Published:Updated:

ஆஸ்திரேலிய டெஸ்ட் என்றால் லட்சுமணன் இல்லாமலா... வெறிபிடிக்கவைத்த விவிஎஸ் ஸ்பெஷல்கள்! #AUSvIND

நாடாளும் நேரத்தில் காடாளச் சென்ற ராமனுடன் தன்னலமின்றி உடன் சென்றும் புகழப்படாத லட்சுமணனைப்போல, இந்தியக் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த லட்சுமணன்தான், விவிஎஸ் லட்சுமணன்!

இந்தியாவின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆச்சர்யங்களை விவிஎஸ் லட்சுமணன் இல்லாமல் நிறைவுசெய்யமுடியாது. சரித்திரம் சொல்ல மறந்த கதையாக, வெளிச்சம் படாமல், விளக்கின் அடியிலுள்ள இருட்டுக்குள் ஒளிந்துகொண்டன இவரது பல இன்னிங்ஸ்கள். அவற்றில் சில இங்கே!

2000, சிட்னி!

இத்தொடரில், இதற்கு முந்தைய இரு போட்டிகளை அடிலெய்டிலும், மெல்போர்னிலும் இந்தியா பரிதாபமாய்ப் பறி கொடுத்திருந்தது. கௌரவத் தோல்வியைப் பதிவு செய்வதற்காக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா வெறும் 150-க்கு ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியாவோ 552 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதி, இந்தியா விளையாடுவதே வெறும் சம்பிரதாயத்துக்காகத்தான் என்கிற நிலைமை. "வர வேண்டியது, வரிசையாய் ஆட்டமிழந்து பெவிலியன் சென்று போட்டியை விரைவில் முடிக்க வேண்டியது, இதுதான் எங்களுக்கான டாஸ்க்!" என்பதைப்போல கங்குலி தவிர அத்தனை பேரும் ஒற்றை இலக்கங்களோடு ஆட்டமிழக்க, தனியாளாய் நின்று ஆட்டம் காட்டினார் லட்சுமணன்.

ஓப்பனராக இறங்கிய அவர், உள்ளுக்குள் சாமி இறங்கியதைப்போல ஆடினார் அன்று! 11/0 என்ற ஸ்கோர் போர்டு காட்டிய போது, மெக்ராத் வீசிய ஒரு பவுன்சர் அவரைத் தாக்க நிலைகுலைந்து போனார்! ஆனால் அந்தத் தருணம்தான் அவருக்குள் இருந்த ஓர் அற்புத பேட்ஸ்மேனைத் தட்டி எழுப்பியது. இழக்க எதுவுமே இல்லாத போது வருமே ஒரு தைரியம், அது அவரைத் தொற்றிக் கொண்டது!

"எதிராளி யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்... நான் நிற்கும் நிலை எவ்வளவு தாழ்வானதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... இன்றைய நாள், என்னை, எனக்கே நான் நிருபிக்கக் கிடைத்த வாய்ப்பு" என்று விளையாடினார் லட்சுமணன். மெக்ரத்தின் அடுத்த பவுன்சர் பவுண்டரிக்குப் பறந்தது. கட், புல், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவிதை போன்ற அவரது முத்திரை ஷாட்டான ஃபிளிக் ஷாட் என வரிசையாய் அவரின் பேட்டில் இருந்து வந்து கொண்டே இருந்தது. மறுபுறமோ வரிசையாய் விக்கெட்டுகள் விழ, ஆஸ்திரேலியர்களால், லட்சுமணனின் விக்கெட்டையோ அவரது வைராக்கியத்தையோ வீழ்த்தவே முடியவில்லை. வாய்ப்பே இல்லை எனத் தெரிந்திருந்தும், இக்கட்டில் இருந்து இந்தியாவை மீட்கப் போராடிய அவரது ஆக்ரோஷமான மனநிலை கண்டு மொத்த அரங்கமும் அதிர்ந்து போய் நின்றது.

விவிஎஸ் லட்சுமணன்
விவிஎஸ் லட்சுமணன்

ஒவ்வொரு கிளாசிக்கல் ஷாட்டுக்கும் கைதட்டு பறந்தது, ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் இருந்தும்! பல்லாங்குழி விளையாடுவதைப் போல ஃபீல்டர்களை உருட்டி விளையாடினார் ஸ்டீவ் வாக். ஆனால் வெறும் 114 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை, அதுவும் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக அவர்கள் மண்ணிலேயே எட்டினார் விவிஎஸ். இறுதியில் 198 பந்துகளில் 167 ரன்களை விளாசி இவர் ஆட்டமிழந்த போது, சோர்வாகிப் போன ஸ்டீவின் பாசறை இவரது அயராத மன உறுதி கண்டு பிரமித்து நிற்க, ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது. 'ஒரு நாயகன் உதயமாகிறான்' என கமன்டேட்டர்கள் கொண்டாடினாலும், இந்தியாவின் இன்னிங்ஸ் தோல்வியினால், அது இருட்டடிப்பு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2003/04 அடிலெய்டு மற்றும் சிட்னி!

