினார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அதிக விமர்சிக்கப்பட்ட வீரர் என்றே தோனியை சொல்லலாம். அவரது ஸ்லோ ஸ்டிரைக் ரேட், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் கேள்வியாக எழுப்பப்பட்டன.

dhoni
dhoni

தோனி ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது எனப் பலரும் சொல்ல, அமைதி காத்து வந்தார் 38 வயதான தோனி. அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தியா டுடே ஊடகத்துக்கு விரிவாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார். அவர் தனது பேட்டியில், தோனி நீண்ட காலத்துக்கு அணியில் இருக்க மாட்டார் என்ற உண்மையை இந்திய அணி உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கங்குலி, ``தோனி இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்க மாட்டார் என்ற உண்மையை இந்திய கிரிக்கெட் அணி உணர்ந்துகொள்ள வேண்டும். காரணம் அவரால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம். ஆனால், அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும்.

Ganguly - Dhoni
Ganguly - Dhoni

எல்லா பெரிய வீரரும் ஒரு நாள் ஓய்வு பெற்றுதான் ஆக வேண்டும். இது விளையாட்டு. கால்பந்து விளையாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். மரடோனாவும் ஒருநாள் தனது ஓய்வை அறிவிக்கத்தான் செய்தார். கால்பந்தில் அவரைவிட வேறு பெரிய வீரர் கிடையாது. கிரிக்கெட்டிலும் டெண்டுல்கர், லாரா, பிராட்மேன்... எல்லோரும் ஒருநாள் தங்களின் விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும். இந்த சிஸ்டம் இப்படித்தான் இயங்கும். இதுதான் தோனிக்கு நிகழும்.

தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில், தான் எங்கு இருக்கிறோம் என மதிப்பீடு செய்யும் கட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். தன்னால் இனி இந்திய அணியை வெற்றிபெற வைக்க முடியுமா என்பதை அவர் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். `தோனி’யை போன்றே அவரால் தொடர்ந்து செயலாற்ற முடிந்தால் அந்த இடத்துக்கு மாற்றாக யாரும் வர முடியாது.

Dhoni - Kohli
Dhoni - Kohli

தோனி, கோலி, டெண்டுல்கர் போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் வரை அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர்கள் எப்போதும் போல் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என எதிர்பார்பார்கள். எனினும் தோனி மட்டுமே இதில் முடிவெடுக்க தகுதியானவர். காரணம் தன்னிடம் இன்னும் எத்தனை சக்தி இருக்கிறது என்பதை அவர் ஒருவரே அறிவார்” என்றார்