2003/2004 இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு தொடர். இதைப் பற்றிய நீண்ட நெடிய விவரிப்பு தேவையற்றது. ஏனெனில் உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை இன்னுமொரு உயரத்திற்கு எடுத்துச் சென்ற தொடர் இது என்பதால் இந்தத் தொடர் பற்றிய தகவல்கள் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் அத்துப்படி. 'டிராவிட்டின் விஸ்வரூபத்தால், அடிலெய்டை ஆக்ரமித்தது இந்தியா', 'சச்சின் இஸ் பேக்', 'சிட்னியில் சாதித்தது இந்தியா' என நாளேடுகளின் தலைப்புச் செய்திகள் எல்லாம் இந்த நாயகர்களின் புகழ் பாடின. இந்த இரு போட்டிகளிலும் அவர்கள் இருவரும்தான் 'சூப்பர் ஸ்டார்'கள் என்றாலும், இந்த இரண்டு போட்டிகளிலும் பாடப்படாத பங்காளனாய் இருந்தவர் லட்சுமணன்.

விவிஎஸ் லட்சுமணன் - டிராவிட்
விவிஎஸ் லட்சுமணன் - டிராவிட்

அடிலெய்டில் அணியின் ஸ்கோர் 85/4 என்று இருந்த போது டிராவிட்டுடன் கைகோர்த்தவர், அங்கிருந்து ஸ்கோர் 388-க்குச் செல்லும் வரை நிலைத்து நின்று நங்கூரம் பாய்ச்சி, அணியைக் கரை சேர்த்தார். கொல்கத்தாவில் நடந்ததைப் போலவே, இன்னுமொரு நாள், இன்னுமொரு 300+ ரன்கள் என ஜொலித்த இந்தக் கூட்டணியால்தான், இந்திய அணியால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய முடிந்தது.

அடுத்ததாய் அதே தொடரில், சச்சினின் சரவெடியால், போட்டியையும் மற்றும் தொடரையும், ஒருங்கே இந்தியா சமன் செய்த சிட்னி போட்டி. சுனாமியின் சீற்றத்தின் முன் நீர்ப்பரப்பின் அதிர்வு காணாமல் போவதைப் போல, சச்சினின் 241 ரன்களுக்கு முன் லட்சுமணனின் 178 ரன்கள் பெரிதாகப் பேசப்படவில்லை!

"15 நிமிடங்களில் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்துங்கள். இல்லையென்றால்..." - மாவீரனின் கதை! #AUSvIND

பத்திரிகைளில் முதல் பக்கச் செய்தியாக இருக்க வேண்டியவர், வெறும் பத்திச் செய்தியாக முடிந்து போனார். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஓரங்கட்டுதல் இல்லையெனினும், அந்த இரண்டு ஆளுமைகளின் முன், இவரது ஆட்டம், சூரிய ஒளியில் டார்ச் அடிப்பது போல் ஆனது. ஆனால், உண்மையில் இந்த இரண்டு போட்டியிலுமே, இவரது ஆட்டத்தைக் கழித்துப் பார்த்தோமேயானால், இந்தியா தோல்வியை முத்தமிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை. இதே இரண்டு இன்னிங்ஸ்களை அவர் வேறு இரு போட்டிகளில் ஆடி இருந்தால், அது காலத்திற்கும் பேசப்பட்டிருக்கும் என அவரது ரசிகர்கள் எத்தனையோ முறை ஆதங்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும், இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், சற்றும் சுயநலமின்றி அணிக்காக தன்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்ட அவரது தன்னலமற்ற வைர நெஞ்சம்தான் ஆச்சர்யத்துக்குரியது!

விவிஎஸ் லட்சுமணன்
விவிஎஸ் லட்சுமணன்

இந்தத் தொடரில், இந்தியாவின் சார்பில் இரண்டாவது அதிகபட்சமான 494 ரன்களை அவர் குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2008, பெர்த்!

சிட்னியில் நடைபெற்ற மங்கிகேட் சச்சரவைத் தொடர்ந்து, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். சின்ன உரசல்களைக்கூட பரபரப்பு பட்டாஸாய் பத்திரிகைகள் மாற்றிக் கொண்டிருந்த தருணம். தோல்வியின் கோரப்பல்லில் சிக்கி, சின்னாபின்னமாகி, ஆஸ்திரேலிய ஊடகங்களின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாக வேண்டிய இந்தியாவை, கடைசி நேர மாயம் செய்து லட்சுமணன் கரை சேர்த்த போட்டி அது! ஏனெனில் இந்தப் போட்டியிலும் தோற்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு அது நினைக்கவே வலி தரும் தொடராய், அமைந்திருக்கும்.

436 பந்துகள், 10 மணி நேர ஆட்டம், சச்சினின் 241 ரன்களில் ஒரு கவர் டிரைவ் கூட இல்லை... ஏன்?! #Sachin

போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முறையே 330 மற்றும் 212 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 118 ரன்கள் லீடுடன் இந்தியா வேகமெடுக்க, இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பார்ப்பு மிக்கதாய் மாறியது. அசராமல் அடிக்கப் போகிறது இந்தியா என கனவு கண்ட இந்திய ரசிகர்கள் கண்கள் கலங்குமாறு விக்கெட்டுகள் வரிசையாய் விழ, ஆஸ்திரேலியாவை நடுங்கச் செய்ய ஒரு பெரிய இலக்கு தேவையானது. அதை இந்தியாவால் நிர்ணயிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயமெழுந்த கட்டத்தில் கங்குலியின் விக்கெட்டும் விழ, அணியின் ஸ்கோர் 125/5 என்று இக்கட்டில் இருக்கும் போது களமிறங்கினார் லட்சுமணன். அதன் பிறகு சவால்களை எதிர்கொண்டு அவர் ஏற்படுத்திய முக்கியமான பார்னர்ஷிப்கள்தான், கண்ணாடி பிம்பமாய், போட்டியையே 180 டிகிரிக்குப் புரட்டிப் போட்டன!

தோனி, பதான், ஆர்பி சிங் என அத்தனை பேரும் தங்களது ஆட்டத்தால் வலு சேர்த்தாலும், 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையிலும், வெகு நிதானமாக போட்டியைத் திரும்பவும் இந்தியக் கூடாரத்துக்குள் கூட்டிக்கொண்டு வந்து உட்கார வைத்தவர் லட்சுமணன்தான். கடைசி இரண்டு விக்கெட்டுகளுடன் இவர் போட்ட 59 ரன் பார்ட்னர்ஷிப்தான், 413 என்ற இலக்கை இந்தியா நிர்ணயிக்கவும், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவும் மிக முக்கியக் காரணமாய் அமைந்திருந்தன.

விவிஎஸ் லட்சுமணன்
விவிஎஸ் லட்சுமணன்
"கோபம் என்ன ஆஸ்திரேலியாவின் அப்பன் வீட்டு சொத்தா?"- ஆஃப்சைட் ஆண்டவரின் மாஸ் மொமன்ட்! #AUSvIND

கொல்காத்தாவில் ஆஸ்திரேலிய அணிக்குக் காட்டிய சுயரூபத்தை, இங்கே மொத்த ஆஸ்திரேலியர்களையும் மூச்சடைக்கச் செய்யும் விஸ்வரூபமாய் வெளிப்படுத்தித் காட்டினார் லட்சுமணன். 2/1 என தொடரை ஆஸ்திரேலியா வென்றிருந்தாலும், கும்ப்ளே தலைமையிலான பெர்த் வெற்றி, பெர்க் சாக்லேட்டாய் இந்திய ரசிகர்களுக்கு எப்பொழுதும் இனிப்பான நினைவாகும்!

இங்கே கொண்டாடத் தவறிய கதாநாயகர்கள் எத்தனை எத்தனையோ பேர்தானே?! நாடாளும் நேரத்தில் காடாளச் சென்ற ராமனுடன் தன்னலமின்றி உடன் சென்றும் புகழப்படாத லட்சுமணனைப்போல, இந்தியக் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த லட்சுமணன்தான், விவிஎஸ் லட்சுமணன்! சச்சின், டிராவிட், கங்குலி அளவுக்கு இவர் புகழின் முகடுகளை முத்தமிடா விட்டாலும், இந்தியக் கிரிக்கெட்டும், இவரிடம் உதைபட்ட எதிரணி கேப்டன் மற்றும் பெளலர்களும் இவரை என்றும் மறக்க மாட்டார்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு